Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, 3 February 2014

அயோத்தியா காண்டம் - 1

தசரதன் தன் இரு புதல்வர்களான பரதனையும் சத்துருகனனையும் கேகய நாட்டிற்கு அனுப்பி வைத்தான். அவர்களை விட்டுப் பிரிந்தபோதிலும் அவன் தன்னருகே இராமன் எப்போதும் இருந்ததால் சற்றும் மனக்கிலேசம் கொள்ளவில்லை. ஏனெனில் இராமன் என்றால் அவ்வளவு பிரியம் அவனுக்கு.
 
இராமன் தசரதன் மனத்தை மட்டுமா கவர்ந்தான்? அயோத்தி மக்கள் முழுவதையுமே தனது நற்குணங்களால் கவர்ந்து விட்டான். அவனை யாவரும் போற்றியும் பாராட்டியும் வந்தனர். இப்படி இருக்கையில் ஒருநாள் தசரதன் `எனக்கோ வயதாகி விட்டது. இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து அரசாங்கப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட வேண்டும்' என மனத்தில் நினைத்துக் கொண்டான். தன் எண்ணத்தை அவன் மந்திரிகளிடம் கூற அவர்களும் மன்னன் சொல்வதில் நியாயம் இருப்பதால் அதை ஆமோதித்தனர்.
 
சிற்றரசர்களும் மக்களும் இது பற்றி என்னை நினைக்கிறார்களோஎன தசரதன் அறிய விரும்பினான். சிற்றரசர்களையெல்லாம் ஒன்று கூட்டினான். யாவரும் தர்பாரில் அமர்ந்திருக்க மக்களும் திரளாகக் கூடி இருந்தனர். எள் போடக் கூட இடமில்லை. அந்தளவிற்குக் கூட்டம் அலைமோதியது. எங்கும் நிசப்தமாக இருந்தது. யாவரும் தசரதன்  சொல்லப் போவதையே கேட்க ஆவலாக இருந்தனர்.

அப்போது தசரதன் எழுந்து "மகாஜனங்களே, இவ்வளவு நாள்களாக நான் ராஜ்ஜியபாரம் செய்துவிட்டேன். என் மைந்தர்களில் மூத்தவனான இராமனை அரியாசனத்தில் அமர்த்துவது நல்லது என நினைக்கிறேன். இதில் உங்கள் யாவருக்கும் சம்மதந்தானே?" எனக் கேட்டான்.
 
அதைக் கேட்ட யாவரும் மகிழ்ந்து போயினர். எல்லாரும் ஒரே சமயம் ஒரு குரலில் "ஆகா, எங்களுக்குப் பரமானந்தமே. இராமனது பட்டாபிஷேகத்தைக் கண் குளிரக் கண்டுகளிக்கவே விரும்புகிறோம்" என்று கூறினர்.
 
பின்னர் வசிஷ்டர், வாமதேவர் ஆகியோரிடம் தசரதன் "பெரியோர்களே, இந்த மாதத்திற்குள் ஒரு நல்ல முகூர்த்தம் பாருங்கள். இராமனின் பட்டாபிஷேகத்தை விரைவிலேயே நடத்தி விட வேண்டும்" என்றான்.
 
அவர்களும் ஒரு முகூர்த்தத்தைக் குறிப்பிட பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் முனைந்தனர். தசரதனும் இராமனை அழைத்துவரச் செய்தான்.
 
இராமன் வந்ததும் "இராமா, உனக்குப் பட்டாபிஷேகம் செய்து அரியாசனத்தில் அமர்த்த முடிவு செய்துவிட்டேன். மக்கள் மனம் மகிழ ஆட்சிபுரிந்து வருவாயென்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை" என்றான். இராமனும் அப்படியே செய்வதாகக் கூறி தந்தையை வணங்கிச் சென்றான். தர்பாரும் கலைந்தது.
 
கௌசல்யை இந்த நற்செய்தி அறிந்ததும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தாள். தனக்கு அச்செய்தியைக் கூறியவர்களுக்குப் பல விலையுயர்ந்த பொருள்களைப் பரிசாக அளித்தாள். தசரதன் தன் மந்திரிகளிடம் "நாளையதினம் நல்ல நாளாகும். இது வசிஷ்டர் முதலியோர் குறிப்பிட்ட நாளாகும். இந்த முகூர்த்தத்திலேயே இராமனது பட்டாபிஷேகத்தை நடத்தி விடலாம்" எனக் கூறினான். மந்திரிகளும் அதை ஆமோதித்தனர். மீண்டும் இராமனை அழைத்து வரும்படி தசரதன் ஆளை அனுப்பினான்.
 
இராமனும் வந்து தசரதனை வணங்கவே அவன் இராமனை இருகைகளாலும் பற்றி நிறுத்தித் தழுவிக் கொண்டு தன்னருகே அமரச் செய்தான்.

பின்னர் அவனிடம் "இராமா, என் ஜாதகத்தில் ஒரு தோஷம் இருப்பதை சோதிடர்கள் கூறி இருக்கிறார்கள். மேலும் இப்போது சில நாள்களாக கெட்ட கனவுகளையெல்லாம் கண்டு வருகிறேன். எனக்கும் மிகவும் வயதாகிவிட்டது. எனவே எனது உயிர் இவ்வுடலை விட்டுப் பிரியும் முன்னர் உன்னை அரச கோலத்தில் நான் காண விரும்புகிறேன். நாளைய தினம் நல்ல நாளாகும். எனவே இன்று இரவு அதற்கான சங்கல்பம் போன்றவற்றை செய். உபவாசம்இருந்து விரதம் மேற்கொள். பரதன், சத்துருக்னன் ஆகியோர் இல்லையே என நீ கவலைப் படாதே. இதை விரைவிலேயே முடிக்க வேண்டுமென என் உள் மனம் கூறுகிறது" என்றான்.
 
இராமனும் தசரதன் கூறியவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டான். பின்னர் அங்கிருந்து தன் தாயான கௌசல்யாதேவி இருக்குமிடத்தை அடைந்தான். அவள் லட்சுமிதேவியைப் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதைக் கண்டான். முன்னரே பட்டாபிஷேகம் பற்றிய செய்தி பரவிவிட்டதால் சுமித்திரை சீதையுடன் அங்கு வந்தாள். இலட்சுமணனும் வந்து சேர்ந்தான்.
 
இராமன் தன் தாயை வணங்கித் தனக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போவதைக் கூறி "அம்மா, நாளைய தினம் பட்டாபிஷேகம். நீயே உன் கையால் என்னையும் சீதையையும் அலங்கரித்துவிடு" என வேண்டினான். அதன் பின்னர் இலட்சுமணனிடம் "தம்பி இலட்சுமணா, நீயும் என்னோடு எப்போதும் இருந்து ஆட்சியில் உதவவேண்டும். நாம் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தோம். இருக்கிறோம். இனியும் அப்படியே இருப்போம். நான் அரசனென்றால் நீயும் அரசன் என்றே பொருள். என் சுக துக்கங்களில் உனக்கும் சரிபாதி பங்கு உண்டு. இதை என்றும் நான் மறக்கவே மாட்டேன்" என்றான்.
 
இலட்சுமணன் மகிழ்ந்து போனான். அண்ணனை வணங்கி "அண்ணா இந்த வார்த்தைகளை நீங்கள் கூறவும் வேண்டுமா? உங்களை விட்டு என்றுமே நான் பிரிந்ததில்லை. அப்படி இருக்கவும் என்னால் முடியாது. எனவே கண்டிப்பாக என்றும் எப்போதும் நான் உங்களோடுதான் இருப்பேன், இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றான்.

அண்ணன், தம்பி இருவரும் கௌசல்யாதேவியை வணங்கி விடைபெற்றுச் சென்றனர். அன்றிரவு இராமனும் சீதையும் முறைப்படி உபவாசமிருந்து விரதம் ஏற்றனர். நகர் முழுவதும் ஒரே குதூகலத்தில் ஆழ்ந்தது. வீதிகளிளெல்லாம் தோரணங்கள் கட்டப்பட்டன.
 
வீட்டுவாசல்களில்எல்லாம் பலநிறங்களில் கோலங்கள் அற்புதக்கலை வடிவில் அழகழகாக விளங்கின. எங்கும் களிப்பும் மகிழ்ச்சியும் புன்னகையுமே தென்பட்டது. பட்டாபிஷேகக் குதூகலம் ஒவ்வொரு வீட்டிலும் காணப்பட்டது. வசிஷ்டர் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அதற்கென உத்தேசிக்கப்பட்ட இடத்தில் செய்யலானார். இராமன் புனித நீராடி சீதையுடன் அங்கு சென்று ஹோமம் செய்தான். பின்னர் நாராயண தியானம் செய்து கண்ணயர்ந்தான். விடியற்காலை வேளையில் பள்ளியெழுச்சி பாட அவன் எழுந்து காலை நேமங்களைஎல்லாம் செய்தான். மங்கள வாத்தியங்கள் முழங்கின.
 
ஆனால் காரிருள் கொண்ட இரவு தான் என்ன மாயாஜாலம் செய்கிறது! பட்டாபிஷேகத்திற்கு முந்திய இரவில் கைகேயியின் வேலைக்காரியான மந்தரை என்னும் கிழவி கைகேயியிடம் என்ன சொன்னாள் தெரியுமா? அவளுக்கு முதலில் இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போவது தெரியவில்லை. ஆனால் திடீரென எங்கும் ஒரே மகிழ்ச்சி ஏற்படவே அதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
 
அதைக் கேட்டதும் அந்த கூனியான மந்தரைக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. முகத்தைக் கடுகடுப்பாக்கிக் கொண்டு நேராகக் கைகேயியின் அறைக்குச் சென்றாள். அவள் படுத்துஇருப்பதைக் கண்டு "உம் எழுந்திரு. இது படுத்துத் தூங்கும் வேளையா? உன் வாழ்வே குலையப்போகிறது. உன்னைப் பற்றிய நினைவு இனி அரசருக்கு ஏன் வரப்போகிறது! இனி நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று வார்த்தைகளைக் கொட்டினாள். அப்போது கைகேயி "என்ன மந்தரை? என்ன விசேஷம்? ஏன் வரும்போதே முணுமுணுக்கிறாய்? என்ன நடந்துவிட்டது?" எனக் கேட்டாள்.

அதற்கு அக்கூனி "என்னவா? நாளைக்கு இராமனுக்கு பட்டாபிஷேகமாம்" என்றாள். உடனே கைகேயி "அப்படியா நிஜமாகவா? இந்தா இந்த ஆபரணத்தைப் பெற்றுக்கொள். என்னிடம் காதுக்கினிய நல்ல செய்தி சொன்னதற்கு பரிசு" என்றாள் எழுந்து உட்கார்ந்தவாறே. அப்போது கூனி "பரிசா! எனக்கு எதற்கு? ஏதோ உனக்கு நல்லது செய்யலாமென்று மனம் பதறி ஓடிவந்தேன். இது மகிழ்ச்சிப்படவேண்டிய வேளையா?" என்று வினவினாள்.
 
கைகேயி மந்தரையின் மனத்தைக் கண்டாளா என்ன? ஆனால் மந்தரையோ "அடப் பைத்தியமே நீ இப்படி வெகுளியாக இருப்பாயென நான் நினைக்கவே இல்லை. உன் தலையில் எப்படிப் பட்ட இடி விழப்போகிறதென்று உனக்குத் தெரியுமா? அதை அறியாமல் இப்படி மகிழ்ச்சியடைகிறாயே!
 
இனி ராமன் அரசன் ஆனால் கௌசல்யையின் கைதான் ஓங்கப்போகிறது. அவள் காலடியில் நீ என்றென்றும் வேலைக்காரி போல விழுந்து கிடக்க வேண்டியதுதான். இந்த அரண்மனையில் ஒரு துரும்பை எடுத்துப் போடக் கூட இனி நீ அவளது அனுமதி பெற்றேயாக வேண்டும். அது மட்டுமா? நீ உன் மைந்தன், உன் மருமகள் எல்லாரும் அவள் சொன்னபடி ஆட வேண்டும். இனி இந்த அரண்மனையில் உனக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது?

அதை நினைத்தால் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது" என்றாள். கைகேயி அதைக் கேட்டு கற்சிலையாகிவிட்டாள். மெதுவாக மந்தரையின் சொற்கள் அவளது மனத்தில் பதியலாயிற்று. அவளும் சற்று யோசிக்கலானாள். அப்போது மந்தரையும் "அமாம்! இந்தப் பரிசை நீ பரதனுக்கு பட்டாபிஷேகம் எனக் கூறிக் கொடுத்தாலே நான் பெற்றுக் கொள்வேன். பரதன் இங்கு இல்லை. தாய்மாமன் வீட்டில் இருக்கிறான். இந்த சமயம் பார்த்து பட்டாபிஷேகம் நடக்கிறது. அவன் இங்கு இருந்தால் நீ அவனுக்கு பட்டாபிஷேகம் நடத்தச் சொல்லலாமே. அதைத் தெரிந்துதான் இப்படி ஏற்பாடு செய்து, பட்டாபிஷேகம் செய்ய முனைந்து விட்டார்கள். ராஜாவிற்கு உன்மீது சிறிதும் பிரியமே இல்லை" என்றாள்.
 
கைகேயியின் மனம் அதிவேகமாகச் செயல் புரியலாயிற்று. அதுவரை அவளுக்கு இராமன், பரதன் என்ற பாகுபாடு இல்லாமலே இருந்தது. இராமனைத் தன் மைந்தனாகக் கருதி வந்தாள். ஆனால் கூனியின் வார்த்தை முதலில் இல்லையென்றால் சிறிது நேரத்தில் அவள் மனத்தைக் கலைத்து விட்டது.
 
மந்தரையோ "கௌசல்யை இலேசுப்பட்டவளா, மகா அழுத்தக்காரி. எப்படியோ காரியத்தை சாதித்துக் கொண்டு விட்டாள்? இங்கு உன் மகன் இல்லாத வேளையாகப் பார்த்து இராமனுக்குப் பட்டாபிஷேகத்தை நடத்த ஏற்பாடு செய்து விட்டாள்.
 
எவ்வளவு சாமார்த்தியமாக வேலையை செய்திருக்கிறாள்! நீ மட்டும் கெட்டிக்காரியானால் இந்த பட்டாபிஷேகம் நடக்கவிடாமல் செய். பரதனுக்கு பட்டம் கட்டி அவனுக்கு தடையாக இருக்கும் இராமனைக் காட்டிற்கு அனுப்ப வழி பார். அப்போது தான் உனக்கு சுகவாழ்வு" எனக் கூறினாள்.
 
சிறிது சிறிதாக மாறிக் கொண்டு வந்த கைகேயியின் மனம் இப்போது முற்றிலும் மாறி விட்டது. மந்தரை கூறியது வேத வாக்காகிவிட்டது. சிறிது நேரங்கழித்து கைகேயி அவளிடம் "ஆமாம் பரதனுக்கு அரியாசனம். இராமனுக்கு ஆரண்யவாசம். இதுதான் என் லட்சியம்" எனக் கூறினாள்.

No comments:

Post a Comment