இராமரோ மிகவும் மனம் புண்பட்டவராய் "சுக்ரீவா, என்மீது கோபப்படாதே. நீயும் உன் அண்ணன் வாலியும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள். இருவர் குரல்களும் ஒன்று போலவே இருக்கின்றன.
ஆகையால் நான் அம்பு எய்து யாரைக் கொல்வது? இருவரிலும் சிறிது மாறுபாடு இருக்கும் அடையாளம் இருந்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்கும். எனவே நீ மறுமுறை வாலியோடு போர்புரி. இம்முறை எனக்குத் தெரியுமாறு ஒரு அடையாளத்தோடு செல். வாலியை ஒரே அம்பினால் வீழ்த்தித் தள்ளுகிறேன்" எனக் கூறினார். சுக்ரீவன் கழுத்தில் அருகே படர்ந்து வளர்ந்திருந்த கஜபுஷ்பி என்னும் கொடியை மலர்களோடு பறித்து மாலைபோலக் கட்டி இலட்சுமணன் அணிவித்தான்.
சுக்ரீவனின் நண்பர்களோடு இராமர் மீண்டும் கிஷ்கிந்தைக்குச் சென்றார். அப்போது சுக்ரீவன் "வாலியைக் கொல்வதாக வாக்களித்து இருக்கிறீர்கள். அதனை விரைவில் செய்து முடியுங்கள்" என்றான். அப்போது இராமரும் "இம்முறை கண்டிப்பாக வாலி ஒழிந்து விடுவான். இப்போதுதான் உம்மிருவருள் உன்னை அடையாளம் கண்டுகொள்ள உன் கழுத்தில் மாலை இருக்கிறதே. இனி தாராளமாக நீ போய் அவனைப் போருக்கு அழை" இந்த முறை அவன் கண்டிப்பாக என் அம்புக்கு இரையாவான்" என்றார்.
யாவரும் மறைவிடங்களில் இருந்து கொண்டனர். சுக்ரீவன் மட்டும் ஒரு குதிகுதித்தவாறே பலத்த கர்ஜனை புரிந்தான். வாலியைத் தன்னோடு போர் புரிய அழைத்தான். அதைக் கேட்டு வாலிக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அவன் கோபத்துடன் எழுந்து சுக்ரீவனுடன் போருக்குக் கிளம்பினான்.
அப்போது அவன் மனைவி தாரை "இந்த இரவு வேளையில் நீங்கள் சுக்ரீவனோடு போர் புரியப் போக வேண்டாம். நாளைக்காலையில் போங்கள். இதற்குள் உங்கள் பலமும் குறைந்துவிடாது. சுக்ரீவனின் பலமும் அதிகரித்து விடாது. ஆனால் இப்போது நிலைமை என்ன என்று யோசித்துப் பாருங்கள்.
உங்களிடம் நன்கு அடிபட்டுக் கொண்டு சமீபத்தில் தான் சுக்ரீவன் புறமுதுகு காட்டி ஓடினான். இப்போது மீண்டும் அவன் போருக்கு அழைக்கிறானென்றால் இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும். அவனுக்குப் பக்கபலமாக வந்துஇருப்பவர்கள் யாரென்றுகூட எனக்குத் தெரியும். அயோத்தி மன்னரான தசரதரின் மைந்தர்கள் இராமனும் இலட்சுமணனுமாவார்கள்.
அவர்களுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு ஏற்பட்டு விட்டதாம். அவர்கள் கரனையும் தூஷனையும் கபந்தனையும் கொன்றவர்கள். மிகுந்த பலசாலிகள். இதெல்லாம் நம் அங்கதனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. சுக்ரீவன் யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டான். இராமனின் பக்கபலம் கொண்டே இப்போது உங்களோடு போர்புரிய வந்திருக்கிறான். இப்போது அவனக்கு பலம் அதிகம். எனவே அவனோடு சமாதானமாகப் போய்விடுங்கள். உங்கள் தம்பிதானே.
அவனும் நாட்டின் ஒரு பகுதியை ஆளட்டும். உங்களுக்கும் இராமர், இலட்சுமணர் ஆகியோரின் நட்பு கிட்டும்" என்றாள். தாரை கூறியதையெல்லாம் வாலி சற்றும் ஏற்கவில்லை. "தாரா, நீ என்னவோ எனது நன்மையை உத்தேசித்தே இவற்றையெல்லாம் கூறினாய். ஆனால் இந்த சுக்ரீவனின் கயவாளித்தனத்திற்கு நான் பணிந்து போவதா? முடியாது.
இவனை விட எவ்வளவோ பெரிய வீரர்களைஎல்லாம் நான் பார்த்தும் போரிட்டும் வெற்றி பெற்றும் வந்திருக்கிறேன். இந்த சுண்டைக்காய் எம்மாத்திரம்? என்னை இராமர் ஏன் அநாவசியமாகக் கொல்லப் போகிறார்? நான் மட்டும் சுக்ரீவனைக் கொல்லவா போகிறேன்? இன்னும் இரண்டு அடிகள் கொடுத்து அவனுக்கு புத்தி கற்பித்து வருகிறேன்" எனக் கூறிவிட்டு தன்னுடன் வர இருந்த மற்றவர்களை தன்னோடு வரவேண்டாமெனச் சொல்லிவிட்டு போருக்குக் கிளம்பினான்.
பெண்களின் கண்களுக்குப் புலப்படாத இடத்திற்குச் சென்றதும் வாலி பயங்கர உருவம் எடுத்துக் கொண்டு கிடுகிடுவென நடந்து சுக்ரீவன் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான். ‘உம்' என கர்ஜித்தவாறே வாலி சுக்ரீவன் மீது பாய அவர்களிருவருக்குமிடையே பெருத்த போர் மூண்டது. இருவரும் மிக நன்றாக போர் புரிந்தனர்.
இருவரும் மரங்களைப் பிடுங்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். போர் மிகவும் பயங்கரமாகவே நடந்தது. வாலி களைத்துப் போனான். சுக்ரீவனோ அவனை விட மிகவும் களைத்துப் போய் விட்டான். இந்த நிலையில் இராமர் ஒரு கூரிய அம்பைத் தேர்ந்துஎடுத்து வாலியின் மார்புக்குக் குறி வைத்து இழுத்து விட்டார். அம்பு வாலியின் மார்பில் பாய்ந்தது அவன் கீழே விழுந்து விட்டான்.
பல ஆபரணங்களையும் அணிந்து கீழே கிடக்கும் வாலியினருகே இராமரும் இலட்சுமணனும் சென்றனர். அப்போது மெதுவாகக் கண்களைத் திறந்து வாலி அவர்களைப் பார்த்தான். பிறகு இராமனிடம் "நீயோ அரச புத்திரன். உயர் வம்சத்தில் பிறந்தவன். நீதி முறை தவறி, நான் மற்றொருவனோடு போர் புரிந்துகொண்டு இருக்கையில் என்னை அடித்து வீழ்த்தலாமா?
இந்தப் போருக்குக் கிளம்பு முன்னரே தாரை என்னை எச்சரித்தாள். நானோ, நீ தர்மம் தவறாதவனெனக் கூறி விட்டு வந்தேன். உனக்கு நான் எவ்விதக் கெடுதலும் செய்யவில்லை. உன்னைப் போருக்கு அழைக்கவும் இல்லை. ஒரு வானரத்தோடு போர் புரிந்து கொண்டிருந்த என்னை இப்படி அடித்துக் கொன்றிருக்கிறாயே. எனவே உன்னை பற்றி நான் எண்ணியதெல்லாம் தப்பு.
"நீ முறையற்றவன். நீதி நேர்மைகளைப் பற்றிக் கவலைப்படாதவன். உண்மையிலே நீ மட்டும் பலம் பொருந்தியவனாக இருந்தால் இராவணன் போன்றவர்களை வென்றிருக்கலாமே. மேலும் நீ மட்டும் நேருக்கு நேராக என்னோடு போரிட்டிருந்தால் உன்னை எமலோகத்திற்கே அனுப்பி இருப்பேன். சீதையைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டுமென என்னிடம் கூறிஇருந்தால் ஒரே நாளில் அவளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வந்துவிட மாட்டேனா? நீ சுக்ரீவனுக்கு உபகாரம் செய்யப் போய் என்னைக் கொன்று விட்டாய்" என்றான்.
அதைக் கேட்டு இராமர் "வாலி, உனக்கு தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்றவற்றின் பொருளும் தத்துவமும் சிறிதும் தெரியாது. சப்த பூமண்டலங்களையும் ஆள்பவர்கள் இஷ்வாகு மன்னர்கள். பூமண்டலத்தில் எங்காவது அநீதி ஏற்பட்டால் அதனைப் போக்கி அதைச்செய்தோரைத் தக்கபடி தண்டிப்பார்கள். நீ உன் தம்பியின் மனைவியை அபகரித்தாய். இது மாபெரும் பாவம். இதற்குத் தக்க தண்டனை மரணமேயாகும். எனக்கும் சுக்ரீவனுக்கும் உள்ள நட்பு எனக்கும் இலட்சுமணனுக்கும் ஏற்பட்டுள்ள உடன் பிறந்த பாசம் போன்றதாகும்.
நான் என் மனைவியை அடையவும் சுக்ரீவன் தான் இழந்த நாட்டைப் பெறுவதற்காகவும் நாங்கள் இந்த பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம். உன்னைக் கொல்வதாக வானரர்களின் முன் சபதம் பூண்டேன். எனவே உன்னைக் கொன்றதில் எவ்விதமான அநியாயமோ அதர்மமோ ஏற்பட்டு விடவில்லை. மனித நியாயத்தைப் பற்றி நான் உன்னிடம் பேசுவதற்குஇல்லை. நீயோ வானரன். உன்னை நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லலாம்.
"மிருகங்கள் ஓடிப் போகின்றனவா அல்லது படுத்துக்கிடக்கின்றனவா அல்லது சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனவா என்றெல்லாம் பார்த்து மனிதர்கள் வேட்டையாடுவதில்லை. மேலும் உன் போன்ற மிருகங்களோடு நேருக்கு நேர் நின்று போராட வேண்டமென்று எந்த விதியும் கூறவில்லை" என்றார்.
அப்போது வாலி "இராமா. நீ சொல்வதெல்லாம் சரியே. நான் இப்போது இறந்து போகப் போகிறேனே என்ற பயம் கூட இப்போது எனக்கு இல்லை. எனக்கு அங்கதனென்ற ஒரே புதல்வன் இருக்கிறான். என் கவலையெல்லாம் அவனைப் பற்றியதுதான். சுக்ரீவன் மட்டும் அவனைச் சரிவர வளர்த்து வரும்படி பார்த்துக்கொள். சுக்கிவன் என் மனைவி தாரையை பழிக்குப் பழி வாங்க முயன்றாலும் அவ்விதம் செய்யாமல் நீ பார்த்துக் கொள். இதை எனக்காகத் தயவு செய்து செய்வாயா?" என்றான்.
இராமரின் அம்பு வாலியின் உடலில் தைத்து விட்டதென்ற செய்தி தாரைக்குத் தெரிந்தது. அவள் அடக்க முடியாத துக்கத்தோடு தன் மைந்தனையும் அழைத்துக் கொண்டு வாலி கிடக்குமிடத்திற்கு வந்தாள். வழியில் கண்ட வானரங்களோ "நீயும் உன் மகனுமாகத் தப்பி ஓடி விடுங்கள். சுக்ரீவன் என்ன செய்வானென்று தெரியாது" என்றனர்.
அது கேட்டு தாரை "நான் எங்கே போவது? என் கணவனின் உடல் கிடக்குமிடத்திற்குத்தான் போவேன்" எனக் கதறிக் கொண்டு அங்கே போனாள். வாலியின் உடல் கீழே விழுந்து கிடப்பது கண்டு அவளும் மூர்ச்சையாகி விட்டாள்.
தன் உணர்விற்கு வந்ததும் துக்கம் தாங்க முடியாது கதறிக்கதறி அழலானான். வாலியினருகே நின்று கொண்டு இருந்த அனுமார் தாரையைத் தேற்றலானார். அதற்குள் வாலி மெதுவாகக் கண்ணைத் திறந்தான். அவன் சுக்ரீவனைப் பார்த்து "சுக்ரீவனைப் பார்த்து "சுக்ரீவா, உன்னை நான் என்னோடு நாட்டில் இருத்திக் கொள்ளாது துரத்திஅடித்தேன். உன் மனைவியை அபகரித்துக் கொண்டேன். இதைஎல்லாம் இனி மனத்தில் வைத்துக் கொள்ளாதே. என் மகன் அங்கதனை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ அவனை உன் மகனைப் போல வளர்த்து வா. இனி இந்த நாட்டையும் ஒரு குறைவுமில்லாவது ஆண்டு வா" என்றான்.
பின்னர் தன் மைந்தனான அங்கதனை அழைத்து "இனி நீ உன் சிற்றப்பா கூறுவது போல நடந்துகொள். சுக்ரீவா, நான் இறப்பதற்கு முன் என்னிடமுள்ள இந்த காஞ்சன மூலிகையை எடுத்துக் கொள்" என்றான். தன் மைந்தனுக்குத் தக்க புத்திமதிகள் கூறியதும் வாலி அமைதியாக உயிர் நீத்தான். தாராவோ அத்துயரக் காட்சியைக் காண முடியாது மூர்ச்சையாகி விழுந்தாள்.
அதன் பின்னர் நீலன் வாலியின் மார்பில் தைத்திருந்த அம்பை மெதுவாக எடுத்தான். அங்கதன் வாலியின் பாதங்களை நமஸ்கரித்தான். அப்போது சுக்கிரீவன் "இராமா, நீங்கள் வாலியைக் கொன்று விட்டீர்கள். உங்களுக்கோ சுகபோகங்களின் மீது விருப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. தாரை, அங்கதன் போன்றவர்களெல்லாம் துயரக் கடலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.
எனக்கு மட்டும் இந்த ராஜ்யம் எதற்கு? வாலி எனக்கு இழைத்த கொடுமைகளால் நான் அவன் இறக்க வேண்டுமென விரும்பினேன். இப்போது பச்சாத்தாபமே மேலிடுகிறது. வாலி என்னைக் கொல்ல எண்ணவே இல்லை. நானும் வாலியுடனேயே இறந்து போகிறேன். என்னையும் அவனது உடலோடு எரித்து விடுங்கள். வானரர்கள் உங்களுக்குச் சீதையைத் தேடிக் கண்டு பிடிப்பார்கள்" எனக் கூறி கண்ணீர் உகுக்கலானான்.
No comments:
Post a Comment