Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday, 28 January 2014

மன்னனின் குரங்கு



லட்சுமிபுரத்தில் நந்தன் என்ற குரங்காட்டி வசித்து வந்தான். அவனிடம் ஓர் ஆண்குரங்கும், பெண் குரங்கும் இருந்தன. லட்சுமிபுரமும், அதன் சுற்று வட்டார கிராமங்களும் மருங்காபூரி ஜமீன்தாரின் ஆதிக்கத்தில் இருந்தன. நந்தன் தினமும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு, ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வந்து தன் குரங்குகளை வைத்து வேடிக்கைக் காட்டுவான்.
பிறகு, இரண்டு குரங்குகளும் கையில் தட்டை ஏந்திக் கொண்டு மக்களிடையே சுற்றி சாடையாகக் காசு கேட்க, அவர்களும் சில்லறைகளைப் போட்டு அனுப்புவார்கள். அந்த வருமானத்தைக் கொண்டு நந்தனும், அவன் மனைவியும் வயிற்றுப் பிழைப்பைச் சமாளித்து வந்தனர். எப்படியாவது தன் குரங்குகளை மருங்காபுரி ஜமீன்தாரின் முன் வித்தை செய்வித்து அவர் மனத்தைக் கவர்ந்து அவரிடம் விவசாயம் செய்யத் தனக்கு ஒரு சிறிய நிலம் பெற்று விட வேண்டுமென்றும் நந்தன் நேடுநாளாகக் கனவு கண்டு கொண்டிருந்தான்.
ஒருநாள் கங்கைபுரத்தில் குரங்கு வித்தைக்காட்டிக் கொண்டிருக்கையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், நந்தன் தன் மனைவி மற்றும் குரங்குகளுடன் அருகிலுள்ள அனுமார் கோயிலுக்குள் புகுந்தான். அவர்களைக் கண்டதும் அனுமார் கோயில் அர்ச்சகருக்கு எரிச்சல் உண்டாயிற்று.
"உன் குரங்குகள் கோயிலை அசுத்தம் செய்து விடும்! நீ அவற்றை அழைத்துக் கொண்டு வேறு எங்காவது செல்!" என்று அவர் அதட்ட, "தயவு பண்ணுங்கள் ஐயா! கொட்டும் மழையில் நான் வேறு எங்கே போவேன்?" என்று நந்தன் கெஞ்சிக் கொண்டிருக்கையில் சற்றும் எதிர்பாராமல் பெண் குரங்கு அர்ச்சகர் முன் சென்று தன் வயிறைத் தொட்டுக் காட்டிவிட்டு, கீழே விழுந்து அவரை வணங்கியது.

பெண் குரங்கை உற்று நோக்கிய அர்ச்சகர் வியப்புடன், "ஆகா! இந்தப் பெண் குரங்கு கர்ப்பமாக உள்ளது என்பதையே என்னிடம் சுட்டிக் காட்டியது. இத்தகைய அறிவாளியான குரங்கை, அதுவும் அனுமாரின் பிரதிநிதியை இந்த நிலையில் தங்க விடாமல் விரட்டுவது பாவம்!" என்றவர் நந்தனை நோக்கி, "பிரசவம் ஆகும் வரை நீ இங்கேயே தங்கு!" என்று அனுமதி கொடுத்தார்.
சில மணி நேரங்களிலேயே, பெண் குரங்கு ஓர் ஆண் குட்டியை ஈன்றது. உடனே, தகப்பன் குரங்கு அர்ச்சகரைச் சென்று வணங்கி, சைகையில் ஏதோ கேட்டது. நந்தனின் மனைவி, "அர்ச்சகரே! தாங்கள் இடம் கொடுத்ததற்கு நன்றி கூறுகிறது. மேலும், தன் பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றி உங்களிடம் ஆருடம் கேட்கிறது" என்றாள்.
"நான் மனிதர்களுக்குத்தான் ஆரூடம் சொல்வது வழக்கம்!" என்றவர், பிறகு ஒரு தாளில் குட்டி பிறந்த நேரத்தை எழுதி, ஏதோக் கணக்குப் போட்டார். பிறகு, நந்தனை நோக்கி, "இப்போது பிறந்துள்ள ஆண் குட்டி மற்ற குரங்குகளை விட இது அபாரமாக வித்தை காட்டும். ஆனால், ராஜ வமிசத்தினரைத் தவிர, மற்றவர்களின் காணிக்கையை இது ஏற்காது!" என்றார். "ஆகா! என் கனவு பலிக்கும் நாள் வந்து விட்டது!" என்று குதூகலித்த நந்தன், பிறகு அர்ச்சகருக்கு நன்றி தெரிவித்து, விடைப் பெற்றுக் கொண்டான்.
ஒரே ஆண்டில் பல அபாரமான வித்தைகளைக் கற்றுக் கொண்ட குட்டிக்குரங்கு சென்ற இடமெல்லாம் காண்பவர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது. ஆனால் அர்ச்சகர் கணித்தப்படியே, அவர்கள் தரும் காணிக்கைகளை அது ஏற்க மறுத்து வந்தது. அதையே ஒரு பெரிய வியப்பான விஷயமாக எடுத்துக் கொண்டு, பொதுமக்கள் அந்தக் குரங்கை மிகவும் போற்றிப் புகழ்ந்து விட்டு, சில்லறைகளை அவற்றின் பெற்றோரிடமே கொடுத்தனர்.
 காண வந்தவர்களிடமெல்லாம் நந்தன் அதன் பெருமையை எடுத்துக் கூறி, ‘ராஜ வமிசத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே இது காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்" என்று கூறுவான். இதனால் மக்கள் அதைச் செல்லமாக மன்னனின் குரங்கு என்று அழைத்தனர் இவ்வாறு, குட்டிக்குரங்கின் பெயரும், புகழும் எல்லா கிராமங்களிலும் பரவி, இறுதியாக மருங்காபுரி ஜமீன்தாரின் காதுகளையும் எட்டியது. அதை ஜமீன்தார் ரசிக்கவில்லை. ஆகையால் தன் திவானை அனுப்பி விசாரித்து வரும்படி கூறினார்.
முழு விவரங்களுமறிந்த பின் திவான் ஜமீன்தாரிடம் வந்து, "ஐயா! ராஜ வமிசத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே அந்தக் குரங்கு அது பணத்தை ஏற்குமாம்! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நமது ஜமீனுக்கு அந்தக் குரங்காட்டியை அழைத்து, குரங்கை வித்தைகள் காட்டச் சொல்வோம். நீங்கள் மாறுவேடமணிந்து வாருங்கள்! கடைசியில் எல்லாரும் காசு கொடுக்கும்போது நீங்களும் அதற்கு கொடுங்கள்!

அது உங்களிடம் மட்டுமே பெற்றுக் கொண்டால் நீங்கள் ராஜ வமிசத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் புரிந்து கொள்வர். அப்படி நடந்தால், அவனுக்கு ஏதாவது பரிசு கொடுங்கள்!" என்று கூறியவுடன், ஜமீன்தாருக்கே அந்தக் குரங்கைக் காண ஆர்வம் ஏற்பட்டது. உடனே, அவர் அதற்கான ஏற்பாடைச் செய்தார். செய்தி கேட்டு, நந்தனுக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவன் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது.
ஜமீன் மைதானத்தில் பெருந்திரள் கூட, நந்தன் குட்டிக் குரங்கை வித்தைகள் காட்டச் செய்தான். ஆனால், அவனுக்குப் பெருத்த அதிர்ச்சியைத் தந்தது அன்றைய நிகழ்ச்சியைக் காண ஜமீன்தார் வராததுதான்! தன்னுடைய மனக் கோட்டைகள் இவ்வாறு இடிந்து போகும் என்று நினைக்காத நந்தன் அவ்வளவாக ஆர்வமின்றி, அன்றைய நிகழ்ச்சிகளை குட்டிக் குரங்கின் மூலம் ஓர் இயந்திரம் போல் செய்வித்தான்.
நிகழ்ச்சி முடிந்ததும், எல்லாரும் குட்டிக்குரங்கை சோதிக்க சில்லறைகளைத் தந்த போது, வழக்கப்படி அது யாரிடமும் ஏற்க மறுத்து விட்டது. கடைசியில் பெரிய தலைப்பாகை அணிந்த, ஆஜானுபாகுவான ஓர் அயலூர் ஆசாமி ரூபாய் நோட்டுகள் தர, அதை ஆவலுடன் பெற்றுக் கொண்டு அவருக்கு வணக்கமும் தெரிவித்தது.
"ஆ!" என்று வியப்புடன் கூவிய அந்த ஆள், தன் வேடத்தைக் கலைக்க, அதுதான் மாறுவேடத்திலிருந்து ஜமீன்தார் என்று அனைவருக்கும் தெரிந்தது. ஜமீன்தார் கூடியிருந்த மக்களைப் பார்த்து, "இன்று நடந்த நிகழ்ச்சியிலிருந்து, மிருகங்களின் அறிவாற்றலைக் கண்கூடாகக் காண நேர்ந்தது. எத்தனை சிறிய குட்டிக் குரங்கு எத்தனை அற்புதமாக வித்தைகள் செய்தது? அது மட்டுமல்ல! மிருகங்களுக்கும் நம்மைப் போல் சில அபூர்வ சக்திகள் உண்டென்று அறிந்தேன். இதற்குப் போய் ஏன் இந்தப் பெயர் என்று நான் முதலில் எண்ணினேன்.
இப்போது அந்தப் பெயர் பொருத்தமானது என்று உணர்கிறேன். இத்தகைய மிருகங்களைப் பாதுகாப்பது என் கடமை! ஆகவே, விரைவிலேயே மிருகங்களின் சரணாலயம் ஒன்று தொடங்கப் போகிறேன். மன்னனின் குரங்கு அவற்றின் தலைவனாக இருக்கும்.
இறுதியாக, குட்டிக்குரங்கிற்கு வித்தைகள் கற்பித்த நந்தனுக்கு ஒரு காணி நிலம் தானமாக வழங்கப் போகிறேன்!" என்று கூறி முடிக்க, கூடியிருந்தவர்கள் கை தட்டினர். தான் கேட்காமலே தனக்கு நிலம் தானமாகக் கிடைத்தை எண்ணி நந்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

No comments:

Post a Comment