சீதையும் இராமனும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட இலட்சுமணன் "அண்ணா, நீங்கள் காட்டிற்குப் போய்விட்டால் நான் மட்டும் தனித்து இங்கே இருக்க முடியுமா? நீங்களிருக்குமிடமே எனக்கும் இருப்பிடம். எனவே நானும் உங்களோடு வரத் தீர்மானித்து விட்டேன்" என்றான். அது கேட்டு இராமன் "இலட்சுமணா, நீயும் என்னோடு வந்துவிட்டால் அன்னை கௌசல்யையும், சுமித்திரையையும் யார் கவனித்துக் கொள்வார்கள்?
நான் இங்கே இருந்து காட்டிற்குப் போய்விட்டபிறகு நம் தந்தையையும் பார்த்துக் கொள்ள யாராவது இருக்க வேண்டாமா?" என்றான். ஆனால் இராமன் கூறியது எதையும் ஏற்கவில்லை. ஒரே பிடிவாதமாக அவன் தானும் காட்டிற்கு அவர்களோடு வருவதாகக் கூறி விட்டான்.
இலட்சுமணனை வசிஷ்டரிடம் அனுப்பி திவ்விய அஸ்திரங்களை வாங்கி வரும்படி இராமன் அனுப்பினான். அவை அட்சய அம்புராத்தூணி, வில்கள், கவசங்கள் இருவாட்களுமாகும். இலட்சுமணன் இவற்றைப் பெற்றுக் கொண்டு தன் நண்பர்களிடம் தானும் காட்டிற்குச் செல்வதாகக் கூறினான்.
இதன் பின்னர் இராமன் பயணம் மேற்கொள்வதற்கு முன் தன்னிடம்இருந்து பொருள்களையெல்லாம் தானம் செய்தான். வசிஷ்டரின் புத்திரனான சயக்ஞனின் மனைவிக்கு சீதையின் நகைகள் போன்றவற்றை தானம் செய்யச் சொன்னான்.
தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் யாவருக்கும் தானமாகக் கொடுத்து விட்டான். இராமன் தானம் செய்வது கேட்டு தானும் ஏதாவது பெற வேண்டுமென ஒரு பிராமணன் ஓடோடி வந்தான். அவன் அயோத்திக்கருகே ஒரு கிராமத்தில் வசிப்பவன். அவனது குடும்பமோ பெரிது. அதைக் காப்பாற்றிவர அவன் மிகவும் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான்.
எனவே சிறிது பொருள் பெற்றுப் போக அவன் இராமன் முன் சென்றான். அவனது அதிருஷ்டமோ, துரதிருஷ்டமோ, இராமன் தன்னிடம்இருந்த எல்லா பொருள்களையும் தானம் செய்தாகிவிட்டது. எஞ்சிஇருந்தது பசுக்களேயாகும். இராமன் அந்த அந்தணனிடம் "ஐயா, நான் என்னிடமிருந்த பொருள்களைஎல்லாம் தானம் செய்துவிட்டேன். இப்போது இருப்பது என்னுடைய பசுக்களே.
நீங்கள் ஒரு கோலை எடுத்து இங்கிருந்து எவ்வளவு தூரத்திற்கு விட்டெறிகிறீர்களோ அது வரையுள்ள என் பசுக்களையெல்லாம் உங்களுக்கு தானமாகக் கொடுக்கிறேன்" என்றான். அக்கிழ பிராம்மணனும் மகிழ்ச்சிஅடைந்து ஒரு கோலை எடுத்து தன் முழு பலத்தையும் கொண்டு விட்டெறிந்தான். அது சரயு நதியின் மறுகரைக்கு அப்பால் போய் விழுந்தது.
இராமனும் அதுவரை இருந்த தன் பசுக்களை அந்த அந்தணனுக்குக் கொடுத்தான். அந்தணனும் அவற்றைப் பெற்றுக் கொண்டு இராமனை மனதார ஆசீர்வதித்து விட்டு அங்கிருந்து சென்றான். இராமனும், இலட்சுமணனும் சீதையும் தம் மாளிகையில்இருந்து தசரதரிருந்த மாளிகைக்கு நடந்தே சென்றனர். இதற்குள் மக்களிடையே அவர்கள் மூவரும் காட்டிற்குச் செல்லும் பரபரப்பான செய்தி பரவிவிட்டது. மக்கள் தத்தம் இல்லங்களிலிருந்து அவர்கள் செல்வதைக் கண்டு மனம் பொறுமினர்.
சிலர் வெளிப்படையாகவே "இந்தக் கிழட்டு மன்னன் தசரதனுக்கு ஏன் தான் இப்படி புத்தி போய் விட்டதோ? இப்படியா தான் பெற்ற மக்களைப் பரிதவிக்கவிட வேண்டும்? ஒரு பெண் பேயின் வலையில் சிக்கி இப்படியா மதியிழந்து விட வேண்டும்? இனி நமக்கு இந்த நகரில் என்ன வேலை? நாமும் இவர்களோடு காட்டிற்குச் செல்லலாம்" என்று கூறினர். இதையெல்லாம் கேட்டுக் கொண்டே அம்மூவரும் தசரதனின் மாளிகையை அடைந்தனர். சுமந்திரன் அவர்களை அழைத்துக் கொண்டு தசரதன் இருக்குமிடத்திற்குச் சென்றான்.
கை கூப்பிக் கொண்டு தன்னை நோக்கி வரும் இராமனை வரவேற்கச் சென்ற தசரதன் இரண்டு அடிகள் வைத்ததுமே தொப்பென விழுந்து விட்டான். தசரதனைத் தூக்கி மஞ்சத்தில் இருத்தினர். அவனுக்கு நினைவு வந்ததும் இராமன் "அரசே, நான் காட்டிற்குச் சென்று வருகிறேன். என்னோடு சீதையும் இலட்சுமணனும் வருகிறார்களாம்.
நான் எவ்வளவோ தடுத்துக் கூறிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. நீங்கள் எங்களுக்கு காட்டிற்குச் செல்ல அனுமதிஅளியுங்கள்" எனக் கூறினான். தசரதனோ "இராமா, நான் எப்படியோ மதி இழந்து கைகேயிக்கு இந்த வரங்களை கொடுத்து விட்டேன். நீ எனக்கு ஒரே ஒரு உதவி செய்.
இந்த அக்கிரமத்திற்கு நீ உடந்தையாயிராதே. நீ காட்டிற்குப் போகாதே" என்றான். ஆனால் இராமனோ "வேண்டாம். இதுவரை இக்ஷ்வாகு வம்சத்து மன்னர்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றியே வந்திருக்கிறார்கள். கொடுத்த வாக்கை உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்ற இழுக்கு உங்களுக்கு ஏற்பட வேண்டாம். அதற்குக் காரணமாக நானிருக்க வேண்டாம். பதிநான்கே வருடங்கள் ஒரு நிமிடத்தில் கழிந்து விடும்" என்றான்.
அப்போது தசரதன் "இராமா, நான் வரங்களைக் கொடுத்தாலும் அதன்படி உடனடியாக நடக்க வேண்டுமென்பதில்லையே! நீ இப்போதே காட்டிற்குச் செல்ல வேண்டியதில்லையே! இன்னும் சிறிது காலத்திற்கு தள்ளிப் போடலாமே!" என்றான். ஆனால் இராமனோ "தந்தையே நீங்கள் என் பேரில் கொண்ட அபார வாஞ்கையினால் இப்படிப் பேசுகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு அனுமதியளிங்கள். காட்டில் இயற்கையின் எழிலைக்கண்டு களித்து காலம் கழிக்கிறோம்" என்றான்.
இதையெல்லாம் பார்த்தும் கேட்டுகொண்டுமிருந்த சுமந்திரனுக்கு கடுங்கோபமே வந்தது. தன் ஆத்திரத்தைஎல்லாம் வெளிப்படுத்தி கைகேயிடம் "ஆகா! கட்டிய கணவனைக் கண்ணீர் உகுக்கச் செய்து கள்ளங்கபடற்ற இராமனைக் கானகத்திற்கு அனுப்பத் துணிந்த நீ இன்னும் என்னதான் செய்ய மாட்டாய்? பரதன் நாடாள வேண்டுமா? ஆகா நன்றாக ஆளட்டும். ஒரு ஈ காக்காய் கூட உன் மகனின் ஆட்சியில் இங்கே இராது. என்ன பிடிவாதம் உனக்கு? `தாயைப் போல சேய்' என்ற பழமொழியை மெய்பித்து விட்டாய்.
உன் தந்தை அசுவபதி ஒரு மாமுனிவரின் அருளால் ஜீவராசிகள் பேசுவதை அறியும் சக்தி பெற்றிருந்தார். ஆனால் தான் கேட்டதை யாரிடமாவது கூறினால் அவர் இறந்து விடுவாரென்றும் முனிவர் எச்சரித்திருந்தார். ஒருமுறை இரு எறும்புகள் பேசிக் கொள்வதைக் கேட்டு அவர்`களுக்'கெனச் சிரித்தார்.
அப்போது அவரருகே இருந்த அவரது மனைவி அதாவது உன் தாயார் அவர் சிரித்த காரணத்தைக் கேட்டாள். அசுவபதியோ தான் அதைக் கூறினால் உடனே தான் இறக்க வேண்டிவருமெனக் கூறியும் அவள் பிடிவாதம் பிடிக்கலானாள். அது கண்டு அவர் தனக்கு அச்சக்தியை அளித்த முனிவரிடம் போய் ஆலோசனை கேட்கவே அவரும் "நீ மட்டும் இதைக் கூறாதே" என்றார்.
அதன்படியே அசுவபதி தன் மனைவியிடம் அதைக் கூறாமல் அவளையே மாளிகையை விட்டு விரட்டிவிட்டார். உன் தாயின் பிடிவாதம் இப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது. நீயும் வீண் பிடிவாதம் பிடிக்கிறாய். உன் நிலையும் விபதத்தில்தான் போய் முடியும்" என்றான். ஆனால் தன் மதியையே பறிகொடுத்துவிட்ட கைகேயி மௌனமாகவே இருந்தாள். அப்போது தசரதன் சுமந்திரனிடம் "இராமனோடு காட்டிற்கு அவனுக்கு வேண்டிய படை வீரர்களையும் ஆட்களையும் அனுப்பு.
வனவாசத்தின் போது அவனுக்கு எவ்வித கஷ்டமும் இல்லாதபடி இருக்க வேண்டும்" என்றான். இதைக் கேட்ட கைகேயி, "மன்னரே, அயோத்தியை இப்படி நாசமாக்கி விட்ட பின் பரதன் எப்படி அதனை ஆள்வான்?
காட்டிற்குப் போவதென்றால் எல்லாவற்றையும் துறுந்து விட்டே போக வேண்டுமென்பதே பொருள். உங்கள் முன்னோர்களில் ஒருவரான சகரர் தன் மகன் அசமஞ்ஜனைக் காட்டிற்கு எப்படி அனுப்பினார்?" எனக் கேட்டாள். அதற்கு சித்தார்த்தர் என்ற மந்திரி "அசமஞ்ஜனையும் இராமனையுமா ஒப்பிடுவது? அவன் மக்களைத் துன்புறுத்தினான். அவன் கொடுத்த தொல்லைகளை சகிக்க முடியாமல் அவர்கள் சகரரிடம் முறையிட்டனர்.
அதைக் கேட்டு சகர மன்னர் தன் மகனென்றும் பாராது அவனைக் காட்டிற்கு துரத்தி விட்டார்" என்றான். இதைக்கேட்டும் கைகேயியின் மனம் மாறவில்லை. அப்போது தசரதன் "கைகேயி, இன்னும் உன் மனம் மாறவில்லையா? இதோ, நானும் இராமனோடு காட்டிற்குப் போய்விடுகிறேன். நீயும் பரதனுமாக இந்த நாட்டை ஆண்டுகொண்டு இருங்கள்" என்றான்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இராமன் "மன்னரே, எல்லாவற்றையும் துறந்து செல்லும் எனக்கு வீரர்கள் எதற்கு? பணிபுரிய ஆட்கள் எதற்கு? எங்களுக்கு மரவுரி கொடுங்கள்! கிழங்குகளை வெட்டி எடுத்துக் கொள்ள உபகரணங்களும் ஒரு கூடையும் கொடுங்கள்.
வேறெதுவும் வேண்டாம்" என்றான். கைகேயி உடனே "இரு இராமா, இதோ எடுத்து வருகிறேன்" எனக் கூறி அவற்றை கொண்டும் வந்தாள். இராமனும் இலட்சுமணனும் அவற்றை வாங்கி தாம் உடனேயே அணிந்து கொண்டனர். சீதையிடமும் கொடுத்து ஒன்றை எடுத்து மேலே போர்த்திக் கொள்ளச் செய்தனர்.
இதைக் கண்டு மற்ற இராணிகள் கண்ணீர் உகுத்தனர். இராமனிடம் "இராமா, நீ காட்டிற்குப் போவதென உறுதி பூண்டு விட்டாய். ஆனால் சீதையை ஏன் அழைத்துக் கொண்டு போக வேண்டும்? அவள் இங்கேயே எங்களோடு இருக்கட்டும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றனர்.
அப்போது வசிஷ்டர் கைகேயியைப் பார்த்து "கைகேயி உன் ஈனச் செயலுக்கு ஒரு எல்லையே இல்லையா? இராமன் ஆளவில்லையானால் சீதை அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆளலாமே. மேலும் இராமன் தான் வீரர்களை அழைத்துச் செல்லக் கூடாது.
சீதை அவர்களை உடனழைத்துக் கொண்டு செல்லலாமே. இதையெல்லாம் நீ ஏன் இப்படி செய்து அழிவைத் தேடிக் கொள்கிறாய்? உனது செய்கைஎல்லாம் பரதனுக்கும் பிடிக்குமென நீ நினைக்கிறாயா? ஒரு நாளுமில்லை. அவனைப் பற்றி நீ அறிந்தது அவ்வளவு தான்" என்றார்.
எல்லாரும் கைகேயியை இகழ்ந்தனர். தசரதனோ "சீதா, நீ ஏன் இந்த கோலம் பூண்டிருக்கிறாய்? வேண்டாம் நீ இப்படிச் செய்யாதே" என்றான். இராமனோ தன் தந்தையைத் தேற்றி விடை பெற்றுக் கொண்டான். அப்போது தசரதன் "சுமந்திரா, இவர்களை இரதத்தில் ஏற்றி நகரின் எல்லை தாண்டும் வரையிலாவது கொண்டு போய் விட்டுவா" எனக் கூறி சீதைக்கு ஏராளமான நகைகளைக் கொடுக்க உத்திரவிட்டான்.
நகைகளைப் பெற்றுக் கொண்ட சீதை ஓரிரண்டை எடுத்து அணிந்து கொள்ளும்போது கௌசல்யை அவனைத் தழுவியவாறே "சீதை, இராமன் நாடிழந்து விட்டபோதிலும் நீ அவனே கதியென அவனைப் பின்பற்றிச் செல்வது உன் கடமைஎனக் கருதுகிறாய். எவ்வளவு உயரிய பண்பு!" என்றாள்.
இராமன் தன் தாய் தந்தையரை வலம் வந்து நமஸ்கரித்தான். பின்னர் கௌசல்யையிடம் "அம்மா, அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்! பதினான்கு வருடங்கள்தானே! ஒரு நொடியில் பறந்து விடும். நான் திரும்பி வந்து விடுகிறேன்" என்றான். இலட்சுமணனும் யாவரையும் நமஸ்கரித்தான். அப்போது சுமித்திரை "இலட்சுமணா, இனி இராமனே உனக்குத் தந்தை. சீதை உன் தாய். காடுதான் அயோத்தி. இராமனுக்கு எந்த ஆபத்தும் வராது பாதுகாப்பது உன் பொறுப்பு" என்றாள்.
மூவரும் மாளிகையினின்று வெளியே வந்தனர். சீதையின் முகத்தில் சிறிதுங்கூட வருத்தமே தோன்றவில்லை. அவளும் இராமனும் இலட்சுமணனும் தேரில் ஏறி உட்கார சுமந்திரன் தேரைச் செலுத்தினான். இரதம் அயோத்தியை விட்டுப் புறப்பட்டது.
(தொடரும்)
No comments:
Post a Comment