இராமரும் இலட்சுமணனும் புதர்ளையும் மரம் செடி கொடிகளையும் வெட்டித்தள்ளி வழி செய்து கொண்ட கிரௌஞ்சாரணியம் என்னும் காட்டுப் பகுதியை அடைந்தனர். வழியிலே ஆங்காங்கே இளைப்பாறிக் கொண்டு சீதையைத் தேடியவாறே அவர்கள் மதங்காசிரமப் பகுதியைப் போய் அடைந்தார்கள்.
அங்கே அவர்கள் ஓரிடத்தில் ஒரு குகையைக் கண்டனர். சாதாரணமானவர்கள் அவளைப் பார்த்தார்கள் என்றால் கண்டிப்பாக பயந்து விடுவார்கள். அவ்வளவு அவலட்சணமான, பயங்கரமான உருவம் கொண்டிருந்தாள். அவள் இராமரையும் இலட்சுமணனையும் பார்த்த பார்வை அவர்கள் மீது பாய்ந்து கொன்று தின்னும் பயங்கரப் புலியைப் போலிருந்தது.
அவள் இலட்சு மணனை அணுகி "அன்பரே, என் பெயர் அயோமுகி நீர்தாம் எனக்கு ஏற்ற மணாளர். இருவரும் விவாகம் செய்து கொண்டு சுகமாகக் காலம் கழிக்கலாம், வாருங்கள் போகலாம்" எனக் கூறி அவனது கையையும் பற்றலானாள். ஆனால் இலட்சுமணனோ கோபம் கொண்டு சூர்ப்பணகையை மானபங்கம் செய்தது போலவே அவளது மூக்கையும் காதுகளையும் அறுத்து விட்டான். அவளோ வலி பொறுக்க முடியாது கத்திக் கொண்டு ஓடிவிட்டாள். இதற்குப் பிறகு இராமரும் இலட்சுமணனும் சீதையைத் தேடித் திரியலாயினர்.
அப்போது அண்டமே கிடுகிடுக்கும்படி எங்கிருந்தோ ஒலி எழுந்தது. அவர்கள் கூர்ந்து கேட்டு அந்த ஒலி எழுந்துவந்த இடத்தை நோக்கி நடந்து சென்றனர். அங்கு இருந்த உருவம் ஒரு சிறு குன்றுபோல இருந்தது. அதற்கு தலையோ, கழுத்தோ, காலோ இருக்கவில்லை. மார்பின் மத்தியிலே ஒரு பெரிய கண் தகதகவென நேருப்பு போல ஜொலித்துக் கொண்டிருந்தது. அதற்குக் கீழே வயிற்றில் ஒரு பெரிய வாய். மலை போன்ற அவ்வுருவத்திற்கு இரு நீண்ட கைகள் மட்டும் இருந்தன.
அந்த உருவமாக இருந்தது கபந்தன் என்ற அரக்கன். அவன் தான் இருந்த இடத்திலேயே இருந்து தன் நீண்ட கைகளால் அந்தப் பக்கமாக வரும் ஜீவராசிகளை இழுத்துப் பிடித்துத் தின்று விடுவான். வழக்கம்போல அவன் தன் இரு கைகளால் இராமரையும் இலட்சுமணனையும் பிடித்துக் கொண்டான். அவர்களிருவரும் அவனது பிடியினின்றும் தப்ப முயன்றும் முடியாது போயிற்று. அப்போது இலட்சுமணன் "அண்ணா, என்னை இவனுக்கு பலியாக்கிவிட்டு நீங்கள் மட்டும் தப்பிவிடுங்கள்" என்றான்.
இராமரோ "வேண்டாம். பயப்படாதே லட்சுமணா, இவன் அசாதாரண ராட்சசன் போல் இருக்கிறான். சாதாரண ராட்சசனிடம் இந்தளவிற்குப் பலம் இருக்காது. இவனிடம் தெய்வீக பலம் இருப்பது போல் இருக்கிறது. தைரியமாக இரு.
முயற்சி செய்து இவனை நாம் ஒழிப்போம்" என்று லட்சுமணனுக்கு தைரியம் அளித்தார். அப்போது கபந்தன், "ஆகா சரியான வேட்டைதான். இருவரும் கொழுகொழுவென்று இருக்கிறீர்கள்" என்று கூறி பலமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு இராமரையும் இலட்சுமணனையும் திகிலடையச் செய்தது. இனி அவனிடமிருந்து தப்ப முடியாதென ராமரும் எண்ணினார்.
இராமர் தைரியம் இழப்பதை பார்த்த லட்சுமணன் ராமரிடம், "இவனைப் பார்த்தால் இவனது பலம் இரு கைகளில் இருக்கிறதெனத் தெரிகிறது. அவற்றை நாம் வெட்டிவிடலாம்" என்றான். இதைக் கேட்ட கபந்தன் ஆத்திரம் அடைந்து தன் வாயை திறந்து அவர்களை விழுங்கப் போனான். அதே சமயம் இராமர் அந்த அரக்கனின் ஒரு கையையும் இலட்சுமணன் மற்றொரு கையையும் வெட்டித்தள்ளவே அந்த அரக்கன் துடிதுடித்துக் கீழே விழுந்தான்.
அவன் அவ்விருவரையும் பார்த்தவாறே "நீங்கள் யாரோ? உங்கள் பெயரை நான் அறிய வேண்டும்" என்று கேட்டான். அதற்கு அவர்கள் "இந்தக் காட்டில் இந்த உருவத்தில் இருக்கும் நீ யார்? இங்கே என்ன செய்கிறாய்?" என்று கேட்டு தாம் இராமரும் இலட்சுமணனும் எனக் கூறினர். அதைக் கேட்டு கபந்தன் "ஆகா, நீங்கள்தாமா அவர்கள்? நீங்கள் இங்கு வந்தது மிகவும் நல்லதாயிற்று. நான் ஒருசமயம் தேவேந்திரனைவிட அழகாக இருந்தவன்.
ஆனால் பயங்கர உருவில் எல்லாரையும் பயமுறுத்தி வந்தேன். ஸ்தூலசீர் என்னும் முனிவர் ஒருநாள் என் உருவத்தைப் பார்த்து "அடே, இந்த உருவமே உனக்கு என்றென்றும் நிலைத்துப் போகட்டும்" என்று சபித்து விட்டார். நானும் திகைத்துப்போய் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினேன்" என்று கூறி சற்று நிறுத்தினான்.
பின்னர் தொடர்ந்து, "மாமுனிவரும் மனமிளகி "நீ இருக்குமிடத்திற்கு இராமர் வருவார். அவர் உன் கைகளை வெட்டித் தள்ளுவார். அவர் கையால் தகனக்கிரியை நடந்தால் உனக்கு உன் சுய உருவம் கிட்டும்" எனக் கூறினார். இதற்கு முன்பே நான் பிரம்மதேவனைக் குறித்து தவம் செய்து நீண்ட ஆயுளையும் பெற்றிருந்தேன்.
ஆனால் நான் இந்திரனோடு போர் புரியச் சென்றபோது அவன் தன் வஜ்ஜிராயுதத்தால் என் தலையையும் கால்களையும் உடலுக்குள் தட்டி இம்மாதிரியான உருவத்தைக் கொடுத்து விட்டான். அப்போது இந்திரனைப் பார்த்து "எனக்கு இந்த வாழ்வு வேண்டாம். என்னைக் கொன்றுவிடு" என்று வேண்டினேன். அதற்கு இந்திரனோ "அதெப்படி முடியும்? பிரம்மா உனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்துஇருக்கிறார்.
நீ இப்படியே உயிர் வாழ வேண்டியதுதான்" என்று சொன்னான். அப்போது நான் "சாப்பிடக் கூட வாய் இல்லாமல் நான் எப்படி நீண்ட காலம் வாழ முடியும்?" எனக் கேட்டேன். அதன் பிறகு தான் எனக்கு நீண்ட கைகளையும் வயிற்றிலே பெரிய வாயையும் அவன் அமைத்து விட்டான். அது முதல் இந்த உருவிலேயே இருந்து வந்திருக்கிறேன்." அப்போது இராமர் "என் மனைவி சீதையை இராவணன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்று விட்டான்.
அவன் பெயர் தான் தெரியுமே ஒழிய அவன் எங்கிருக்கிறான், யார் என்பதெல்லாம் ஒன்றுமே தெரியாது. சீதையைத் தேடித் தேடி நாங்கள் இருவரும் அலைகிறோம். உன்னால் எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்றார். அப்போது கபந்தன் "இந்த உருவில் இருக்கும்வரை நான் எதையும் அறிந்து கூற முடியாது.
எனக்குப் பழைய தேவ உருவம் கிடைத்தாலே எதையும் சொல்ல முடியும். உங்களுக்கு உதவியும் புரிய முடியும்" என்றான். இராமரும் இலட்சுமணனும் ஒரு தாழ்வான இடத்தில் உலர்ந்த கட்டைகளை அடுக்கி அதன்மீது கபந்தனின் உடலை வைத்தனர். அவனது ஆவி உடலில் இல்லை.
கட்டை போலிருந்த அவனது உடல் வெந்தது. கபந்தனின் அந்த கோர உருவம் அழிந்தது. மறு நிமிடமே அந்த இடத்தில் ஒரு அழகிய தேவன் தோன்றினான். பட்டாடையும் ஆபரணங்களும் ஒளிவீச ஒரு அழகிய விமானத்தில் ஆகாயத்தில் எழும்பிச் சென்றவாறே அவன் இராமரைப் பார்த்து சில வார்த்தைகள் கூறினான்.
"இராமா, சீதையை நீங்கள் மீண்டும் அடைய உங்களுக்கு ஒருவன் உதவி புரிவான். அவனும் உங்களைப் போல் தன் நாட்டையும் மனைவியையும் போக்கடித்துக் கொண்டு தன் அண்ணனிடம் மிகவும் பயப்பட்டுக் கொண்டு பம்பா சரோவரத்தருகேயுள்ள ரிஷிய முகபர்வதத்தில் இருக்கிறான். அவனோடு நான்கு பேர்கள் இருக்கிறார்கள்.
அவன் பெயர் சுக்கிரீவன். வானரங்களின் மன்னன் அவனது அண்ணன் வாலி. சுக்கிரீவனோடு அக்கினி சாட்சியாக நட்புகொண்டு வானரங்களைக் கொண்டு சீதையைத் தேடுங்கள். கண்டிப்பாக அவள் இருக்குமிடம் உங்களுக்குத் தெரிந்து விடும்." இதை அவன் கூறி ரிஷியமுக பர்வதத்திற்குச் செல்லும் வழியையும் சொன்னான்.
அதன் பின்னர் அவன் மறைந்து விட்டான். இராமரும் இலட்சுமணனும் சுக்கிரீவனின் நட்பைப் பெற பம்பாசரோவரத்தின் கரையை நோக்கிச் செல்லலானார். மறுநாள் பம்பா சரோவரின் மேற்கு பகுதியிலுள்ள கரையை அடைந்தனர் அங்கே சபரியின் அழகிய ஆசிரமம் இருந்தது. ஒரு காலத்தில் மாதங்க மகாமுனிவர் தம் சீடர்களோடு இருந்தார்.
அவர்களுக்கு சபரி என்னும் சன்னியாசினி சேவை செய்தவாறே தானும் தவம் செய்து கொண்டிருந்தாள். மாதங்கரும் அவரது சீடர்களும் சொர்க்கம் போகும்போது சபரியிடம் "இராமர் இந்த ஆசிரமத்திற்கு வருவார். அவரை நன்கு உபசரித்து நீ புண்ணியம் பெறு" எனக் கூறிச் சென்றனர். சபரியும் இராமரை எதிர்பார்த்தவாறே அவருக்காக, கனி, கிழங்குகளைச் சேர்த்து வைத்துக் கொண்டே வரலானாள்.
இராமர் ஆசிரமத்திற்கு வந்ததும் அவருக்குத் தன் ஆசிரமத்தைஎல்லாம் காண்பித்தாள். இராமருக்கு உணவிட்டுப் பிறகு அவள் "நான் வந்த வேலை பூர்த்தியாகி விட்டது. இனி நான் மாதங்க முனிவரும் அவரது சீடர்களும் இருக்கும் சொர்க்கத்திற்குச் செல்கிறேன்" என்று அவர்களிடம் கூறிவிட்டு அக்கினிப் பிரவேசம் செய்து சொர்க்கமடைந்தாள்.
இராமர் அங்கு முனிவர்கள் சிருஷ்டித்து இருந்த சப்தசமுத்திரங்களில் ஸ்நானம் செய்து தர்ப்பணங்களைச் செய்தார். அவர் மனத்தில் அமைதி ஏற்பட்டது. பின்னர் இலட்சுமணனிடம் "தம்பி. இதுதான் ரிஷியமுக பர்வதம். நீ போய் சுக்கிவனைப் பார்த்து என்னைப்பற்றிக் கூறி நான் அவனது நட்பைப் நாடுவதாகக் கூறு. மேலும் சீதையைத் தேடுவதில் தங்களுக்கு உதவி புரியுமாறும் கேள்" எனக் கூறி அனுப்பினார்.
(ஆரணிய காண்டம் முற்றிற்று)
No comments:
Post a Comment