Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Showing posts with label stories. Show all posts
Showing posts with label stories. Show all posts

Monday, 3 February 2014

யுத்த காண்டம் - 6

இராவணனை திணறடித்த சுக்ரீவன்


நீலன் கிழக்கு வாசலில் பிரகஸ்தனை எதிர்ப்பதெனவும், அங்கதன் தெற்கு வாசலிலுள்ள மகாபாச்சுவனையும், மகோதரனையும் எதிர்ப்பதெனவும், அனுமார் மேற்கு வாசலுக்கும், இராமபிரானும் இலட்சுமணரும், இராவணன், சுகனோடும் சாரணனோடும் காவல் புரியும் வடக்கு வாசலுக்கு படைகளோடு செல்வது என முடிவு செய்யப்பட்டது. 

நகரத்தில் உள்ளே உள்ளவர்களைத் தாக்க சுக்கிரீவனும், ஜாம்பவந்தனும் விபீஷணனும் செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. போரின் போது இராமர், இலட்சுமணர், நீலன், அங்கதன், அனுமார், சுக்கிரீவன், விபீஷணன் ஆகியவர்களைத் தவிர வேறு யாரும் மானிட உருவம் எடுக்கக் கூடாது எனவும், மற்றவர்களெல்லாம் தத்தம் உண்மை உருவிலேயே இருக்க வேண்டுமெனவும் இந்த நியமத்தை மீறக்கூடாதெனவும் இராமர் கூறினார். 

இராமர் சுவேளை என்னும் மலை மீது ஏறினார். அவர் பின்னால் இலட்சுமணன், சுக்கிரீவன் முதலிய வானரப் பிரமுகர்களும் சென்றனர். அங்கிருந்து யாவரும் இலங்கைப் பட்டணத்தைப் பார்த்தனர். எங்கும் அரக்கர்கள் ஆயுதங்களை வைத்துக் கொண்டு போருக்குத் தயாராக நின்று கொண்டிருப்பதைக் கண்டனர். அச்சமயம் மாலை மறைந்து நிறை மதியும் உதயமாகியது. இராமரும் மற்றவர்களும் அன்றைய இரவுப் பொழுதை அங்கேயே கழித்தனர்.

மறுநாள் காலை இராமர் தாம் தங்கி இருந்த இடத்திலிருந்தே நன்றாக இலங்கையைக் கண்டார். மிகவும் அழகாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்நகரைக் கண்டு ஆச்சரியப்பட்டு நின்றார். அதே சமயம் இராவணன் அவனது நகரில் அங்கும் இங்குமாக செல்வதையும் கண்டார். இராமரோடு, சுக்கிரீவனும் மற்றவர்களும் இராவணனைப் பார்த்தனர். உடனே சுக்கிரவனுக்குக் கடும் கோபமும், ஆத்திரமும் வந்து விட்டது. ஒரே எழும்பில் அவன் ஆகாயத்தில் சென்று இராவணன் இருக்கும் இடத்தை அடைந்து, அவனது தலையிலுள்ள கிரீடத்தைத் தன் காலால் உதைத்துத் தள்ளினான்.

உடனே இராவணன் சுக்கிரீவனைப் பிடித்துத் தள்ளவே அவன் பந்து போலத் துள்ளிஎழுந்து இராவணனையே கீழே தள்ளி செயலற்றுப் போகச் செய்தான். பின்னர் அவன்சிறிதும் தாமதிக்காமல் ஆகாயத்தில் கிளம்பி தன் இருப்பிடத்தை அடைந்தான்.

 அப்போது இராமர், “சுக்கிரீவா, நன்றாகச் செய்தாய் ஆனாலும் நீ ஒரு அரசனாக இருந்து இப்படி அவசரப்படக்கூடாது. உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன ஆவது?” எனக் கூறினார். அதற்கு சுக்கிரீவன், “சீதையைக் கவர்ந்த அதமனைக் கண்டதுமே என் ஆத்திரம் பொங்கியது. அதனைச் சட்டென என்னால் அடக்க முடியவில்லை” எனக் கூறினான்.

அதன்பிறகு வானரப்படைகளோடு யாவரும் இலங்கைப் பட்டணத்தை நோக்கிப் புறப்பட்டனர். திரிகூட மலைமீதிருக்கும் அந்நகரை அவர்கள் முற்றுகையிட்டனர். முன்பு திட்டமிட்டபடி அவர்கள் ஒவ்வொரு வாசலையும் தாக்கலாயினர்.

அப்போது இராமர் அங்கதனிடம் “நீ சற்றும் மனத்தில் பயமில்லாது இலங்கைக்குள் செல். இராவணனிடம் நான் சொன்னதாக இதைச் சொல். இராவணா, சீதையை நீ அபகரித்தாய், அதனால் உனக்கு நான் எமன் போல வந்திருக்கிறேன். நீ மட்டும் சீதையை என்னிடம் ஒப்படைத்து விட்டால் இந்தப்போரே மூளாது. இல்லாவிட்டால் உன் பலத்தைக் கொண்டு என் தாக்குதலை சமாளி.

உன் அரக்கர் குலமும் அடியோடு அழியத்தான் போகிறது. நீயும் என்பாணத்திற்கு இரையாவாய். இந்தச் செய்தியை நீ சொல்லி வா” எனக்கூறி அவனைஅனுப்பினார். அங்கதனும், இராமரின் தூதனாக இராணவனன் தன் மந்திரிகளோடுஆலோசனை செய்து கொண்டு இருக்கும்போது அவன் முன் போய் நின்றான். அவன்இராவணனிடம் தான் இராமனின் தூதன் எனக்கூறி இராமர் சொல்லி அனுப்பியசெய்தியையும் கூறினான்.

அதைக்கேட்ட இராவணன் கோபம் அடைந்து, “இவனைப் பிடித்துக் கொல்லுங்கள்”என்று கட்டளை இட்டான். அவனைப் பிடிக்க நான்கு அரக்கர்கள் ஒடி வந்தனர்.அங்கதனோ அவர்களைத் தன் கைகளுக்கிடையே இடுக்கிக்கொண்டு உயரக் கிளம்பிச்சென்றான். அவன் ஆகாயத்தில் மிக உயரத்தில் போய் தான் இடுக்கிக் கொண்டுவந்த நால்வரையும் கீழே போட்டான். அவர்கள் தொப்பெனக் கீழே விழுந்தனர்.இதே சமயம் அங்கதனின் கண்களில் இராவணனது மாளிகையில் கோபுரம் பட்டுவிட்டது. அவன் அதனைத் தன் காலால் உதைக்க அது சரிந்து விழுந்தது. அவன்யாரென்று யாவரும் கேட்க உரக்கக் கூறி, அங்கிருந்து இராமர் இருக்கும்இடத்தை அடைந்தான்.

யுத்த காண்டம் - 5

இராவணனை முற்றுகையிட்ட வானரப் படைகள்



இராவணன் அசோகவனத்தை அடைந்தபோது, சீதை இராமரை நினைத்தவாறே தலை குனிந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவளைச் சுற்றிலும் அரக்கிகள் இருந்தனர். இராவணன் சீதையிடம் “நீ இராமனைப்பற்றி பெருமையாக எண்ணிக் கொண்டிருந்தாயே. இதோ பார். அவனது தலையை என் சேனாதிபதிகளில் ஒருவனான பிரகஸ்தன் வெட்டிக் கொண்டு வந்துவிட்டான். பெருத்த வானர சேனையோடு ஆர்ப்பாட்டத்தோடு வந்த இராமனின் கதியைப் பார்த்தாயா? இப்போதாவது என் சக்தியைத் தெரிந்து கொள். இனிமேல் அந்த இராமனைப் பற்றி எண்ணுவதில் பயனில்லை. இனி நீ என்னை மணந்து கொள்ள வேண்டியதுதான்” எனக் கூறி சிரித்தான்.

மறுவினாடியே ஒரு அரக்கியிடம், “நீ போய் வித்யுத்ஜிவனிடம் இராமனின் தலையை இங்கே எடுத்துவரச் சொல்” என்றான். சற்று நேரத்திற்கெல்லாம் இராவணனின் முன் அவன் ஒரு துண்டிக்கப்பட்ட தலையையும், வில்லையும், சில அம்புகளையும் வைத்து விட்டுப் போனான். அந்தத் தலை இராமருடையதுபோல இருந்தது. சீதை அதைக் கண்டு இராமர் இறந்துவிட்டாரென எண்ணிக் கண்ணீர் வடிக்கலானாள். அவள் தன்னையே நொந்துகொண்டாள். கதறி அழுதாள். தன் தலையும் இராமரது தலையைப் போலத் துண்டித்துவிடும்படி இராவணனிடம் அவள் கெஞ்சிக் கேட்கலானாள்.

இதே சமயம் ஓர் ஆள் அங்கு வந்து பிரகஸ்தன் முதலியவர்கள் தர்பாரில் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறவே, உடனே இராவணன் அந்த இடத்தை விட்டுச் சென்றான். அவன் சென்றதுமே அங்கிருந்த தலையும், வில்லும் அம்புகளும் மாயமாய் மறைந்தன.

அப்போது விபீஷணனின் மனைவியான சரமா சீதையருகே வந்து “இராமர் இலங்கையில் தென் கரையில் இறங்கிவிட்டார். இந்த விஷயம் கேட்டு இராவணன் மந்திரிகளோடு இப்போது ஆலோசனை செய்து கொண்டு இருக்கிறான் . இங்கே நீங்கள் பார்த்தது உங்கள் கணவர் இராமரின் தலையல்ல. இது இராவணனது மாய வேலையாகும். அவன் போனதுமே எல்லாம் மறைந்து விட்டது பார்த்தீர்களா? இவனது இந்த மாயாஜாலத்தை நம்ப வேண்டாம்” என்றாள்.

இராவணனும் தன் படைத்தலைவர்களிடம், “வீரர்களை எல்லாம் ஒன்று திரட்டுங்கள்” என்றான். வீரர்களும் தெருக்களில் ஆரவாரம் செய்தவாறே சென்றனர். அதை சரமா சீதைக்குக் காட்டி “இனிமேல்தான் இராவணன் இராமரோடு போர் புரியப் போகிறான்” எனக் கூறினாள். அப்போதுதான் சீதை இராவணன் தன்னை ஏமாற்ற முயன்றானென நம்பினாள்.

அப்போது சரமா “நான் இப்போதே போய் இராமரைப் பார்த்து நீங்கள் நலமாக இருப்பதாகக் கூறி வருகிறேன். இந்த இராவணனுக்கு அவனது தாயும் அவித்தன் என்ற முதிய மந்திரியும் எவ்வளவோ புத்திமதி கூறினர்.

ஆனால், இராவணனோ தான் உயிரோடு உள்ளவரை உன்னை இராமரிடம் விடமுடியாது எனப் பிடிவாதம் பிடிக்கிறான். இது அவனுக்கு அழிவையே தேடிக் கொடுக்கப் போகிறது” என்றாள். இதே சமயம் வானர வீரர்களின் கூச்சலும், சத்தமும் காதைத் துளைத்தன. அதைக் கேட்டே அரக்கர்கள் நடுநடுங்கலாயினர். இராவணனின் தர்பாரிலுள்ளோரும் அதைக் கேட்டு பீதியுற்றனர்.

அப்போது இராவணன் “வானர சேனை நம் இலங்கைக் கரையில் இறங்கிவிட்டது. இதைக் கண்டு பலர் பயப்படுவதையும் நான் காண்கிறேன். ஏன் இப்படி அநாவசியமாக பீதி அடைய வேண்டும்?” என்றான்.

அப்போது இராவணனின் தாயாருக்கு நெருங்கிய உறவினனான மால்யவந்தன் என்பவன் “அரசே, நம்மை விட பலம் குறைவானவன் உடன் போர் புரிவதும், நம்மைவிட பலம் பொருந்தியவனுடன் சமாதானமாகப் போவதுமே ராஜநீதி ஆகும். நம் பக்கம் அநீதி உள்ளது. நாம் வலிமை குறைந்தவர்கள். எனவே, இராமரோடு சமாதானம் பேசி போரைத் தவிர்ப்பதே நல்லது. சீதையை இராமரிடம் ஒப்படைத்துவிட்டால் ஒரு தொல்லையும் இல்லை. வானரங்களோ, கரடிகளோ, மனிதர்களோ நம் அரக்கர்களை அழிக்க மாட்டார்கள். நாமும் நலமாக இருப்போம்” என்றான்.

அது கேட்டு இராவணன் “நானா வலிமையற்றவன்? என் அரக்கர் படைக்கு முன் இந்தக் குரங்குப் படை நிற்க முடியுமா? கடலைக் கடந்து வந்துவிட்டது ஒரு பெரிய காரியமா? இராமனுக்கு பயந்து நான் சீதையைக் கொண்டுபோய் ஒப்படைக்க மாட்டேன். பலமிருந்தால் இராமன் என்னைக் கொல்லட்டும். சீதையை மீட்கட்டும்” என்றான். இதைக்கேட்டு மால்யவந்தன் மௌனமாக இருந்தான். இராவணன் இலங்கையைப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்யலானான்.

தெற்கு வாசலில் மகோதரனையும், மகாபார்சுவனையும் காவலுக்கு நியமித்தான். மேற்கு வாசலுக்கு இந்திரஜித்தையும், வடக்கு வாசலுக்கு சுகனையும், சாரணனையும், கிழக்கு வாசலுக்கு பிரகஸ்தனையும் காவல் புரிய ஏற்பாடு செய்தான். விரூபாட்சன் என்பவன் நகரினுள் காவல் புரியலானான்.

இலங்கை நகரப் பாதுகாப்பைப் பற்றிய விவரங்களை விபீஷணனோடு வந்த அரக்கர்கள் நால்வரும் பறவை உருவில் போய்க் கண்டு வந்து விபீஷணனிடம் கூறினர். விபீஷணனும் இந்த விவரங்களை எல்லாம் இராமரிடம் கூறினான். இராமரும் இலங்கைக்குள் எப்படி நுழைவதெனத் திட்டமிட சுக்கிரீவன், அனுமார், ஜாம்பவந்தன், அங்கதன் முதலியவர்களோடு கலந்து ஆலோசிக்கலானார்.

-தொடரும்

யுத்த காண்டம் - 4


சமுத்திரத்தின் மீது பாலம் கட்டலாம் என்று இராமர் சொன்ன உடனேயே வானரங்கள் செயலில் ஈடுபடலாயின. காடுகளில் போய் பெரியபெரிய மரங்களையெல்லாம் வேரோடு பெயர்த்து எடுத்து வந்தன. மலைகளில் இருந்து பாறைகளை உருட்டிக் கொண்டு வந்தன. இவற்றையெல்லாம் கடலில் போட்டபோது அதன் நீர் ஆகாயம் வரை உயரக்கிளம்பி சிதறியது. 

பால வேலை துரிதமாகவே நடைபெற பெற்றது. கற்களையும், மரங்களையும் சீராக வானரங்கள் அடுக்கி, அடுக்கி வைத்தவாறே அழகிய பாலத்தை வெகு சீக்கிரத்தில் அமைத்தும் விட்டன. இவ்வளவும் நளனென்னும் வானரனின் தலைமையில் நடந்தது. அவனது திறமைமிக்க ஆணைகள் மூலமாக கற்களும், மரங்களும் உரிய இடங்களில் ஒழுங்காக வைக்கப் பட்டன. 

வேலை சற்றும் சுணக்கம் இல்லாமல் நடந்து ஐந்தே நாள்களில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இலங்கையை அடையப் பாலம் அமைக்கப்பட்டபின் வானரர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமா? மறுவினாடியே எல்லா வானரங்களும் அதன் வழியே சென்று இலங்கையின் கரையை அடைந்து விட்டனர். விபீஷணன் தன் ஆள்களுடன் கதையைத் தோளில்மீது வைத்தவாறே அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான்.யாராவது எதிர்க்க வந்தால் அவர்களோடு போரிடவே அவன் அப்படி செய்தான்.

இராமரையும் இலட்சுமணனையும், அனுமாரும் அங்கதனும் தம் தோள்மீது ஏற்றிக் கொண்டு இலங்கைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். அவர்கள் இருவரும் வந்து சேர்ந்ததும் வானரங்களெல்லாம் வெற்றி கோஷமிட்டு உற்சாகத்தோடு குதித்துத் தம் உள்ள உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது வெளிப்படுத்தின. இராமரும் சற்றும் தாமதம் செய்யாது
இலட்சுமணனோடு வில்லையும், அம்புகளையும் கையில் எடுத்துக்கொண்டு இலங்கையை நோக்கி நடக்கலானார். அவர் பின்னாலேயே விபீஷணன் சுக்கிரீவன் முதலானோர் சென்றனர். வானரங்களும் வரிசையாகச் செல்லலாயின.
இதே சமயம் இலங்கையிலிருந்து போர் முழக்கம் கேட்கலாயிற்று. அந்த சத்தம் அணிவகுத்துச் செல்லும் வானரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. 

அவை யாவும் ஆகாயமே அதிரக் கத்திக்கொண்டு செல்லலாயின. இலங்காபுரியை இராமர் தொலைவிலிருந்தே பார்த்தார். பல விதமான கொடிகள் உயரமான கட்டிடங்களின் மீது பறந்து கொண்டு இருந்தன.  இலட்சுமணனிடம் அவர் "ஆகா! இந்த திரிகூட மலையின் மீது விசுவகர்மா எவ்வளவு அழகான நகரத்தை அமைத்திருக்கிறான்! ஆனால், அதில் வாழும் இராவணனின் உள்ளந்தான் எவ்வளவு அழுக்கு அடைந்து உள்ளது!'' என்றார். இதன் பின்னர் வானரசேனையை இராமர் கருட வியூகத்தில் அமைத்தார். இராமரும், இலட்சுமணரும் சேனை முன் இருந்தனர். அங்கதனும் நீலனும் மத்தியில் இருக்க, ரிஷபன் வலது பக்கத்திலும், கந்தமாதனன் இடது புறமாகவும் இருந்தனர்.

சுக்கிரீவன் பின் பகுதியில் இருந்து சேனையின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஏற்று இருந்தான்.இவ்விதமாக சேனையை அமைத்த பிறகு சுக்கிரீவன் இராவணனின் ஒற்றனாக வேவு பார்க்க வந்த சுகனை விடுதலை செய்தான். சுகன் உடனேயே கிளம்பிப் போய் இராவணனின் முன் போய் நின்றான். இராவணன் அவனைப் பார்த்து "உன்னைப் பார்த்தால் நீ வானரர்கள் இடம் அகப்பட்டுக் கொண்டு நல்ல உதை வாங்கி இருப்பது போலத் தெரிகிறதே'' என்றான். 

அதற்கு சுகனும் "நானும் தங்களது கட்டளைப்படியே கடலைக் கடந்து சென்றேன். அந்த வானரர்கள் என்னைக் கண்டதுமே ஆத்திரமடைந்து ஆகாயத்தில் கிளம்பி என்னைப் பிடித்துக் கொண்டார்கள். என்னைப் பலவிதத்திலும் துன்புறுத்தலாயினர். என்னால் பேசக்கூட முடியவில்லை. இப்போது இராமன் இலங்கைத் தீவின் கரையில் வந்து இறங்கிவிட்டான்.

பெரியகடலை பாலம் கட்டி அனைவரும் கடந்து வந்து விட்டனர். அவர்களது எண்ணிக்கையைக் கூறுவது சிரமமே. இனி நாம் சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு சமாதானம் செய்து கொள்வதா அல்லது இராமனிடம் போரிடுவதா என்பதை இப்போதே தீர்மானித்தாக வேண்டும். அதுவே நம் முன் இப்போதுள்ள பிரச்சினை'' என்றான்

இராவணனோ "நாம்தான் போரிடப் போகிறோமே'' எனக்கூறி சுகனையும் சாரணனையும் வானரங்கள் போல உருமாற்றம் செய்து இராமரது படை பலத்தை அறிந்துவரஅனுப்பினான். அவர்களும் வானர சேனையோடு சேர்ந்து கொண்டனர். அந்த வானரசேனைக்கு முடிவு இருப்பதாக அவர்களுக்குத் தெரியவே இல்லை. எங்கே பார்த்தாலும் வானரங்களே தென்பட்டன. 

மலை மீதும், மரங்கள் மீதும் மணல்பரப்பின் மீதும் வானரங்கள்! அவர்கள், கண்களுக்குத் தென்பட்ட எந்த இடமும்காலியாக இருக்கவே இல்லை. கடலில் கட்டிய பாலத்தின்மீது கூட வானரங்கள்இன்னமும் வந்துகொண்டிருந்தன. விபீஷணனுக்கு, சுகனும் சாரணனும் வானர உருவில்வந்து இருப்பது தெரிந்து விட்டது. அவன் அவர்களைப் பிடித்து இராமர் முன்கொண்டுபோய் நிறுத்தி அவர்கள் இராவணனது ஒற்றர்கள் என்று கூறினான்.அவர்களும் விபீஷணன் கூறியது சரியே என ஒப்புக்கொண்டனர்.

அதுகேட்டு இராமர் சிரித்தவாறே "எம் படை முழுவதும் பார்த்து ஆகிவிட்டதா? இல்லையானால் நன்றாகப் பார்த்துக் கொண்டு போய் இராவணனிடம் கூறுங்கள். உங்களை நான் ஒன்றும் செய்யாது விட்டுவிடுகிறேன். இராவணனுக்கு இன்னமும் துணிவும் தைரியமும் முன்பிருந்தது போலவே இருக்கும் ஆனால், என்னை அவன் எதிர்க்கட்டும். அதன்பின் அவனுக்கு என் பலம் தெரியும். நான் நாளை இலங்காபுரியை தாக்கப் போகிறேன்'' என்றார். இதைக் கேட்டு அவர்கள் இருவரும் இராமரைப் புகழ்ந்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.

அவர்கள் நேராக இராவணனிடம் சென்று, "எங்கள் இருவரையும் விபீஷணன் கண்டுபிடித்து விட்டான். எங்களைப் பிடித்துக் கொண்டு போய் அவன் இராமர் முன் நிறுத்தவே நேர்மை பொருந்திய அவர் எங்களை ஒன்றும் செய்யாது விட்டு விட்டார். அது மட்டுமல்ல படை முழுவதையும் நன்கு பார்த்துக் கொண்டு போகும்படியும் கூறினார். இராமரும் இலட்சுமணரும், சுக்கிரீவனும் மிகவும் பலசாலிகள். 

இலங்கையை அழிக்க இவர்கள் போதும். மேலும், விபீஷணன் வேறு அவர்களோடு சேர்ந்து கொண்டதால் அவர்களது பலம் மேலும் அதிகரித்து விட்டது. எனவே அவர்களோடு பேரிடுவது பற்றிச் சற்று ஆழ்ந்து யோசனை செய்து முடிவுக்கு வருவதே மிக்க நல்லது என்று நினைக்கிறோம்'' என்றனர். அது கேட்டு இராவணன் "மூவுலகிலும் உள்ளவர்களெல்லாம் ஒன்று திரண்டு என்னை எதிர்க்க வந்தால் கூட நான் சீதையை இராமனிடம் ஒப்படைக்கமாட்டேன். நீ ஏதோ பயந்து போய் வந்திருக்கிறாய். அதனால்தான் இப்படிக் கூறுகிறாய்'' எனச் சொல்லி சாரணையும், சுகனையும் அழைத்துக் கொண்டு தன் மாளிகையின் மேல் தளத்திற்குப் போய் அங்கு நின்று கொண்டு அவன் நாலாபுறமும் பார்க்கலானான்.

எங்கு பார்த்தாலும் வானரங்களே அவன் கண்களில் பட்டன. அப்போது அவன்"இவர்களில் பெரும் வீரர்கள் யார்?'' எனக்கேட்க சாரணனும் "அதோ இருப்பவன்நீலன், அவன் சேனைக்குத் தலைமை தாங்குகிறான். மற்றவன் அங்கதன், இளவரசுப்பட்டம் பெற்றவன், வாலியின் மகன்.

அனுமார் தான் நமக்குத் தெரிந்தவராயிற்றே.மற்றவன் நளன், அவன் கடலைக் கடக்க பாலத்தை அமைத்தவன். இதுபோக, சுவேதன்,குமுதன், ரம்பன், சரபன் முதலிய வீரர்கள் அந்தப்பெரும் படையில் இருக்கிறார்கள்'' என்றான். சுகனும் தனக்குத் தெரிந்த சில வானரவீரர்களைப் பற்றிக் கூறினான்.

இப்படியாக இருவரும் வானர வீரர்களது பட்டியலைக் கூறவும் இராவணனின் கோபம்மிகவும் அதிகரித்தது. அவன் "நீங்கள் இருவரும் எதிரிகளை இப்படி ஒரேயடியாகப்புகழ்கிறீர்களே. இதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் உதவியா? பேஷ் பேஷ்.உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்பவர்கள் போலக் காணப்படுகிறீர்களே'' என்றுகோபத்தோடு கூறினான். இதைக் கேட்ட அவர்கள் ஒன்றும் பேசாது  தலை குனிந்து கொண்டனர்.

அப்போது இராவணன் மகோதரன் என்பவனையும் மற்றும் சிலரையும் அழைத்து "நீங்கள் போய் இராமனின் ஒவ்வொரு செயலையும் அறிந்து வாருங்கள். அவன் யாரிடம் கலந்து ஆலோசிக்கிறான்,எங்கே உறங்குகிறான், எப்போது சாப்பிடுகிறான் என்பது போன்ற சிறிய, சிறியவிஷயங்களைக் கூட கவனியுங்கள்'' எனக்கூறி அனுப்பினான். உடனே அவர்களும்இராமர், இலட்சுமணன், சுக்கிரீவன், விபீஷணன் ஆகியோர் தங்கியுள்ள இடத்தைஅடைந்தனர். விபீஷணன் அவர்களையும் கண்டு கொண்டான்.

அவர்களைப் பிடித்துக் கொல்லப் போகையில் இராமர் குறுக்கிட்டு அவர்களைவிடுதலை செய்து, இலங்கைக்கே திருப்பி அனுப்பி விட்டார். அவர்களும்இராவணனிடம் போய் தமக்கு நேர்ந்ததைக் கூறி இராமன் இருக்கும் இடத்தைக்கூறினர்.
அவர்களில் சார்த்தூலன் என்பவனைப் பார்த்து இராவணன் "நீ ஏன்வாட்ட முற்றிருக்கிறாய்?'' எனக் கேட்க அவனும் "வானர சேனையில் புகுந்துஅவர்களது இரகசியங்களை அறிவது மிகவும் சிரமமான வேலை.
என்னைப் பிடித்து அவர்கள் கொல்லவே முயன்றார்கள்.

 என்னை அடித்து உதைத்துக் குத்தித் தள்ளி துன்புறுத்தி குற்றுயிராக்கிவிட்டனர். நல்லவேளை ஆக இராமர் அப்போது அங்கு வந்து என் விஷயத்தில்குறுக்கிடவே நான் உயிர் தப்பினேன். சீதையை ஒப்படைக்காவிட்டால் போரில் நாம்மடிய வேண்டியதே'' என்றான்.

அது கேட்டு இராவணனது கோபம் அதிகரித்தது. யார் போய் திரும்பிவந்தாலும் இராமரையும் அவரது சேனையும் புகழ்ந்து கூறுவதைக் கேட்க அவனுக்குஒரே எரிச்சலாக இருந்தது. அவன் தன் மந்திரிகளோடு கலந்து ஆலோசிப்பதை விட்டுவிட்டு வித்யுத்ஜீவன் என்ற மாயக்காரனை அழைத்துக் கொண்டு சீதை இருக்கும்இடத்திற்குப் போகலானான்.
அவ்விடத்திற்குப் போகும் வழியில் இராவணன்வித்யுத்ஜீவனிடம், "நாம் சீதையை ஏமாற்ற வேண்டும். நீ உன் மாயையால் இராமரதுதலையை போல் ஒன்று செய்தும், அவரது வில் அம்புகளைப் போல் தயாரித்தும்எடுத்துக் கொண்டு வா. நான் முன்னதாகச் செல்கிறேன்.

அங்கே சீதையோடு பேசிக் கொண்டிருக்கும் போதே நீ அவற்றைக் கொண்டு வா'' என்றான். வித்யுத்ஜீவனும் அவ்விதமே
செய்வதாகக் கூறி அவன் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டு சென்றான். இராவணனும்
அங்கிருந்து சீதை சிறை வைக்கப்பட்டிருக்கும் அசோகவனத்தை நோக்கிச் சென்றான்.

இராவணனது திட்டம் சீதையை ஏமாற்றி அவள் தன்னை மணக்க இசையச் செய்வதேயாகும்.பாவம், அவன் சீதையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இல்லாவிட்டால்இப்படி எண்ணித் திட்டமிட்டுச் செல்வானா? 

யுத்த காண்டம் - 3



விபீஷணன் நாட்டை அடையும் ஆசையோடு வந்திருக்கலாமென அனுமார் கூறியது கேட்டு இராமரும் "எது எப்படியானாலும் சரி நம்மிடம் சரண்புக வந்திருப்பவன் யாரானாலும் சரி! அவனுக்கு நாம் தஞ்சம் அளித்தே
ஆக வேண்டும்'' என்றார்.

சுக்கிரீவனோ "இவனால் நமக்கு என்ன நன்மை? மேலும் தன் அண்ணனுக்கு துரோராகம் செய்பவன் நம்மிடம் மட்டும் விசுவாசமுள்ளவனாக இருப்பானென்று என்ன நிச்சயம்? எனவே இவனை நாம் பூரணமாக நம்பிவிடக்கூடாது. எச்சரிக்கையுடனேயே இருக்க வேண்டும்'' எனக் கூறினான்.

அதற்கு இராமர் "அரச குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சில உரிமைகள் உண்டு. சில சமயங்களில் அவர்கள் தம் கூடப் பிறந்தவர்களைக்கூட சந்தேகிப்பார்கள். அதுபோல இராவணன் தன் தம்பியான இவனை நம்ம வில்லை. அதனால் விபீஷணன் நம்மோடு சேர்ந்து நாட்டை அடைய விரும்புகிறான்'' என்றார்.

அப்போதும் சுக்கிரீவன் ""இவனை நம்பக்கூடாது. இவன் ஒரு மோசக்காரன் என்றே எனக்குப்படுகிறது'' என்றான். அது கேட்டு இராமர் "அப்படியே இருந்தாலும்கூட இவனால் நம்மை என்ன செய்துவிட முடியும்? இராவணனே இம்மாதிரி வேஷம் பூண்டு என்னிடம் சரண்புக வந்தாலும் கூட நான் கண்டிப்பாக அபயம் அளிப்பேன். எனவே நீ போய் அவனை அழைத்து வா'' எனக் கூறினார்.
அது கேட்டு சுக்கிரீவனும் ஒருவாறு மனம் மாறியவனாக விபீஷணனை இராமரிடம் அழைத்து வந்தான்.

நான்கு வீரர்களோடு வந்த விபீஷணன் இராமரது திருவடிகளில் விழுந்து வணங்கி ""நான் இராவணனின் தம்பி விபீஷணன். என் அண்ணன் என்னை அவமானப்படுத்தி விட்டான். நான் எனது உடைமைகளையெல்லாம் துறந்து உங்களிடம் சரண் புகுந்து விட்டேன். இனி என் வாழ்வு தாழ்வு உங்களிடம் இருக்கிறது'' என்றான்.

இராமரும், விபீஷணனுக்கு அபயம் அளித்து ""இராவணனது படை பலம் எவ்வளவு?'' எனக் கேட்க விபீஷணனும், ""இராவணன் ராட்சஸர்களாலோ அல்லது பூதங்களாலோ இறக்க முடியாதபடி பிரம்மாவிடம் வரம் பெற்றிருக்கிறான்.  இராவணனின் மற்றொரு தம்பியான கும்பகர்ணன் மகா பலசாலி. இராவணனின் படைத் தலைவன் பிரஹஸ்தன் குபேரனின் சேனாதிபதியை வென்றவன். இராவணனின் மகன் இந்திரஜித் பல வரங்களைப் பெற்றவன். அவனது கவசத்தைப் பிளப்பது கடினம். மறைந்து இருந்து போர் புரியும் திறமை பெற்றவன்.

இவர்கள் போக மகோதரன், மகாபார்சுவன் போன்றவர்களும் இருக்கிறார்கள்.  தம் விருப்பப்படி உருவம் எடுக்கும் அரக்கர்கள் இலங்கையில் பல்லாயிரம் பேர்கள் இருக்கிறார்கள். அவர்களது துணைகொண்டு தான் இராவணனின் ஆட்சி நடக்கிறது'' என்றான்.

அப்போது இராமர், ""விபீஷணா, நீ கவலைப்படாதே! இராவணனைக்கொன்று இலங்கையை உனக்கு அளிக்கிறேன் இது சத்தியம். இராவணன் என்னிடமிருந்து கண்டிப்பாகத் தப்பமுடியாது. அவன் எங்கே ஓடி ஒளிந்தாலும் அவனை என் பாணம் விடாது'' என்றார்.

விபீஷணனும் ""நானும் இப்போரில் கலந்து கொண்டு சில அரக்கர்களைக்கொல்கிறேன். எனக்கு  ரக்கர்களைப்பற்றிய இரகசியங்கள் தெரியும். ஆதலால் உங்களுக்கும் அவ்வப்போது கூறி துணை புரிவேன். நானும் போர்களத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவேன்'' என கம்பீரமாகக் கூறினான்.

இதைக் கேட்டு இராமரும் சந்தோஷம் அடைந்து இலட்சுமணன் இடம் சமுத்திரஜலத்தைக் கொண்டு வரும்படிக் சொன்னார். அந்நீரை விபீஷணனுக்கு அபிஷேகம் செய்து வானரர்கள் இடையே விபீஷணனை இலங்கையின் மன்னனாக்குவதாக அறிவித்தார். வானரர்களும் மகிழ்ச்சிஆரவாரம் செய்தனர்.
அதன் பிறகு தனிமையில் இருக்கும் போது சுக்கிரீவனும், அனுமாரும் விபீஷணனிடம், ""இந்தக் கடலை இவ்வளவு பேரும் கடக்க ஏதேனும் வழி உண்டா?'' எனக் கேட்டனர். அதற்கு விபீஷணன் ""இராமர் சமுத்திர ராஜனை அண்டினால் அவன் நிச்சயம் இராமருக்கு உதவி செய்வான். இராமரது முன்னோர்களில் ஒருவரான சகரனுக்கு சமுத்திர ராஜன் மிகவும் கடமைப் பட்டிருக்கிறான்'' என்றான்.

உடனே சுக்கிரீவன் இராமரும் இலட்சுமணனும் இருக்கும் இடத்திற்குப் போய் விபீஷணன் கூறியதைச்சொல்லி சமுத்திர ராஜனை ஆராதிக்கும் படி வேண்டினர்.  இராமரும் தர்ப்பைப் புல்மீதிலிருந்து சமுத்திரராஜனது வருகையை எதிர்பார்க்கலானார்.

இச்சமயத்தில் சார்த்தூலன் என்ற இராவணனின் ஒற்றன் வானர சேனைகளிருக்குமிடத்திற்குப் போய் அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து விட்டு இராவணனிடம் சென்றான்.

இராவணனிடம்அவன் ""வானரசேனை கடல் போல இலங்கைக்கு வந்து கொண்டிருக்கிறது.  இராமனும் இலட்சுமணனும் ஆயுதங்களுடன் கடற்கரையோரமாக இருக்கிறார்கள். அப்பெரிய சேனையின் அளவை நான் மதிப்பிட முடியாது போயிற்று. வேறு யாரையாவது அனுப்பி அதனையும் அறிந்து வரச் செய்யுங்கள்'' என்றான்.

அப்போது இராவணன் சுகன் என்ற அரக்கனை அழைத்து, அவனிடம் இரகசியமாக ஏதோ சொல்லி வானர சேனைக்குள் புகுந்து உளவு பார்த்து வரும்படி அனுப்பி வைத்தான். சுகனும் தன் பெயருக்கு ஏற்ப பட்சியின் உருவம் கொண்டு இலங்கையிலிருந்து கிளம்பி வானர சேனைகள் முகாம் இட்டிருக்கும் இடத்தை அடைந்தான்.

அவன் சுக்கிரீவனின் தலைமீது பறந்து ""வானர மன்னனே, எங்கள் இராவணேஸ்வரன் கூறி அனுப்பியதைக் கேள். வாலி இராவணனின் நண்பன். நீ அவனது தம்பி. உனக்கும் அவருக்கும் எவ்விதத்திலும் விரோதம் இல்லை. உயர் குடியில் பிறந்த நீ ஏன் இந்த தகராறில் தலையிடுகிறாய்? பேசாமல் இருந்து விடு. சீதை விஷயமாக இராவணனும் இராமனுமே ஒரு முடிவுக்கு வரட்டும். ஏனென்றால் இலங்கைக்குள் நுழைவது என்பது விளையாட்டு அல்ல'' என்றான்.

இதைக் கேட்டதும்  சுக்கிரீவனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. அவன் தன்னை சுற்றிலுமுள்ள வானரர்களைப் பார்த்தான். அவர்கள் சுக்கிரீவனின் குறிப்பை அறிந்து கொண்டனர்.

உடனேயே சில வானரர்கள் உயரக்கிளம்பிப் போய் சுகனைப் பிடித்துக்கீழே தள்ளினார்கள். அப்போது சுகன் ""இராமா, என்னை இந்த வானரர்கள் கொல்கிறார்களே. ஒரு தூதனைக் கொல்வது சரியா? நான் என் எஜமானர் கூறிய வார்த்தைகளை அப்படியே சொன்னேன் இதுதான் நியாயமா? தூதுவன் போல வந்த அனுமாரை நாங்கள் கொல்லவில்லையே. அதுபோல என்னையும் நீங்கள் கொல்லக் கூடாது. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை அப்படியே நான் இராவணன் இடம் கூறுவேன். என்னை விட்டுவிடுங்கள்'' என்றான்.

 உடனே இராமரும் அவனை விட்டுவிடும்படிக் கூறவே, வானரர்களும் அவனை ஒன்றும் செய்யவில்லை.  அப்போது அவன் மீண்டும் ஆகாயத்தில் எழும்பி ""சுக்கிரீவா நான் இராவணனிடம் என்ன சொல்ல வேண்டும்?'' எனக் கேட்டான்.

அதற்கு சுக்கிரீவனும் ""நீ நான் சொல்வதை அப்படியே அங்கு சென்று சொல். இராவணன் எனக்கு நண்பன் அல்ல. என் நண்பரான இராமரின் விரோதி. என் விரோதியான வாலியின் நண்பன் இராவணன். இதனால் இராவணனை நான் அடியோடு ஒழிப்பேன். இலங்கையை நிர்மூலம் ஆக்குவேன். இராம பாணத்தினின்று இராவணனை யாராலும் காக்க முடியாது. சீதையைத் திருட்டுத்தனமாக யாருமில்லாத வேளையில் அபகரித்து வந்தது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் ஆகும். அந்தக் குற்றத்திற்குப் பரிகாரமாக இராவணன் சீதையை இராமர் இடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு மன்னிப்புக் கேட்கட்டும் இல்லாவிட்டால் கண்டிப்பாக போர் தான் நிகழும். இராவணன் இன்னமும் இராமரைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை'' என்றான்.

இதற்குள் அங்கதன் சுக்கிரீவன் இடம், "இவன் தூதன் ஆகத் தென்பட இல்லை. ஒரு ஒற்றன் ஆகவே காணப்படுகிறான். இதோ நம்மோடு பேசியவாறே நம் படைகளை கவனிக்கிறான். இவனைத் இலங்கைக்குத் தப்பவிடாதீர்கள்'' எனக் கூறினான். சுக்கிரீவனும் அவனைப் பிடித்து வரும்படிக் கட்டளையிடவே வானரர்கள் சுகனைப் பிடித்துக்கொண்டார்கள்.

மறுபடியும் சுகன், ""இராமா, தூதன்ஆக வந்த என்னை மீண்டும் வானரர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். என்னைத் துன்புறுத்துகிறார்களே'' எனக் கூவினான். அதைக்கேட்டுண்டும் இராமர் அவனை விட்டு விடும்படிக் கூறினார்.

இராமர் மூன்று நாள்கள் புல்லணின் மீது படுத்து சமுத்திரராஜனை தியானித்த வண்ணம்  இருந்தார். அப்போது அவன் வராது போகவே இராமர் கோபம் கொண்டு ""இலட்சுணா என் வில்லையும் அம்பையும்கொண்டு வா. இந்த சமுத்திரத்தையே வற்றச் செய்து வானரர்கள் அனைவரையும் இலங்கைக்குப் போக வழி செய்கிறேன்'' எனக் கூறினார்.

இலட்சுமணனும் அவற்றைக் கண்டு வந்து கொடுக்க இராமர் சமுத்திரத்தின் மீது ஓர் அம்பை எய்தார். அது கடலில் விழுந்ததும் கடல் கொந்தளிக்கலாயிற்று. கடலடியிலிருந்த முத்துக்கள், சிப்பிகள், பயங்கரப் பி ராணிகள் முதலியன நீர் மட்டத்திற்கு வரலாயின.

அதே சமயம் இலட்சுமணன் இராமரது கையைப் பற்றி ""போதும் அண்ணா, இனியும் வேண்டாம்'' என்றான். ஆனால், இராமரா அதைக் கேட்கவில்லை. ""இந்த சமுத்திரத்தை பாதாளம்வரை வற்றிப் போகச் செய்கிறேன். கடலிலுள்  உள்ளவற்றை எல்லாம் பொசுக்கி சமுத்திரராஜனை என்ன செய்கிறேன் பார்'' என்று கோபத்தோடு அவர் கூறினார்.

அவர் ஓர் அம்பை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தைக் கூறி அதை விடுவதற்காக நாணில் ஏற்றினார். அப்போது உலகமே கிடுகிடுத்தது. மலைகள் அதிர நதிகளும், குளங்களும் பொங்கின. சூரியனும், சந்திரனும் கூடத்  தம்போக்கை மாற்றும்படி ஆகியது. புயலும், இடியும் ஏற்பட பல பெரும் மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதற்குள் சமுத்திரத்தின் நீர் வற்றிக்கொண்டே போகலாயிற்று.


சமுத்திரராஜன் கடலின் மத்தியில் இ ருந்து அலறியடித்துக் கொண்டுவந்தான். அவன் உடல் காந்திமயமாக
இருந்தது. ஆபரணங்களையும், பட்டு புடைகளையும் தரித்த அவன் மரவுரிதரித்த இராமரை வணங்கி ""இராமரே,
கடலின் தன்மை ஆழமாக இருப்பதே. அதனால்தான் எனக்கு பெருமை. அது போய்விட்டால் எனக்கு மதிப்பு ஏது?

எனவே வானரர்கள் இலங்கைக்குப் க பாலம் அமைக்கட்டும். அந்த வேலை நடக்கும்போது அவர்களுக்கு
எவ்வித இன்னலும் நேராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்'' எனக் றினான்.

அதைக் கேட்ட இராமர் ""இந்தநாணணேற்றிய அஸ்திரத்தை எங்கேவிடுவது? இதற்கு நீதான் பொறுப்பு'' எனவே சமுத்திரராஜனும், ""வடக்கு பகுதியில் துருமகுல்யமென்னும்அழகிய பிரதேசம் உள்ளது. அங்கு பலபயங்கரத் திருடர்கள் ஒளிந்து மறைந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை  இது அழிக்கட்டும்'' என்றான்.

இராமரும் சமுத்திரராஜன் கூறிய திசையில் அந்த அம்பை எய்தார். அது மின்னலைப்போல் பாய்ந்து இடிபோல கர்ஜித்து அப்பகுதியில் விழுந்து  அதனைப் பொட்டலாக்கியது. அது பூமியில் குத்திய இடத்திலிருந்து நீர் ஊற்று கிளம்பி வற்றாத ஊற்றாக இருந்தது. துருமகுல்யத்திலிருந்த  திருடர்கள் அழிந்தனர். அப்போது சமுத்திரராஜன் "இராமரே, உமது படையில் நளன் என்பவன் இருக்கிறான். அவன் விசுவர்மாவின் மகன் கட்டடக் கலையில் தேர்ந்தவன். அவனைக் கொண்டு பாலத்தை அமைக்கச் செய்யுங்கள். அதற்கு எவ்வித கெடுதலும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றான்.

இவ்விதம் கூறிவிட்டு சமுத்திர ன்னன் மறைந்து விட்டான். அதன் பிறகு இராமன் நளனிடம் இது குறித்து அவன் கருத்து என்னவென்றும், அவனால் கண்டிப்பாக அவ்வாறு செய்ய முடியுமா என்றும், கடலின் மீது அவனால் பாலம் கட்ட முடியுமா ன்றும் கேட்டார். இதைக் கேட்ட நளனும், ""சமுத்திரராஜன் கூறியது  உண்மையே. என்னால் பாலத்தைக் கட்ட முடியும். நானே அவ்வாறுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னைப்பற்றி நானே கூறிக்கொள்வதை விட வேறு யாராவது சொல்லட்டும் என்றே இருந்தேன். அதனால்தான் நானாக உங்கள் முன்னால் வரவில்லை. நீங்கள் னுமதி அளித்தீர்கள் என்றால் இன்றே கூட வானரர்கள் ஒன்று கூடி பாலத்தை நிர்மாணிக்கும் வேலை ஆரம்பிக்கலாம்'' என்று இராமரிடம் மிகவும் பணிவோடு கூறினான்.

யுத்த காண்டம் - 2


இராவணன் கூட்டிய தர்பாரில் பேசியவர்களெல்லாம் “இப்போதே போய் அந்த இராமனை ஒழிக்கலாம்” என கர்ஜித்தது கண்டு விபீஷணன் அவர்களையெல்லாம் சற்று அமைதியோடு இருக்கச் சொல்லிவிட்டு தன் அபிப்பிராயத்தைக் கூறலானான்.

“சாமம், தானம், பேதம் என்ற மூன்று வழிகளும் பயனற்றுப் போனாலே தண்டம் என்பதைக் கையாள வேண்டுமெனப் பெரியோர்கள் கூறியுள்ளனர். அதுவும் தர்மம், நேர்மை முதலியன இருந்தாலே தண்டம் எனப்படும் சக்தி பயனுள்ளதாக இருக்கும்.

“இராமரும் பலம் பொருந்தியவர். அவரது தூதராக வந்த அனுமார் துணிவுடன் கடலைக் கடந்து வந்து இங்குள்ள பலசாலிகளைத் திணற வைத்துப் போனார். அறம் அவர் பக்கமாக இருப்பதை நன்கு கவனியுங்கள். அவரை அற்பமாக மதிக்கவேண்டாம். அவர் தாமாக நம் அரக்கர் குலத்தை அழிக்க முற் பட்டாரா? கரன் முதலியோர் அவரை முதலில் தாக்கினர். அவர் தற்காப்பாக எதிர்த்து அவர்களைக் கொன்றார். சீதையை அபகரித்து வந்தது சரியல்ல. அதனால் நமக்கு தீமையே ஏற்படும்.பேசாமல் இராமரிடம் அவளைத் திருப்பிக் கொடுத்துவிடுவதே நம் குலத்திற்கும் இலங்கைக்கும் எவ்விதத்திலும் நல்லது.” விபீஷணன் இம்மாதிரி கூறி முடிக்கவும் இராவணன் மிகவும் கோபத்துடன் அன்றைய சபையைக் கலைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் தன் மாளிகைக்குச் சென்றான்.


விபீஷணன் மறுநாள் காலை முதல் வேலையாக இராவணனின் மாளிகைக்குச் சென்றான். அப்போது அங்கு யாரும் இராவணனோடு இருக்கவில்லை.

விபீஷணன் அதுவே தக்க தருணமென தன் அண்ணனிடம் “சீதையை நீ அபகரித்து வந்தது முதல் பல கெட்ட சகுனங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது ஒவ்வொருவனுக்கும் தெரியும். அப்படி இருந்தும் உன் மந்திரிகள் உன்னிடம் அதுபற்றிக் கூறவே இல்லை. எனவே நான் உன்னிடம் கூறி நேர்வழியில் செல்லுமாறு எச்சரிக்கிறேன்” என்றார்.
இராவணனோ மிகவும் கோபம் கொண்டு “இந்த உலகில் எனக்கு நிகர் யாருமே இல்லை. அந்த இராமனுக்கு சீதை வேண்டுமானால் என்னோடு போர் புரிந்துவென்றே மீட்டுச் செல்ல வேண்டும். என்னை எதிர்ப்பது என்பது நடக்காது” எனக் கூறி விபீஷணனை அனுப்பி விட்டான்.

இராவணன் போருக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தன் மந்திரிகளோடு கலந்து ஆலோசிக்க சபாபவனத்திற்கு ரதமேறிச் சென்றான். அரக்கர் பிரமுகர்கள் பலரையும் உடனே சபைக்கு அழைத்து வரும்படியும் ஆட்களை அனுப்பினான்.

விபீஷணன், சுகன், பிரகஸ்தன் முதலானோருக்குத் தனித்தனி ஆசனங்கள் கொடுத்துவிட்டு இராவணன் அவர்களை நோக்கி “இனி நாம் இலங்கையை சர்வ ஜாக்கிரதையுடன் பாதுகாக்க வேண்டும். உங்கள் உதவி இதுவரை எனக்குக் கிட்டி வந்துள்ளது. இனியும் தொடர்ந்து உங்கள் உதவி கிடைத்து வருமென்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. உங்கள் பலத்தால் என்றும் நமக்கு வெற்றியே கிடைத்தது. இனியும் அப்படியே கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
“நம் முன் எதிர் நோக்கியுள்ள பிரச்னை குறித்து உங்கள் அனைவருக்கும் கூறுகிறேன்.

 கும்பகர்ணனது தூக்க காலம் கூட முடிந்துவிட்டது. அவனும் இங்கே இருக்கிறான். விஷயம் இதுதான். ஜனக மன்னனின் புதல்வியும் இராமனின் மனைவியுமான சீதையை நான் தண்டகாரண்யப் பகுதியிலிருந்து அபகரித்துக்கொண்டு வந்து விட்டேன். அவளை நான் மிகவும் நயமாக வேண்டியும் என்னை ஏற்க மறுக்கிறாள். அவளைப் போன்ற அழகி மூவுலகிலும் இல்லை. அவளை நான் என் மனைவியாக்கிக் கொள்ளாவிட்டால் என் உயிர் இராது. அவள் தன்னை இராமன் வந்து மீட்டுச் செல்வானென்ற நம்பிக்கையோடு இந்த ஒரு வருட காலம் கெடு வைத்துப் பார்த்தாள். நானும் அதற்கு இசைந்தேன்.

“இராமன் தன் படையோடு கடலைத் தாண்டி இலங்கையை எப்படி அடைய முடியும்? ஒரு வேளை அவன் வந்தால் என்ன செய்வது என்பது பற்றியே நாம் இப்போது யோசிக்க வேண்டும். அனுமான் கடலைக் கடந்து இலங்கை யை ஒரு கலக்கு கலக்கிவிட்டுச் சென்றுவிட்டான். எனவே இனி நாம் எச்சரிக்கையுடன் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீதையை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. எனவே இராமனைக் கொல்லும் வழிதான் எஞ்சியுள்ளது” என்றான்.

அது கேட்டு கும்பகர்ணன் “நீங்கள் சீதையைக் கவர்ந்து வருமுன் எங்களைக் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் முன்பின் சற்றும் யோசியாது அவசரப்பட்டு சீதையைக் கவர்ந்து வந்து விட்டீர்கள். இதுவரை இராமன் படை எடுத்து வராதது நம் அதிருஷ்டமே. சரி. இனி கவலைப் பட வேண்டாம். உமது எதிரிகளை எதிர்த்துப் போராட நான் இருக்கிறேன்” என்றான்.

கும்பகர்ணன் கூறியது இராவண­னுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதை கவனித்த மகாபார்சுவன் என்ற அரக்கன் “ஒரு செயலில் இறங்கி விட்டால் அதை செய்து முடிக்காத­வன் முட்டாளாவான். இராவணன் இந்த உலகிற்கே அதிபதி. யார் என்ன செய்யமுடியும்? சீதையை அபகரித்துக் கொண்டு வந்தாகி விட்டது. இனி அவள் விருப்பத்திற்கு இசைந்தால் சரி. இல்லாவிட்டால் நீங்கள் அவளை பலவந்தமாகவாவாது அடையவே வேண்டும். இதற்காக என்ன ஆனாலும் சரி. கவலைப்பட வேண்டாம். கும்பகர்ணன், இந்திரஜித்தன் முதலானோர் இருக்க தேவேந்திரனே வந்து உங்களை எதிர்த்தாலும் அவர்கள் தோல்வி அடைய வேண்டியதே” என்றான்.

அப்போது இராவணன் “பேஷ். ஆனால், எனக்கு ஒரு சாபம் உள்ளது. எனக்கு ஒருமுறை பிரம்மதேவனின் இல்லத்திற்குப் போகும்போது ஒரு பெண்ணை அவளது விருப்பத்திற்கு மாறாக பலாத்காரம் செய்தேன். அதனால் பிரம்மா “இனிமேல் நீ எந்தப் பெண்ணையாவது அவள் இணங்காமல் வன் செயல் புரிந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்” எனச் சாபமிட்டுவிட்டார். அதனால்தான் நான் சீதையைத் தொடக்கூட முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால், என் கோபம் பொல்லாதது. என் சக்தியை அந்த இராமன் அறிந்தானில்லை. அவனுக்குத் தான் கேடு காலம் கிட்டி விட்டது என்பேன்” என்றான்.

அது கேட்டு விபீஷணன் “இதெல்லாம் அழிவுகாலத்தின் அறிகுறி. சீதையைக் கொண்டு வந்தது ஒரு விஷப்பாம்பை எடுத்து வந்தது போலாகும். இராமனின் பக்கம் நீதியுள்ளது. எனவே அது வெல்லும். அந்த வெற்றியை இராவணனோ, இந்திரஜித்தனோ அல்லது கும்ப கர்ணனோ யாருமே தடை செய்ய முடியாது. சீதையை இராமரிடம் ஒப்படைப்பதேமேல்” என்றான்.

அப்போது இந்திரஜித்தன் “இதென்ன பேச்சு? நாம் என்ன தொடை நடுங்கிகளா? இராமனையும், இலட்சுமணனையும் கொல்ல ஓர்  அரக்கன் போதுமே. என் பலம் யாவரும் அறிந்ததே. தேவேந்திர னையே வென்ற எனக்கு இந்த அற்ப மானிடர்கள் எந்த மூலைக்கு?” என்றான்.

விபீஷணனோ, “தம்பீ. நீ சின்னப் பயல். அனுபவமில்லாதவன். ஏதோ உளறுகிறாய். இதனால் உன் தந்தைக்கே நீ குழிபறிக்கிறாய். குழந்தைகளை எல்லாம் இங்கு பேச விடுவதே தப்பு” என்றான். அவன் கூறியதைக் கேட்டு இராவணன் “எப்போதும் உறவினனும் பாம்பும் ஒன்றே. நீ எதிரியின் கட்சியில் சேர்ந்து கொண்டு எங்களை அழிக்கபார்க்கிறாய். என் தம்பி என்ற காரணத்தினால் உன்னை விட்டு வைக்கிறேன். நீ இக் குலத்திற்கே கோடாரிக் காம்பு” என்றான்.
 அது கேட்டு விபீஷணன் நான்கு அரக்கர்களுடன் ஆகாயத்தில் கிளம்பி “நான் என்னவோ உன் நன்மைக்காகக் கூறினேன். நீ என்னையே விரோதியாக பாவித்து விட்டாய். உன்னைச் சூழ்ந்துள்ளவர்கள் உன்னைப் புகழ்கிறார்கள். நீ அந்தப் புகழ் மாலையில் மெய் மறந்து கிடக்கிறாய். நான் கூறும் உண்மை உனக்கு வேம்பாகக் கசக்கிறது. இந்த இலங்கையும் நீயும் அழிவதை நான் காண விரும்பவில்லை. இங்கிருந்து நீங்கள் அனைவரும் எப்படியோ சௌக்கியமாக இருங்கள், நான் இங்கிருந்து போகிறேன்” எனக் கூறிச் சென்றான்.
விபீஷணன் இராமரும் இலட்சுமணரும் வானரப்படையோடு வந்து தங்கி இருக்கும் இடத்தை நோக்கி ஆகாய வழியே சென்றான். நான்கு அரக்கர்களோடு ஆயுதங்களுடன் ஆகாயமார்க்கமாக வரும் அவனைப் பார்த்த சுக்கிரீவன் “இவர்கள் நம்மைக் கொல்ல வருகிறார்கள் போலிருக்கிறதே” என்றான். உடனே வானரர்கள் அவர்களை எதிர்க்கத் தயாராக நின்றனர்.

அந்த சமயத்தில் விபீஷணன் ஆகாயத்தில் இருந்தபடியே “நான் துஷ்டனான இராவணனின் தம்பி விபீஷணன். சீதையை அவன் சிறைப்படுத்தி வைத்திருக்க நான் அவளை இராமரிடம் ஒப்படைக்கும் படி கூறினேன். ஆனால், என் புத்திமதியை அவன் ஏற்கவில்லை. என்னையே நச்சுப்பாம்பு எனக் கூறி கடுஞ்சொற்களால் வாட்டிவிட்டான். நான் இப்போது இராமரிடம் சரண்புக வந்திருக்கிறேன் இதை நீங்கள்  அவரிடம் சென்று தெரிவியுங்கள்” என்றான்.

இதைக் கேட்டதும் சுக்கிரீவன் இலட்சுமணனோடு இராமர் இருக்கும் இடத்தை அடைந்து “இராவணனின் தம்பி விபீஷணன் என்பவன் நான்கு அரக்கர்களோடு உங்களிடம் சரண்புக வந்திருப்பதாகக் கூறுகிறான். நாம் சற்று எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். இந்த அரக்கர்கள் எப்படி வேண்டும் ஆனாலும் உருவெடுத்து ஏமாற்ற வல்லவர்கள். இவர்கள் இராவணனின் ஒற்றர்களாக இருக்கலாம். நம்மை எப்படியோ நம்ப வைத்து நம் இரகசியங்களைத் தெரிந்து கொள்ளவே இவர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். இராவணனோடு உடன் பிறந்தவனை நாம் நம்புவதா? இவர்களை இப்போதே பிடித்துக் கொன்று விட வேண்டும்” எனக் கூறினார்கள்.

அதையெல்லாம் கேட்ட இராமர் அனுமார் ஜாம்பவான் போன்ற மற்ற வானரர்களைப் பார்த்து “சுக்கிரீவன் சொன்னதையெல்லாம் கேட்டீர்கள்அல்லவா? இப்போது நீங்கள் உங்களுடைய அபிப்பிராயங்களைக் கூறுங்கள்”’ என்றார்.

அங்கதனோ விபீஷணன் எப்படிப்பட்டவனெனத் தெரிந்துக் கொண்டே அவன் கூறுவதை நம்ப முற்பட வேண்டுமெனக் கூறினான். சரபன் என்பவன் “விபீஷணன் மிகவும் புத்திசாலியான ஒற்றன் என்பதில் சிறிதும் ஐயமில்லை” என்றான். அதை தொடர்ந்து ஜாம்பவான் “விபீஷணன் இங்கு இப்போது வருவதே சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறது” என்றான்.

அனைவர் கூறிய கருத்தை மறுத்தபடி அனுமார், “விபீஷணனைப் பரீட்சிப்பது எப்படி? மேலும் இவ்வளவு அருகேயுள்ள படைக்கு ஒற்றனை அனுப்ப மாட்டார்கள். விபீஷணன் இங்கு வர வேறு காரணமே இருக்க வேண்டும். விபீஷணன் இராவணனது கெட்ட செயலை அறிவான். வாலியை இராமர் கொன்று சுக்கிரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்ததையும் அறிவான். அது போலத் தனக்கும் இலங்கை கிடைக்கலாம் என நினைத்தே அவன் இங்கே வந்திருக்க வேண்டும் அவனை நான் ஒற்றனாகக் கருதவில்லை. நாடு தனக்கு வேண்டும் என்ற ஆசையால் அவன் நம்மிடம் சரண் புக வந்திருக்கிறான். எனவே அவனைக் கண்டு பேசிப் பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன். மற்றவை உங்கள் இஷ்டம்” எனக் கூறினார்.

யுத்த காண்டம் - 1

இராமர் அனுமார் கூறியதை எல்லாம் கேட்டு ஆனந்தம் அடைந்தார். அவரும் “ஆகா! இப்படிப்பட்ட வேலையை வேறு யாரால் செய்ய முடியும்? கடலைக் கடப்பது என்பது சாமானியமானதா? அப்படிக் கடந்து இலங்கைக்குள் நுழைந்து சீதையைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்திருக்கிறார். இலங்கையை நாசப்படுத்தி இராவணனது கட்டு திட்டங்களை எல்லாம் தவிடு பொடியாகச் செய்து விட்டார் அல்லவா! இவர் எனக்கும் சீதைக்கும் மறுவாழ்வு அளித்தவராவார்” எனக்கூறி அனுமாரை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார். 
சற்று நேரத்திற்குப் பின்னர் அவர் சுக்ரீவனைப் பார்த்து, “சீதை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தாகிவிட்டது. இனி நாம் அங்கே எப்படிப் போவது என்பது ஒரு பெருத்த பிரச்சினையாகி விட்டதே!” எனக் கவலலையோடு கூறலானார்.
அப்போது சுக்ரீவன் “நீங்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம். இலங்கைக்குப் போக சமுத்திரத்தில் பெரிய பாலம் கட்டுவோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் போயிற்று. அதை மட்டும் செய்து முடித்து விட்டால் இராவணனின் வாழ் நாள்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே அதற்கான செயலில் ஈடுபடலாம்” என உற்சாக மொழிகளைக் கூறினான். இராமரும் “ஆமாம், இலங்கையை நாம் எப்படியும் அடைந்தே தீரவேண்டும்.


இராமரும்  ஆமாம் இலங்கையை நாம் எப்படியும் அடைந்தே தீரவேண்டும். அது பாலம் கட்டிப் போனாலும் சரி அல்லது தவம் செய்து போனாலும் சரி. எப்படியும் எடுத்த வேலையை மனம் தளராமல் செய்ய வேண்டும் ” எனக் கூறினார்.

பின்னர் அனுமாரிடம்  இலங்கைக் கோட்டையின் அமைப்பு எப்படி இராவணனின் படை பலம் எவ்வளவு பாதுகாப்பு அமைப்பு எவ்விதம் உள்ளது ?” என்று பல கேள்விகளையும் அவர் கேட்டார். அனுமாரும் இலங்கைவாசிகளைப் பார்த்தால் அவர்கள் எவ்வித குறையும் இன்றி வாழ்வதாகவே தெரிகிறது. இலங்கை மிகப் பெரிய பட்டணம். அதில் நால்வகைப் படைகள் தக்க முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. அதற்குள் போக நான்கு கோட்டை வாசல்கள் உண்டு. அங்கு எதிரிகளை அழிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோட்டையைச் சுற்றிலும் ஆழமான அகழி உள்ளது. அதனைத் தாண்டிச் செல்வது சுலபமல்ல. எதிரிகள் தம் படைகளோடு திடுதிப்பென அதற்குள் சென்று விடமுடியாது.

 அகழிகளைக் கடக்க மரப்பாலங்களை அவ்வப்போது உயர்த்தி தாழ்த்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே இலங்கை நன்கு பாதுகாப்புடன் உள்ளது என்பதை அறியலாம். அது மட்டுமல்ல இராவணனிடம் எப்போதும் போர் புரிய படைகள் தயாராகவே உள்ளன.

போருக்கென படை தயாரிக்க வேண்டியது இல்லை. இதெல்லாம் போக இலங்கையைப் பாதுகாக்க சுற்றிலும் சமுத்திரமும் ஒருபுறம் திரிகூட மலையும் உள்ளதால் அதனை அடைவது சிரமமே. இவ்வளவும் கடந்தால் அடர்ந்த காடுகள். இவற்றைத் தாண்டினால் கோட்டையைச் சுற்றிலும் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள். பயங்கரமான அரக்கர்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். நான் பல அரக்கர்களைக் கொன்று வந்திருக்கிறேன். பல இடங்களை நாசம் செய்து விட்டேன்.

ஆதலால் இப்போது இலங்கைக்குள் நுழைவது சற்று சுலபமாக இருக்கலாம். நம்மிடம் பல இணையற்ற வீரர்கள் இருக்கிறார்களே!  அங்கதன் துவிவீதன் மைந்தன் ஜாம்பவந்தன் பனகன் நளன் நீலன் முதலிய சேனைத் தலைவர்கள் உள்ளனர். இவர்களால் இலங்கையில் உள்ள அரக்கர்களோடு போரிடமுடியும். எனவே ஒரு நல்ல வேளை பார்த்து இலங்கை மீது படை எடுத்துக் செல்ல நீங்கள் முடிவு செய்துவிடுங்கள் ” என்றார்.


அதையெல்லாம் இராமர் நன்கு கேட்டு விட்டு சுக்ரீவனிடம்  அனுமார் கூறியபடி இலங்கை மீது படை எடுத்துச் செல்வோம். இன்றே இப்போதே கிளம்பலாம். இப்போது உச்சிவேளை இதை அபிஜித்து என்ற நல்ல முகூர்த்த காலம் எனக்கூறுவர். இந்த வேளையில் ஆரம்பிக்கும் வேலை வெற்றிகரமாக முடியும். மேலும் இன்று பங்குனி உத்திரம். என் பிறப்பு நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு அனுகூலமானது. மேலும் பல நல்ல அறிகுறிகள் சேர்ந்து இருப்பதால் இந்த முகூர்த்த வேளையிலேயே நாம் கிளம்பலாம் ” என்றார்.

உடனே படைத்தலைவனான நீலன் இராமரின் ஆலோசனைப் படி படையை அமைக்கலானான். படைமுன் செல்லும் வானர வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். படையின் இருபுறமும் செல்லும் வானர வீரர்களையும் குறிப்பிட்டான். பின்புறமாகச் செல்லும் படை வீரர்களையும் நியமித்தான். உணவுப் பொருள்களைச் சேகரிக்க வானரங்களையும் செல்லும் வழியைக் காட்ட பல வானரங்களையும் நியமித்தான். இப்படியாக அவன் தக்க முன்னேற்பாடுகளை எல்லாம் செய்து விட்டான்.

எல்லாம் செய்து முடித்தபிறகு சுக்ரீவன் இனி யாவரும் கிளம்புங்கள் எனக்கட்டளை இடவே வானரங்கள் உற்சாகத்தோடு கோஷங்கள் போட்டவாறே பல இடங்களில் இருந்தும் கிளம்பி வந்தன. ஒரு பெருத்த கடலே தென் திசையை நோக்கிச் செல்வதுபோல இருந்தது. அனுமார் இராமரைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டார். இலட்சுமணனை அங்கதன் தூக்கிக் கொண்டான்.

வானரங்கள் சிரித்துக் கொண்டும் குதித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் உற்சாகம் கரை புரண்டு ஓடிச் செல்லலாயினர். ரிஷபன் நீலன் குமுதன் ஆகியோர் முன் நின்று வழி காட்ட அந்தப் பெரிய வானரசேனை இலங்கையை நோக்கி செல்லலாயிற்று. வெகு சீக்கிரத்திலேயே யாவரும் சமுத்திரக் கரையைச் சென்று அடைந்தனர்.

இராமரும் இலட்சமணனும் சுக்ரீவனுமாக மகேந்திர மலையின் மீது ஏறிச் சுற்றிலும் பார்த்தனர். அங்கிருந்து கடலைப் பார்த்துவிட்டு அவர்கள் கீழே இறங்கி வந்தனர். கடற்கரை அருகே போய் கடலையும் நன்கு கவனித்தனர்.

அதன் பிறகு இராமர் சுக்ரீவனிடம்  இனி நாம் கடலைக் கடக்க வேண்டியதுதான். வேறு நிலப்பரப்பு ஒன்றும் இல்லை. நாம் யாவரும் இங்கேயே தங்கி அதற்கான வேலையைச் செய்வோம். யாரும் இங்கு இருந்து வெகு தூரம் போகவேண்டாம். ஒரு வேளை எதிரிகளுக்கு நம் நடமாட்டம் தெரிந்து நம்மைத் தாக்க வந்தால் அவர்களை எதிர்க்க எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும் ” என்றார்.

சுக்ரீவன் அந்த வானர சேனையை மூன்று பகுதிகளாகப் பிரித்தான். யாவரும் கோசமிட்டுக்கொண்டு நின்றனர். கடலின் கொந்தளிப்பால் ஏற்பட்ட சத்தம் கூட வானரங்கள் போட்ட கூச்சலில் யாருக்கும் கேட்காமல் போயிற்று. யாவரும் அந்த மாபெரும் கடலைப் பார்த்து நின்றனர். அதனை எப்படிக் கடப்பது என்ற மலைப்பு தோன்றியது.
நீலன் முறைப்படி சேனைத் தலைவன் ஆனான். சேனையின் பக்க பலத் தலைவர்களாக மைந்தனும் துவிவீதனும் பொறுப்பேற்றனர்.


இவ்வாறு பல விதமான சேனையின் அமைப்பை ஏற்படுத்தியாகி விட்டன.
இராமர் ஓரிடத்தில் அமர்ந்து சீதையைப் பற்றிய நினைத்துக் கொண்டு இருந்தார். இலட்சுமணனும் அவரருகே இருந்து அவர் துயரப் பட்டுக் கூறும் வேதனை நிறைந்த மொழிகளை கேட்டுக் கொண்டிருந்தார். மெது மெதுவாக பொழுதும் போய் மாலையாகி விட்டது.

இலட்சுமணன் இராமருக்கு ஆறுதல் மொழிகளைக் கூறித் தேற்றினார். அதன் பின்னர் இராமரும் மாலையில் செய்யும் சந்தியாவந்தனத்தைச் செய்தார். அதன் பிறகு யாவரும் தத்தம் வேலைகளில்   மூழ்கினர்.

இதே சமயம் இலங்கையில் இராவணன் மிகவும் கோபம் கொண்டு அரக்கர்களிடம் வார்த்தைகளை நெருப்புப் பொறி தெறிப்பதுபோல அள்ளி விட்டுக் கொண்டு இருந்தான்.  இலங்கைக் கோட்டைக்குள் இதுநாள் வரை யாருமே நுழைய முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு குரங்கு உள்ளே புகுந்து வந்து பெரிய பெரிய அரக்கர்களை அழித்ததோடு அல்லாமல் நகருக்கே தீ மூட்டி நாசப்படுத்தி விட்டது. இது எவ்வளவு பெரிய அவமானம். அது மட்டுமா கட்டுகாவலோடு சிறைப்படுத்தப்பட்ட சீதையைக் கண்டு அது அவளோடு பேசிவிட்டுப் போய் இருக்கிறது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு நாம் பேசாமல் இருந்து இருக்கிறோம். இப்போதோ அந்த இராமர் பல்லாயிரம் வானரங்களோடு இலங்கை மீது படை எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறானாம். சுக்ரீவனின் துணையோடும் இலட்சுமணனின் துணையோடும் உள்ள அவன் எப்படியும் கடலைக் கடந்தே விடுவான். இதில் சந்தேகமே இல்லை. கடலை வற்றச் செய்தோ அல்லது வேறு எந்த உபாயத்தாலோ கடலைக் கடந்து இலங்கை மீது படை எடுத்து வந்தால் அந்தப் படை எடுப்பை நாம் எப்படி எதிர்ப்பது என்ன செய்வது என்று நீங்கள் கூறுங்கள் ” என்றான்.

அதுகேட்டு மற்ற அரக்கர்கள்  அரக்கர்களின் மாபெரும் மன்னரே! உங்களுக்கு திடீரென ஏன் சந்தேகம் வந்து விட்டது நமக்கு பலமில்லையா தைரியம் இல்லையா ஆட்கள் இல்லையா நம் சக்திதான் எவ்வளவு பலவிதமான ஆயுதங்கள் மந்திர தந்திரங்கள் தெரிந்துள்ள அரக்கர்கள் இருக்க நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?உங்களது சக்திதான் மூவுலகிற்கும் தெரிந்ததாயிற்றே. உங்களை யாரால் என்ன செய்ய முடியும் குபேரனையே வென்று அவனது புஷ்பக விமானத்தை நீங்கள் கொண்டு வரவில்லையா மயனே உங்களுக்குத் தன் மகளான மண்டோதரியை விவாகம் செய்து கொடுத்து அடங்கிவிடவில்லையா ?
 வாசுகி தட்சகன் போன்ற சர்ப்ப மன்னர்கள் உங்களுக்கு அடங்கிக் கிடக்கிறார்களே. மாயா சக்தியில் கை தேர்ந்தவர்களான காலகேயர்கள் உங்களோடு போரிட்டு முடிவில் தோற்றுப் போகவில்லையா வருணன் ,எமன் போன்ற தேவர்கள் உங்களுக்கு அடங்கிவிடவில்லையா ?இவர்களை எல்லாம்விட அந்த இராமன் சக்தி வாய்ந்தவனா பெரிய பெரிய வீரர்களை அடக்கிய உங்களுக்கு இந்த இராமன் கொசுவுக்குச் சமமானவன். மேலும் உங்கள் மகன் இந்திரஜித்து இருக்கிறானே. பல வரங்களைப் பெற்ற அவன் இந்திரனையே வென்றவன். இப்படிப்பட்டவனால் இராமரையே ஒரு கட்டுக்கட்டி நிமிடத்தில் சிறைப்பிடித்து விட முடியும். எனவே நீங்கள் சற்றும் கவலைப்படாதீர்கள். அந்த வானரமான அனுமான் செய்த சேஷ்டைகளைப் பற்றி நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள் ” எனக் கூறினார்கள்.

இது போலவே பிரகஸ்தனும் துன்முகனும் வச்சிரதம்ஷ்ட்ரனும் கும்பகர்ணனின் மகன் நிகும்பனும் வீராவேச   மொழிகளைக் கூறினர். வச்சிரகன் என்பவனோ எல்லா வானரங்களையும் விழுங்கி விட்டு வரமுடியுமெனக் கூறினான். இப்படி எல்லாம் ஒவ்வொருவரும் தம் வீரப்பிரதாபங்களை எல்லாம்
எடுத்துக் கூறி வானரப்படைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறலாயினர். இராவணனும் அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான்.                             

(தொடரும்)