இராமர் சொன்னதைக் கேட்டு பரதன் எழுந்து நின்றான். அங்கு கூடியிருந்தோரிடம் "நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். நான் இந்த நாட்டை என் தந்தையிடமோ தாயிடமோ கேட்கவில்லை. இராமர் வனவாசம் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே இராமருக்கு பதிலாக நான் பதிநான்கு வருட காலம் காட்டில் இருக்கிறேன். எனக்கு பதிலாக இராமர் நாடாள வேண்டும். இப்படிச் செய்தால் தந்தையின் சொல்லைக் காத்தது போலாகும்" என்றான்.
அது கேட்டு இராமர் புன்சிரிப்பு சிரித்து "இதெப்படி தந்தை கூறியபடி நடப்பதாகும்? தந்தை என்னைத்தான் வனவாசம் செய்யச் சொல்லி இருக்கிறார். அப்படிச் செய்யாவிட்டால் நான் தந்தையின் சொல்லைக் காத்தவனாக மாட்டேன். பதிநான்கு வருடங்களுக்குப் பிறகு நான் பரதனோடு சேர்ந்து நாடாள்கிறேன்" என்றார்.
யாவரும் இரு சகோதரர்கள் கூறியது கேட்டு மகிழ்ந்தனர். கடைசியில் பரதனிடம் "நீ இராமர் கூறுவது போலவே நட. அவர் தந்தை சொல்லைக் காத்ததாகவே இருக்கட்டும்" என்றனர். இதைக் கேட்டு இராமர் மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார். ஆனால் பரதன் மிகவும் கவலையுடன் வெகுநேரம் அமைதியாக இருந்தான். இராமரைத் தன்னுடன் அழைத்துச் செல்ல அவன் போட்ட அனைத்துத் திட்டமும் வீணாகி விட்டது.
அவன் தன்னுடன் அனைவரையும் அழைத்து வந்ததன் நோக்கமே, இராமர் அனைவரையும் பார்த்து மனம் மாறி அயோத்தியாவிற்குத் திரும்பி விடுவார் என்றுதான். இதனால் தன் அன்னையினால் தன்மீது ஏற்பட்ட களங்கம் தீர்ந்து விடும் என்றும் நம்பினான். ஆனால் இப்பொழுது அனைத்தும் வீணாகிப்போய் விட்டது. இனி அவன் அயோத்திய மக்கள் முகத்தில் எப்படி விழிப்பான் என்று குழப்பத்தில், இருந்தான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
உடனே பரதன் இராமரிடம் அவர் அணிந்திருக்கும் பாதுகைகளைக் கொடுக்கும்படி வேண்டினான். அதை அவரும் கொடுக்கவே பரதன் அவற்றைப் பெற்றுக் கொண்டு "உங்களது பாதுகைகளே இந்த உலகைக் காக்கும். நான் துறவிபோல இருந்து யாக்கனி கிழங்குகளைப் புசித்து நாட்டை ஆண்டு வருவேன். அதுவும் அயோத்திக்கு வெளியே தான். பதிநான்கு வருடங்கள் பூத்தியானதும் நீங்கள் வந்து விட வேண்டும். ஒருநாள் தாமதமானால்கூட நான் தீ மூட்டி அதில் குதித்து விடுவேன்" என்றான்.
இராமரும் பரதனைத் தேற்றி "நீ உன் தாயாரை கவனித்துக் கொள். அவள்மீது கோபம் கொள்ளாதே. சூர்யவம்சத்தின் பரம்பரைப்படி ஒரு உத்தமான மன்னனாக ஆட்சி புரி. நம் தந்தையின் பெயரைக் காப்பாற்று" எனக் கூறினார்.
பரதன் இராமரது பாதுகைகளை மிகவும் மரியாதையுடனும் பணிவுடனும் ஏற்று இராமரை வலம் வந்து வணங்கினான். இராமரும் தன் தாய்மார்களுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டுத் தன் குடிலுக்குள் சென்றார். பரதன் இராமரது பாதுகைகளைத் தன் தலைமீது வைத்துக் கொண்டு சத்துருக்கனனோடு தேரில் ஏறிக்கொண்டான். வசிஷ்டர், ஜாபாலி முதலியோர் முன்னால் செல்ல பரதன் அவர்களது பின்னாலேயே சென்றான். வழியிலே பரத்வாஜ முனிவரைக் கண்டு நடந்ததை கூறி, விடைபெற்று அயோத்தியை அடைந்தான்.
அயோத்தி நகர வீதிகள் பொலிவு இழந்து கிடந்தன. பரதன் "இராமர் இல்லாத அயோத்தி இப்படிதான் இருக்கும்" எனக் கூறித் தன் தாய்மார்களிடமும் வசிஷ்டரிடமும் "நான் நந்திக் கிராமத்தில் இருந்து ஆட்சி செலுத்துகிறேன்.
இராமர் வந்ததும் இங்கே வருவேன்" எனச் சொல்லி விட்டான். மந்திரிகளும் அதற்கு இணங்கவே பரதன் தன் தாய்மார்களிடம் விடைபெற்றுக் கொண்டு மந்திரிகளுடன் நந்திக் கிராமத்தை அடைந்தான். அங்கு வெண்குடைக்குக் கீழுள்ள அரியாசனத்தில் இராமரது பாதுகைகளை வைத்து அதற்குத் தக்க மரியாதைகள் செய்தான்.
தன் தாயாரால் தனக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டதேயென மனம் புழுங்கிய பரதன் அதைப் போக்கிக் கொள்ள விரும்பினான். அரசபோகங்களைத் துறந்து காவியுடை தரித்து அவன் நந்திக் கிராமத்திலேயே வாசம் புரியலானான். எல்லாவற்றையும் இராமரது பாதுகைகளுக்கு முதலில் அர்ப்பணித்துவிட்டுப் பின்னரே எடுத்துக் கொள்வான்.
இராமர் சிறிதுகாலம் தம் பர்ணசாலையிலேயே இருந்தார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள முனிவர்கள் தமக்குள் இரகசியம் பேசிக் கொள்வது போல அவருக்குப் பட்டது. பலர் அங்கிருந்து சென்று விடுவதென்றும் தீர்மானித்துக் கொண்டு விட்டதாக அவர் கேள்விப்பட்டார். இதனால் மனத்தில் கவலை கொண்டவராய் அங்குள்ள வயது முதிர்ந்த முனிவர் ஒருவரிடம் போய் "நீங்களெல்லாரும் இங்கிருந்து போய்விடத் தீர்மானித்துஇருப்பதாகக் கேள்விப் பட்டேன். இதற்குக் காரணம் என்னவோ? நானோ என் மனைவியோ அல்லது என் தம்பியோ ஏதாவது குற்றம் செய்து விட்டோமோ?" எனப் பணிவுடன் கேட்டார்.
அதற்கு அவர் "நீங்கள் ஒரு குற்றமும் புரியவில்லை. ஆனால் நீங்கள் இங்கே இருப்பதால் அரக்கர்கள் வந்து முனிவர்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள் இராவணன் தம்பி கரண் என்பவன் ஜனஸ்தானமென்னும் இடத்திற்கு வந்து முனிவர்களை எல்லாம் விரட்டியடிக்கிறானாம். அவன் அங்கிருந்து இங்கே வர எவ்வளவு நேரமாகும்? எனவே நாங்கள் போக நினைக்கிறோம். நீயும் வேறொரு இடத்திற்குச் சென்றுவிடு" என்றார். முனிவர்களெல்லாம் வேறொரு ஆசிரமத்திற்கு சென்று விட்டனர்.
இராமரும் சிறிது நாள்களுக்குப் பிறகு இலட்சுமணனையும் சீதையையும் அழைத்துக் கொண்டு அத்திரி முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அம்முனிவரும் அவர்களை வரவேற்று உபசரித்தார். தன் மனைவி அனசூயையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவள் வயது முதிர்ந்தவள். அதுபோல தவத்திலும் சிறந்து ஓங்கி நிற்பவள்.
அத்திரி முனிவரும் இராமரிடம் "ஒருமுறை மழையே இல்லாமல் எல்லா இடங்களிலும் வறட்சி ஏற்படவே அனசூயை தன் தவத்தின் மகிமையால் கங்கையையே வரவழைத்தாள். அதனால் பழங்கள் கிழங்குகள் விளைய முனிவர்களுக்கு அது பெரிதும் உதவியது. மற்றொருமுறை பத்து இரவுகளை ஒரே இரவாக ஆக்கினாள்" என்றார். உடனே இராமர் சீதையைப் பார்க்கவே அவளும் தான் இன்னாளெனக் கூறி வணங்கினாள். அப்போது அனசூயை "பெண்ணே, நீ உற்றார் உறவினரையும், சொத்து சுகத்தையும் விட்டு கணவனோடு வனவாசம் செய்ய வந்தாய். அது உன் கடமை. மனைவிக்கு கணவனை விட வேறு யார் இருக்கிறார்? நீ என்றென்றும் இருந்து கணவனோடு எந்நாளும் ஒன்றாக நீடூழி வாழ வேண்டும்" என ஆசி கூறினாள்.
அப்போது சீதையும் "என் கணவர் நற்குணம் பொருந்தியவர். தயையும் தர்ம சக்தியும் கொண்டவர். என்மீது அளவிலா அன்பு கொண்டவர். இவ்வளவு சிறப்புகளையும் கொண்டவரை விட்டுப் பிரிய யாரால் முடியும்? கணவனே கண்கண்ட தெய்வமென்பது நான் இளமையில்இருந்து கற்றதாகும்" என்றாள்.
சீதை கூறியது கேட்டு அனசூயை மனம் பூரித்துப் போனாள். அதனால் "உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள்" எனக் கூற சீதையும் "நீங்கள் இப்படிச் சொன்னதே போதும்! வேறெதுவும் வேண்டாம்" என்றாள்.
ஆனால் அனசூயையோ "அப்படியானால் நான் கொடுப்பதை நீ மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்" எனக் கூறி ஒரு மலர் மாலை, ஒரு புடைவை சில, ஆபரணங்கள், சந்தனம் முதலியவற்றைக் கொடுத்தாள். பின்னர் இராமர் எப்படி அவளை சுயம்வரத்தில் மணந்தார் என்று கேட்டாள்.
அப்போது சீதையும் தன் கதையைக் கூறலானாள். "என் தந்தை ஜனகர் மிதிலையின் மன்னர். ஒருமுறை யாகம் செய்வதற்காக பூமியை ஏர்கொண்டு உழுதார். கலப்பை முனையில் நான் பட்டு அவருக்குக் கிடைத்தேன். அவருக்கு அப்போது வேறு குழந்தையே இல்லாததால் என்னைத் தன் புதல்வியாக எண்ணித் தன் மூத்த மனைவியிடம் கொடுத்து வளர்த்து வரச் சொன்னார்.
நான் வளர்ந்து பெரியவளாகி திருமண வயதை அடைந்து விட்டேன். அப்போது அவர் தன்னிடமிருக்கும் வில்லை யார் எடுத்து நாணேற்றி விடுகிறானோ அவனுக்கே என்னை மணம் செய்து வைப்பதாகத் தீர்மானித்துக் கொண்டார்.
அந்த வில்லை தெய்வாம்சம் கொண்டவர்களால் தான் வளைக்க முடியும். சாதாரணமானவர்களால் முடியவே முடியாது. எவ்வளவோ அரசகுமாரர்கள் வந்தார்கள். வில்லைத் தூக்க முயன்று முடியாது கீழே விழுந்து அதற்கு வணக்கம் செலுத்திச் சென்றனர். அச்சமயம் விசுவாமித்திரரோடு இவர்களிருவரும் யாகத்தைக் காண வந்தனர்.
ஜனகரிடம் விசுவாமித்திரர் இவரைப் பற்றிக் கூறி வில்லை எடுக்க அனுமதிக்கும்படி வேண்டினார். என் தந்தையும் அதற்குச் சம்மதித்தார். இவரும் அலட்சியமாக அந்த வில்லை எடுத்து நாணேற்றவே வில்லே பட்டென ஒடிந்தது. உடனே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. என் தந்தை தசரதருக்குத் தகவல் அனுப்பி அவரை வரவழைத்தார். அதன் பிறகு எங்கள் திருமணம் நடைபெற்றது.
" இந்த விவரம் கேட்டு அனசூயை மிகவும் மகிழ்ந்தாள். சீதையை தன் கண்ணெதிரே அலங்காரம் செய்து பார்த்து மகிழ்ச்சித்து இராமரிடம் அனுப்பினாள். இராமர் அக்கோலத்தில் சீதையைக் கண்டு திடுக்கிட்டு "இதெல்லாம் ஏது?" எனக் கேட்டார்.
சீதையும் அனசூயை கொடுத்ததெனச் சொல்லி அவளே அலங்கரித்து விட்டதாயும் கூறினாள். முதிய பிராட்டியின் உள்ளன்பைக் கண்டு இராமரும் இலட்சுமணரும் அகமகிழ்ந்து போயினர். அன்றைய இரவுப் பொழுதை அத்திரி முனிவரின் ஆசிரமத்திலேயே கழித்து மறுநாள் இராமர் அத்திரி முனிவரிடம் விடை பெற்றுக் கொண்டனர்.
அப்போது அத்திரி முனிவரும் "இந்தக் காட்டில் மனிதர்களைக் கொன்று விழுங்கும் இராட்சசர்களும் இருக்கிறார்கள். முனிவர் பழங்களைப் பறிக்கச் செல்லும் பத்திரமான வழி ஒன்று இருக்கிறது. அதனைக் காட்டுகிறேன் அவ்வழியிலேயே நீங்கள் சொல்லுங்கள்" என்றார்.
அவர்களும் அத்திரி முனிவர் காட்டிய வழியிலேயே சென்று அதிபயங்கரப் பகுதியான தண்ட காரண்யப் பிரதேசத்தை அடைந்தனர்.
(அயோத்தியா காண்டம் முடிவுற்றது)
No comments:
Post a Comment