Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, 3 February 2014

கிஷ்கிந்தா காண்டம் - 1

வசந்தம் வந்தது. எங்கும் கண் குளிர்க் காட்சிகள். கானகத்தில் உள்ள குயிலினங்களின் இனிய கானம் மனத்திலே சொல்லொணாத புல்லரிப்பைத் தரத்தான் செய்தது. இயற்கையின் இசையும் நாட்டியமும் எல்லாரையும் கிறுகிறுக்க வைத்தன.
 
ஆனால் சீதையை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் இராமரின் மனத்திலோ சோகமே குடி கொண்டு இருந்தது. இந்த அற்புதக் காட்சிகளைஎல்லாம் காணக்காண சீதையைப் பற்றிய நினைவே ஏற்பட்டுக் கொண்டிருக்கலாயிற்று. அவர் அதனை இலட்சுமணனிடம் சொல்லி அத்தகைய காட்சிகளை அனுபவிக்க சீதை தம்மோடு இல்லையே என வருந்தி கண்ணீர் வடிக்கலானார்.
 
அப்போது இலட்சுமணன் அவரைத் தேற்றியவாறே "நடந்தது நடந்து விட்டது. இப்போது நாம் அந்த இராவணன் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டு பிடித்து அவளை விடுவித்து வருவதேயாகும். இதற்கு நாம் மனத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டுமேயல்லாது சோர்ந்து விடக் கூடாது" எனக் கூறினான்.
 
அதைக் கேட்டு இராமர் மனம் தேறி தாம் செய்ய வேண்டியதைக் குறித்து யோசித்தவாறே, காட்டில் சீதையைத் தேடிக் கொண்டு செல்லலானார். அவர்களிருவரும் பம்பா நதிக்கரைக்கு வந்தது முதல் ரிஷியமுகபர்வதத்திலுள்ள சுக்கிரீவன் என்னும் வானர மன்னன் அவர்களது நடமாட்டத்தைக் கவனிக்கலானான்

இருவர் அப்பகுதியில் சுற்றிச் சுற்றி அலைந்து திரிந்து கொண்டு யாரையோ தேடுவது போலத் தென்பட்டதும் சுக்கிரீவன் மனத்தில் ஒரு ஐயம் ஏற்பட்டது. ஒரு வேளை தனது அண்ணனான வாலி தான் அவர்களை அனுப்பித் தன்னை பிடித்துத் துன்புறுத்த முயல்கிறானோவென எண்ணி அதனைத் தன்னுடன் இருந்தவர்களிடமும் கூறினான்.
 
அதைக் கேட்டு அவனது மந்திரிகளில் ஒருவரான அனுமார் "வாலி ஏன் இந்த இருவரின் உதவியை நாட வேண்டும்? அவனுக்குத் தான் பலம் இருக்கிறதே. அவன் தன் ஆட்களையே அனுப்பலாமே. இவர்கள் வேறு யாரோ? நான் அவர்களிடம் சென்று அவர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டு வருகிறேன்" என்றார்.
 
அது கேட்டு சுக்கிரீவனும் "பேஷ். இது சரியான யோசனை. ஆனால் நீங்கள் இந்த வேடத்தில் செல்லாமல் மாறு வேடத்தில் சென்று வாருங்கள்'‘ என்றான். உடனே அனுமாரும் பிரம்மசாரியைப் போல வேடம் பூண்டு இராமரும் இலட்சுமணனும் இருக்குமிடத்தை அடைந்தார்.
 
அவர்களைக் கண்டு அனுமார் மிகவும் மரியாதையுடன் வணங்கி "ஐயன்மார்களே! நீங்கள் யாரோ? உங்களைப் பார்த்தால் உயர் வம்சத்தில் பிறந்தவர்கள் போலவும் அதுவும் அரசகுமாரர் போலவும் தென்படுகிறதே? ஏன் இப்படித் தவக்கோலம் பூண்டு காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
 
அப்போது இராமரும் இலட்சுமணரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது அனுமார் "எங்கள் அரசரான சுக்கிரீவன் இங்கே அருகில்தான் இருக்கிறார். அவரை அவனது அண்ணனான வாலி நாட்டிலிருந்து துரத்தி விட்டான். நான் அவரது மந்திரி அனுமான். நான் எந்த உருவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்தவன். அதனால்தான் என் உண்மை உருவத்தை விடுத்து பிரம்மசாரியின் வேஷத்தில் வந்தேன்" என்றார்.

அப்போது இராமர் இலட்சுமணனை அனுமாரிடம் பேசும் படிக் கூறவே இலட்சுமணனும் "அனுமாரே, எங்களுக்கும் சுக்கிரீவனைப் பற்றி ஏற்கெனவே தெரியும். நாங்கள் இப்போது அம்மன்னனைக் காணவே விரும்புகிறோம். ஏனெனில் எங்களுக்கு அவன் உதவி தேவை. இவர் எனது தமையனார் இராமர்" எனக் கூறி தங்கள் கதையை விவரமாக அவரிடம் சொன்னார்.
 
முடிவில் இலட்சுமணன் "சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கண்டு பிடிக்க சுக்கிŽவனே உதவுவான் என்று எங்களுக்குக் கபந்தன் என்பவன் தெரிவித்தான். அதனால் தான் நாங்கள் சுக்கிரீவனைக் காண விரும்புகிறோம்" என்றான்.
 
அதைக் கேட்ட அனுமார் "அடடா! நீங்கள் இருவரும் எப்படிப்பட்ட வம்சத்தைச் சேர்ந்தவர்கள்! உங்களைத் தேடிக் கொண்டு சுக்கிŽவன் வர வேண்டியது இருக்க நீங்கள் அவரைத் தேடிக் கொண்டு செல்வது விந்தைதான். எம் அரசர் இந்த உதவியைச் செய்வார். உங்களை நான் சுக்கிŽவனின் முன் அழைத்துச் செல்லக் காத்து நிற்கிறேன்" என்றார்.
 
அனுமாரின் பேச்சும் பண்பாடும் இராமரையும் இலட்சுமணனையும் பெரிதும் கவர்ந்து விட்டன. அவர்களும் அவருடன் செல்லத் தயாராயினர். அனுமார் தன் சுய உருவை அடைந்து அவர்களிருவரையும் தன் தோள்களில் ஏற்றிக் கொண்டு ரிஷியமுகபர்வதத்தை அடைந்தார்.
 
அப்போது சுக்கிரீவன் அங்கே இருக்கவில்லை. மலையபர்வதத்தில் இருக்கவே அனுமார் அங்கு சென்று சுக்கிரீவனிடம் இராமரும் இலட்சுமணனும் அவனைக் காண வந்திருப்பதாகவும், ரிஷியமுக பர்வதத்தில் இருப்பதாகவும் இருவரும் கூறினார். அவர்களோடு நட்பு பூண்டு வாலியைத் தோற்கடிப்பது நல்லதெனவும் அவர் கூறினார். அதைக் கேட்டு சுக்கிரீவனும் மனத்தில் எழுந்த சந்தேகத்தை விட்டொழித்தவனாக வானர உருவை விடுத்துவிட்டு அழகிய தோற்றத்தில் இராமரையும் இலட்சுமணனையும் காண ரிஷியமுக பர்வதத்தை அடைந்தான்.

இராமரைக் கண்டதும் அவன் மனம் புல்லரித்தது. அவரிடம் "உங்களைப் பற்றி அனுமார் விவரமாகக் கூறினார். நீங்கள் எங்களது நட்பை நாடி வந்தது நாங்கள் செய்த பாக்கியமே" என்றான். அவன் இராமர் முன்னால் கை நீட்டவே இராமரும் அதன்மீது தம் கையை வைத்து "இனி நம் நட்பு நிலைத்து இருக்கும்" எனக் கூறி அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். இதற்குள் அனுமார் அக்கினியை மூட்டவே இராமரும் சுக்கிரீவனும் அந்த அக்கினியை வலம் வந்து அதனைச் சாட்சியாகக் கொண்டு தம் நட்பை மேலும் உறுதிப் படுத்திக் கொண்டனர்.
 
சுக்கிரீவன் ஒரு மரக்கிளையையும் அனுமார் ஒரு மரக்கிளையையும் ஒடித்துக் கொண்டு வந்தனர். ஒரு கிளையில் இராமரும் சுக்கிரீவனும் அமர மற்றொன்றின் மீது இலட்சுமணனும் அனுமாரும் அமர்ந்து கொண்டனர்.
 
அப்போது சுக்கிரீவன் "என் தமையனான வாலி எனக்குப் பெருத்த அநீதியை விளைவித்து விட்டான். என் மனைவியைக் கவர்ந்து கொண்டான். இதற்குத் தக்க நியாயம் காண வேண்டும்" என்றான். அப்போது இராமர் "நான் வாலியைக் கொன்று உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறேன்" என்றார்.
 
அப்போது சுக்கிரீவன் "நீங்கள் உங்கள் மனைவியை இழந்து காட்டில் தேடிக் கொண்டிருப்பது பற்றி அனுமார் என்னிடம் கூறினார். இராவணன் யாருமில்லாத போது வந்து சீதையைக் கவர்ந்து சென்றுஇருக்கிறான். சீதை எங்குஇருந்தாலும் தேடிக் கண்டு பிடித்து மீட்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆ! இப்போது தான் நினைவிற்கு வருகிறது.
 
இராவணன் யாரோ ஒரு பெண்ணைக் கவர்ந்து சென்றதை நானே கண்டேன். அவள் கண்ணீர் உகுத்துத் தன் நகைகளைக் கட்டி நாங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கி விட்டெறிந்தாள். அவற்றைக் கொண்டு வருகிறேன்" எனக் கூறிச் சென்றான். சற்று நேரத்திற்கெல்லாம் சுக்கிŽவன் ஆபரணங்களைக் கொண்டுவரவே இராமர் அவையெல்லாம் சீதையின் ஆபரணங்களேயென்று தெரிந்து கொண்டார்.

அவரது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடியலாயிற்று. இலட்சுமணனிடம் அவற்றைக் காட்டி "பார்த்தாயா இவைகளை? சீதையை இராவணன் கவர்ந்து கொண்டு தென் திசைக்குதான் சென்றிருக்கிறான் என்பது இதனால் உறுதிப்படுகிறது. எங்கே இருக்கிறான் அந்த இராவணன்? அவனை இப்போதே கொன்று விடுகிறேன்" எனக் கோபத்தோடு கூறினார்.
 
சுக்கிரீவனோ "இராவணன் எங்கே போனானென்று தெரியாது. ஆனால் சீதையைக் கண்டு பிடித்து மீட்டுவர நான் உங்களுக்கு பரிபூரண உதவி புரிகிறேன்" எனச் சத்தியம் செய்து கொடுத்தான். பின்னர் அவன் "நானும் உங்களைப் போல மனைவியைப் பிரிந்து தானே இருக்கிறேன். எப்படியும் அவளை மீட்க முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இவ்வளவு நாள்களாக இருந்தது. இப்போது அது கை கூடவும் போகிறது. எனவே மனம் தளராது இருந்தால் வெற்றி நமக்கே கிடைக்கும். நீங்கள் வீணாக மனக் கவலை கொள்ள வேண்டாம்" என்று ஆறுதல் மொழிகள் கூறினான்.
 
அது கேட்டு இராமர் "நீ உண்மையிலேயே நண்பனெனக் கூறத் தகுந்தவன். துன்பகாலத்தில் கை கொடுப்பவனே நண்பன். உன்னிடம் அத்தகைய குணம் இருப்பது கண்டு மகிழ்கிறேன்.

இப்போது உடனடியாக நான் உனக்கு எத்தகைய உதவி புரிய வேண்டும்? என்னால் எதையும் செய்ய முடியுமென்பதை திடமாக நம்பு. ஏற்கெனவே வாலியைக் கொன்று உனக்கு பட்டமளிப்பதாக வாக்களித்திருக்கிறேன். அதைச் செய்து முடிக்கிறேன்" என்றார்.
 
இராமர் கூறியதைக் கேட்டு சுக்கிரீவனும் மற்ற வானரர்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தனர். அதன் பின்னர் இராமரும் சுக்கிரீவனும் தமது சங்கடமான அனுபவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கலாயினர். அப்போது சுக்கிரீவன் "என் அண்ணன் வாலி மிகவும் பலம் பொருந்தியவன். என்னை அவன் நாட்டிலிருந்து விரட்டி விட்டான். என் உயிருக்கு உயிரான மனைவியை அபகரித்துக் கொண்டு விட்டான்.
 
என் நண்பர்களையெல்லாம் பிடித்து சிறையில் அடைத்து வைத்து விட்டான். என்னைக் கொல்லவும் அவன் பல முறை முயன்றான். நான் அவனது அம்முயற்சிகளையெல்லாம் முறியடித்து வந்து இருக்கிறேன். முதலில் உங்களைப் பார்த்தபோது கூட வாலிதான் என்னைக் கொல்ல உங்களை அனுப்பியிருக்கிறானோ என்று கூட எண்ணிவிட்டேன். ஆனால் எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் இந்த அனுமார் என் மனத்திலுள்ள சந்தேகத்தைப் போக்கினார்.
 
உங்கள் நட்பும் கிடைத்து விட்டது. இனி வாலி இறந்தது போலத்தான். அவன் இறப்பிலேதான் என் வாழ்வு உள்ளது. அவன் ஒழிந்தால் தான் நான் சுகமடைவேன். இல்லையேல் எனக்கு சுகமில்லை. மனத்தில் நிம்மதி இராது" எனக் கூறினான். இராமரும் "சொன்ன சொல்லைக் காப்பது எங்கள் வம்ச வழக்கம். நான் உனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே தீருவேன். நீ சிறிதும் கவலைப் படாதே. வாலி எவ்வளவு பராக்கிரமசாலியாக இருந்தாலும் அவனை என்னால் அடக்கவோ அழிக்கவோ முடியும்" என்றான். அதைக் கேட்டு சுக்கிரீவன் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தான்.    


 (தொடரும்)

No comments:

Post a Comment