Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, 3 February 2014

ஆரண்ய காண்டம்- 6

இலங்கையைச் சென்றடைந்த பின்னர் இராவணன் பலசாலிகளான எட்டு அரக்கர்களைக் கூப்பிட்டு "நீங்கள் பலவித ஆயுதங்களோடு ஜனஸ்தானத்திற்குச் செல்லுங்கள் அங்கு அரக்கர்கள் யாருமே இல்லை. இருந்தவர்களை எல்லாம் இராமன் கொன்று விட்டான். அவன் நமது பகைவனாகி விட்டான். இனி அவனை ஒழிப்பதே என் நோக்கம். எனவே நீங்கள் ஜனஸ்தானத்திற்குப் போய் இராமனது நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களை எனக்கு அவ்வப்போது தெரிவித்து வர வேண்டும்.
 
மேலும் அந்த இராமனைக் கொல்ல நீங்களும் முயலுங்கள். உங்களுடைய பலம் எவ்வளவு என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் இந்த வேலையை துணிந்து உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்றான். அவர்களும் அவ்விதமே செய்வதாகக் கூறி அங்கிருந்து ஜனஸ்தானத்திற்குக் கிளம்பினர்.
 
இராவணன் தான் கவர்ந்து வந்த சீதையைப் பற்றி எண்ணலானான். சற்று நேரத்திற்குப் பிறகு சீதை இருக்குமிடத்திற்குச் சென்றான். அரக்கிகளுக்கிடையே சீதை கண்ணீர் உகுத்தவாறே உட்கார்ந்து இருந்தாள். அது கண்டு இராவணன், சீதை தனது வீரதீர பராக்கிரமத்தையும் அளவில்லா செல்வத்தையும் பார்த்தால் தனது சோகத்தை மட்டும் அல்லாமல் தனது கணவனான ராமனையே அவள் மறந்து விடுவாள்.

தவிர தனது தங்க மாளிகையில் தன்னுடன் தங்குவதை அவள் பெரும் பாக்கியமாக கருதுவாள் என்று எண்ணினான். ஆகையால் அவன் சீதையிடம், "வா, நான் உனக்கு எனது அரண்மனையைக் காண்பிக்கிறேன்" என்று அழைத்தான். சீதை எவ்வளவோ மறுத்தும், அவளது விருப்பத்திற்கு மாறாக அவன் கட்டாயப் படுத்தித் தன் அரண்மனை முழுவதையும் அவளைப் பார்க்கச் செய்தான்.
 
இராவணனது அரண்மனை மிகப் பெரியது. அதில் எவ்வளவோ பேர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பலவிதமான பறவைகள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆங்காங்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல விலையுயர்ந்த வேலைப்பாட்டுடன் கூடிய பொருள்கள் இருந்தன. கதவுகளும் தூண்களும் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்கின.
 
ஆங்காங்கு பல தங்கக் கதவுகள், வெள்ளி சன்னல்கள், தந்தத்தினாலான சட்டங்களோடு இருந்தன. உப்பரிகையின் சுவர்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இப்படிப் பட்டக் கண்ணைக் கவரும் மாளிகையைச் சீதைக்குக் காட்டி இராவணன் தனக்குள்ள பெரும் திரவியத்தைச் சுட்டிக் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டான்.
 
கடைசியில் அவன் சீதையிடம் "நீ எனக்கு என் உயிரினும் மேலானவள். நீ மட்டும் எனது ராணியாகிவிட்டால், நான் உன்னை எனது மற்ற ராணிகளை விட முன்னுரிமை அளிப்பேன். உனக்கு சேவை செய்வதற்கு ஆயிரம் அடிமைகளை போட்டு வைப்பேன். வாழ்க்கையில் அனைத்து சுகங்களும் இங்கு கிடைக்கும். இந்த லங்காபுரி தேவர்களின் இருப்பிடமான சொர்க்கத்தை விட மேலானது.
 
இங்கு எவ்விதக் கவலையும் இன்றி உன் காலத்தை கழி. இந்த மாநகரை தேவர்கள் கூட ஜெயிக்க முடியாது. உன்னை இங்கிருந்து விடுவிக்க மூன்று உலகிலும் யாரும் கிடையாது. என்னையும் உனது அடிமையாக்கி இந்த இலங்கையை ஆட்சி புரி. எப்போதோ செய்த பாவத்திற்கு நீ காட்டில் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறாய். இனி உனக்கு நல்ல காலமே. வாழ்க்கை முழுவதும் இனி நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். சோகமாகவே இருந்தால் உனது அழகு கெட்டு விடும்.

ஆகையால் சோகமாக இருப்பதை விட்டு விடு" என்றான். அது கேட்டு சீதை மனம் மாறி விடவில்லை. தனக்கும் இராவணனுக்குமிடையே ஒரு துரும்பை எடுத்துப் போட்டாள். அதன் பிறகு அவள் அவனைப் பார்த்து "என் கணவரான இராமரே என் கடவுள். அவரைத் தவிர வேறு யாரையும் நான் கனவிலும் கருதமாட்டேன்.
 
உனக்கு இனி கெட்டக் காலம் ஆரம்பித்து விட்டது. அவரது கைகளால் உனக்கு அழிவு ஏற்படப் போகிறது. இவ்வளவு கோலாகலத்தோடு விளங்கும் இந்த நகரம் சீர்குலைந்து பாழடையப் போகிறது. நீ என் உடலைச் சிறைப்படுத்தி வைக்கலாம். வேண்டுமானால் துண்டு துண்டுகளாக்கி நறுக்கி சாப்பிடலாம்.
 
ஆனால் என் கற்பை மட்டும் நீ அபகரிக்க முடியாது" என்றாள். இராவணனுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. அவன் "அப்படியா? இதோ பார். இன்னும் பனிரெண்டு மாதங்கள் உனக்கு அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் நீ மனம் மாறினால் சரி. இல்லையேல் உன்னைத் துண்டுதுண்டாக வெட்டித் தள்ளுவேன்" என்றான்.
 
அதன் பின்னர் அவன் அரக்கிகளிடம் "இவளை அசோகவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இவளைச் சுற்றிலும் நீங்களெல்லாரும் காவல் இருங்கள். நயத்தாலோ பயத்தாலோ இவளை என் வழிக்குத் திருப்ப முயலுங்கள்" என்றான். அரக்கிகளும் சீதையை அசோகவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 
அது மிகவும் அழகான இடம். பழங்களும் பறவைகளுமாக மரங்களில் இருந்து மனத்தைக் கவர்ந்தன. சீதையை அவர்கள் ஓரிடத்தில் உட்கார வைத்துத் தாமும் அவளைச் சுற்றிலும் இருந்து காவல் புரியலாயினர். சீதையோ இராமரின் நினைவாகவே இருந்து வரலானாள். அந்தப் பிரிவின் துயரத்தால் அவள் தன் நினைவையே இழந்து விட்டாள் என்றும் சொல்லலாம்.
 
மாŽசனைக் கொன்ற இராமர் ஆசிரமத்திற்குத் திரும்புகையில் ஒரு நரி ஊளைஇட்டது. இதை அபசகுணமாகக் கருதி "சீதைக்கு என்ன நேர்ந்ததோ?" எனக் கவலைப் படலானார். மாŽசனின் மாயம்வேறு அவரது மனத்தை உறுத்தியது.

ஆயினும் இலட்சுமணன் சீதைக்கு துணையாக இருக்கிறானேவென சற்று மனம் தேறினார். சிறிது தூரத்தில் இலட்சுமணன் வருவதைக் கண்டு திடுக்கிட்டார். அவனிடம் "இதென்ன? சீதையைத் தனியாகவா விட்டு வந்தாய்? மாய மாŽசன் கத்தியதைக் கேட்டு நீயும் ஏமாந்துவிட்டாயா? சீதையை அரக்கர்கள் கொண்டு போய் பழிக்குப்பழி வாங்குவார்களே?" என்றார்.
 
அப்போது இலட்சுமணன் சீதை கூறிய கடுஞ்சொற்களை இராமரிடம் கூறி தான் வேண்டாவெறுப்பாகவே ஆசிரமத்தை விட்டுக் கிளம்பியதாகச் சொன்னான். இராமர் இலட்சுமணனோடு அவசர அவசரமாகப் பர்ணசாலைக்குப் போய்ச் சேர்ந்தார். அவர் பயந்ததுபோலவே சீதை அங்கே இல்லை.
 
ஆசிரமத்தைச் சுற்றிலும் பார்த்தார்கள். அப்போது அவள் இருக்கும் தடயம் இல்லை. இருவரும் அவளைத் தேடிக் கொண்டு காட்டினுள் சென்றனர். எதிரில் கண்ட பட்சிகளைக் கேட்டனர். "சீதா, சீதா!" என இராமர் குரல் கொடுத்துப் பார்த்தார். எங்கும் அவருக்கு சீதை இருப்பது போலவே பிரமை ஏற்பட்டது.
 
அண்ணணின் இந்த நிலையைக் கண்டு "அண்ணா, வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. இனி நாம் சீதையைத் தேடிக் கண்டு பிடிப்போம். ஒரு வேளை நமக்கு அகப்பட்டாலும் அகப்படலாம்" எனக் கூறினான். மீண்டும் அவர்கள் தேடலாயினர். ஆனாலும் பயனில்லை.

இராமரோ சோகக் கடலில் மூழ்கிப்போனார். சீதை இல்லையேல் இனித் தனக்கு வாழ்வே இல்லையென்றும் யார் முகத்திலும் விழிக்க முடியாதென்றும் புலம்பினார். அதைக் கேட்டு இலட்சுமணன் "அண்ணா, நாம் முழு முயற்சியோடு சீதையைத் தேடுவோம். அவளைத் தேடிக் கண்டு பிடிப்பதையே முதல் வேலையாகக் கொள்வோம்" எனக் கூறி இராமரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
 
காட்டுவழியே ஓரிடத்தில் சீதை சூடியிருந்த மலர்கள் கீழே கிடந்தன. அதை இலட்சமணனும் இராமரும் கண்டனர். இன்னும் சற்று தூரத்தில் சீதையின் அடிச் சுவடுகளும் யாரோ ஒரு அரக்கனின் அடிச்சுவடுகளும் பதிந்து கிடப்பதைக் கண்டனர். இரத்தக் கரை, ஒடிந்து விழுந்த ரதம், இறந்து கிடக்கும் தேரோட்டி, சரிந்து கிடக்கும் குடை ஆகியவற்றை அவர்கள் கண்டனர்.
 
இரத்தத் துளிகளைக் கண்டு சீதையை யாரோ ஒரு அரக்கன் துன்புறுத்தியிருப்பதாக ஊகித்த இராமர் "என் சீதையை மட்டும் உயிரோடு என்னிடம் ஒப்படைக்காவிட்டால் இந்த அரக்கர் குலத்தையே அடியோடு அழித்து விடுகிறேன்" என்று சபதம் செய்தார்.
 
அவர்கள் சற்று தூரம் போகவே அங்கு இறக்கும் நிலையில்உள்ள ஜடாயுவைக் கண்டனர். இரத்தம் தோய்ந்து கிடக்கும் ஜடாயுவே சீதையைக் கொன்றிருக்க வேண்டும்என நினைத்து இராமர் தன் வில்லை எடுத்து அம்பை அதில் வைத்து ஜடாயுவைக் கொல்ல ஆயத்தமானார்.

கோபம் நல்லவனின் கண்களைக் கூடத் திரையிட்டு மறைத்து விடுகிறது. இராமர் தன்னைக் கொல்லத் துணிந்தது கண்டு ஜடாயு "ஐயா, என்னைத்தான் இராவணன் அடித்துக் குற்றுயிராக்கி விட்டானே. இன்னும் சற்று நேரத்தில் நானே இறந்து விடுவேன். பின்னர் நீங்கள் ஏன் கொல்லப் போகிறீர்கள்? சீதையைக் கவர்ந்து சென்று கொண்டிருந்த அந்த இராவணனை நான் எதிர்த்து அவனது தேரை உடைத்து தேர்ப்பாகனைக் கொன்று வீழ்த்தினேன்.
 
அவனோ தனது வாளினால் என் இறக்கைகளை அறுத்துத் தள்ளி விட்டான். அதன் பிறகு சீதையைத் தூக்கிக் கொண்டு ஆகாய வழியாகச் சென்றும் விட்டான்" என்றான். இதைக் கேட்டு இராமர் சீதையை அரக்கன் யாரும் கொன்று தின்று விடவில்லையென அறிந்து சற்று ஆறுதலடைந்தார். சீதையைக் கவர்ந்து சென்றவன் இராவணன் என்றும் தெரிந்து போயிற்று. சட்டெனத் தன் வில்லைக் கீழே போட்டு அவர் ஜடாயுவைத் தழுவிக் கொண்டார்.
 
பின்னர் அவர் "இந்த இராவணனுக்கு நான் என்ன தீங்கிழைத்தேன்? என் உயிருக்கு உயிரான சீதையைக் கவர்ந்து கொண்டு சென்று விட்டானே. அவன் இருக்குமிடம் யாது?" என்று கேட்டார். ஜடாயுவும் "அவன் தென் திசையை நோக்கிச் சென்றான். அந்த இராவணன் குபேரனின் தம்பி" எனக் கூறியவாறே உயிரை விட்டு விட்டான்.
 
ஜடாயுவிடமிருந்து முழு விவரங்களைக் கேட்டு அறிந்து கொள்வதற்கு முன்பே அவனது உயிர் உடலை விட்டுப் பிரிந்து விட்டது. இந்த செய்தியைச் சொல்லத்தான் ஜடாயு உயிர் தரித்திருந்தானென்பதைக் கண்டு இராமரது உள்ளது நேகிழ்ந்தது. சாஸ்திர முறைப்படி ராமர் ஜடாயுவின் அந்திமக் கிரியைகளை செய்து முடித்தார். அதன் பின்னர் இராமரும் இலட்சுமணனும் ஜடாயு காட்டிய தென்திசையில் சீதையை தேடிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.             


(தொடரும்)

No comments:

Post a Comment