அழகிய மாய மானைப் பார்த்த இராமர் சீதையைப் போலவே அதன் அழகில் பிரமித்துத்தான் போனார். அப்போது அவர் இலட்சுமணனிடம் "தம்பி நீ சீதையைப் பார்த்துக் கொள். நான் அந்த மானைப் பிடித்துக் கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு அந்த மானைப் பிடிக்கச் சென்றார்.
மாரீசன் தானெடுத்துக் கொண்ட வேலையைத் திறமையாகவே செய்யலானான். அவன் சற்று தூரம் ஓடுவதும், பின்னர் இராமர் கண்களுக்குத் தோன்றாமலும், அதன் பிறகு தோன்றுவதும், மீண்டும் மறைவதுமாக அவரை ஆசிரமத்தினின்றும் வெகு தூரத்திற்குக் கொண்டு போய் விட்டான்.
அந்த மானை உயிருடன் பிடிப்பது இயலாதெனக் கண்டு கொண்ட இராமர் ஒரு அம்பை அதன் மீது எய்ய அந்த மான் தன் உருவை விட்டு சுயரூபம் பெற்றது. சுய உருவில் மாரீசன் "ஆ! சீதா! இலட்சுமணா!!" என இராமர் கத்துவது போலக் கத்திக் கொண்டே கீழே விழுந்தான்.
மான் உருவில் வந்தவன் மாரீசனே என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று. எனவே அவர் இனி அரக்கன் எவனும் வரமாட்டானென் நினைத்து ஆசிரமத்திற்குத் திரும்பலானார். இதற்குள் இராமர் கூக்குரலிடுவது போன்ற சத்தம் கேட்டு சீதை "இலட்சுமணா, இதென்ன, உன் அண்ணா குரல் மாதிரி இருக்கிறதே.
நீ ஓடிப்போய் பார்த்து அவருக்கு உதவி செய்" என்று தன் மனத்தில் ஏற்பட்ட பயத்தை வெளிப்படுத்தியவாறு கூறினாள். இலட்சுமணனோ "அண்ணாவை முப்பத்து முக்கோடி தேவர்களே வந்து எதிர்த்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது மாரீசன்சனென்னும் அரக்கனின் மாயாஜாலம். அண்ணா என்னை இங்கே உங்களுக்குத் துணையாக இருக்கச் சொல்லி இருக்கிறார். எனவே நான் போக மாட்டேன்" என்றான்.
அது கேட்டு சீதை "அவர் ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்றால்கூட போய் உதவாத நீ அவருக்கு விரோதியா அல்லது நண்பனா? உடனே இங்கிருந்து போய் அவருக்கு உதவி செய். இராமர் இறந்தாரென்றால் மறு வினாடி என் உயிர் என் உடலில் இருக்காது. அப்படி இருக்கையில் நீ என்னை மட்டும் காப்பது சரியல்ல. தயவு செய்து இங்கிருந்து போகப் போகிறாயா, இல்லையா?" என்று மிகவும் கடுமையான சொற்களை உபயோகித்தாள்.
இலட்சுமணன் என்ன எடுத்துக் கூறியும் சீதையிடமிருந்து மேலும் கடுமையான சொற்கள் வெளி வரவே இலட்சுமணன் சற்று ஆத்திரமே கொண்டான். அவன் சீதையிடம் "தேவியே, பெண்கள் எப்போதுமே ஆத்திரத்தை மூட்ட முன்பின் யோசியாமல் பேசி விடுவார்கள். இந்தக் கடுஞ்சொற்கள் என்னை பாதிக்காது. அதன் பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். இனி நான் செல்கிறேன். உங்களை தேவதைகள் தான் காக்க வேண்டும்" எனக் கூறி அரை மனத்தோடு கிளம்பிச் சென்றான்.
இலட்சுமணன் தலை மறைந்ததும் இராவணன் சன்னியாசி வேடத்தில் சீதை இருக்கும் குடிலின் முன் வந்தான். காவி ஆடை, கால்களில் பாதக் குறடுகள், கையிலே கமண்டலம். மந்திரங்களை உச்சரித்தவாறே அவன் சீதையைப் பார்த்தான். அப்போது அவள் இராமரை நினைத்துக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள்.
சீதையின் அழகால் கவரப்பட்ட இராவணன் அப்படியே சிலைப்போல் நின்று ரசித்தான். பின்னர் சீதையிடம் "பெண்மணி, நீ யார்? இப்படிப் பட்ட அழகான பெண்ணை நான் இதுவரை கண்டதே இல்லை.
இவ்வளவு அழகுள்ள நீ அரக்கர்கள் வாழும் இப்பகுதியில் வசிக்கிறாயே! நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?" என்று கேட்டான். என்றான். சீதையோ அவனை உண்மையிலே சன்னியாசி என எண்ணி வரவேற்றுப் பூசித்தாள். ஆசனம் போட்டு அதில் அமர்ந்து உணவு ஏற்றுக்கொள்ளும் படி வேண்டினாள். இராவணன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அவள் தன் விவாகம் நடந்தது முதல் அக்காட்டிற்கு வந்ததுவரை ஒன்று விடாமல் விவரமாகச் சொன்னாள்.
அதன் பின்னர் அவள் "மா முனிவரே, தங்களது நாமதேயம் யாதோ? தங்கள் ஆசிரமம் எங்குஉள்ளதோ?" என்று கேட்டாள். அதற்கு இராவணன் "நான் அரக்கர்களின் அரசன் இராவணன். எனக்கு எவ்வளவோ மனைவியர் இருந்தும் உன் போல அழகுள்ளவர் யாருமே இல்லை. நீ என்னோடு வந்துவிடு. இலங்கையில் சுகமாக வாழலாம்" என்றான்.
அதுகேட்டு சீதை வெகுண்டாள். இராவணனைக் கடிந்து கொண்டாள். இராமர் மகாபராக்கிரமசாலி என்றும் கூறி பயமுறுத்திப் பார்த்தாள். இதையெல்லாம் இராவணன் கேட்டு பேசாமல் போய்விடுவானா? அவன் தனது தீர வீர பராக்கிரமத்தைக் கூறி "என் பெயரைக் கேட்டாலே இந்த அண்டமே நடுங்கும். நீ ஒரு வேளை இராமன் மிகுந்த பலசாலியென எண்ணி என்னோடு வரத் தயங்குகிறாயோ? அந்தக் கவலையை விட்டொழி. இராமனை என்னால் அடக்கிவிட முடியும்" என்றான்.
அப்போது சீதை "நீ உன்னைக் குபேரனின் தம்பி என்று கூறிக் கொள்கிறாய். ஆனால் உன் வார்த்தைகள் மகா பாவத்தை செய்யத் துணிந்திருக்கிறாய் எனக் காட்டுகிறதே. பிறர் மனைவி மீது ஆசைப்படாதே. அப்படி ஆசை கொண்டால் நீயும் உன் அரக்கர் குலமும் அடியோடு ஒழிந்து விடும்" என்றாள்.
இதைக் கேட்டதும் இராவணனுக்குக் கோபம் வந்து விட்டது. அவன் சன்னியாசி உருவை விட்டுத் தன் உண்மை உருவத்தை எடுத்துக் கொண்டான். கரகரத்த குரலில் "ஏய் பைத்தியக்காரப் பெண்ணே! உனக்கு என் போன்ற கணவன் கிடைப்பதே மாபெரும் பாக்கியமாகும். நீ என்னை இப்போது நிராகரித்தால் பின்னால் மிகவும் வருந்துவாய்" என்று கூறி சீதையைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் உயரக் கிளம்பினான்.
சீதையோ பலமாகக் கத்தினாள் கதறினாள். இதே சமயம் ஒரு பெரிய மரத்தின்மீது ஜடாயு இருப்பதைக் கண்டாள். அவள் "ஜடாயு, என்னை இராவணன் கவர்ந்து செல்வதாக இராமரிடம் சொல்" என்றாள். அப்போது ஜடாயு இராவணனைப் பார்த்து "இராவணா, நீ செய்வது தகாத செயல். மனிதர்கள் தம் மனைவிமார்களை எப்படிப் பாதுகாக்கிறார்களோ அது போல ஒரு பெண்ணைக் காப்பது மன்னனின் கடமை. வேலியே பயிரை மேய்வதுபோல நீயே இப்படிச் செய்கிறாயே. நானோ மிகவும் சாதாரணமானவன். வயதானவன்.
ஆயுதம் எதுவும் இல்லாதவன். நீயோ வாலிப முறுக்கு கொண்டவன். ஆயுதங்கள் கொண்டவன். ஆயினும் உன்னை நான் தடுத்து எதிர்த்து நிற்கப் போகிறேன். இராமனும் இலட்சுமணனும் இல்லாத வேளையில் நீ இப்படி சீதையைக் கவர்ந்து செல்வதுதான் சூரத்தனமோ?" என்று கேட்டான்.
இராவணன் தன் தேரிலிருந்தபடியே ஜடாயுவை அம்புகளால் தாக்கினான். ஜடாயுவும் தனது மூக்கினாலும் கூரிய கால் நகங்களாலும் இராவணனின் கவசத்தையே துளைத்து விட்டான். இதனால் இராவணனது உடலிலும் காயம் ஏற்பட்டது. அதுமட்டும்அல்லாமல் இராவணனது வில் உடைந்தும் விட்டது. தேர்ப்பாகனும் இறந்து வீழ்ந்தான். அவனது தேரும் தவிடுபொடியாயிற்று.
இராவணன் சீதையைத் தன் கைகளுக்கிடையே தூக்கிக் கொண்டு உயரக் கிளம்பினான். ஆனால் ஜடாயு அவனைப் பார்த்து "சீச்சீ, நீயும் ஒரு வீரனா? இராமரை எதிர்த்துப் போரிட தைரியமில்லாது ஓடுகிறாயே. அவர் வரும் வரை இங்கே நில். அவர் வந்த பிறகு அவருடன் தனியாளாக நின்று சண்டையிடு, பார்க்கலாம்" என்றான். இராவணனோ தன் போக்கிலேயே போகலானான். ஜடாயு இராவணனது முதுகைப் பற்றிக் கீறலானான்.
இராவணன் சீதையைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் ஜடாயுவை எதிர்க்கலானான். இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இராவணன் தனது கத்தியால் ஜடாயுவின் இறக்கைகளையும் கால்களையும் வெட்டித் தள்ளினான். ஜடாயு குற்றுயிராகக் கீழே விழுந்தான்.
சீதையோ ஓவென அழுது கொண்டு ஜடாயுவை நோக்கி ஓடினாள். இராவணன் அவளைப் பிடிக்க ஓடிவர அவள் அங்குமிங்கும் ஓடலானாள். இராவணனோ அவளைப் பிடித்துக் கொண்டு விட்டான். மீண்டும் அவளைத் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் கிளம்பினான்.
இராவணன் சீதையோடு உயர ஆகாயத்தில் செல்கையில் சீதையின் ஆபரணங்கள் சில பூமியில் வந்து விழுந்தன. சீதையோ இராவணனிடம் என்ன முறையிட்டும் பயனில்லை. அவனோ அவளை விடவே இல்லை. ஓரிடத்தில் மலை மீது சில குரங்குகள் இருப்பதை சீதை கண்டாள்.
�இவர்கள் ஒருவேளை இராமருக்கு என்னைப் பற்றிய தகவல் கொடுக்கலாம்� என்று நினைத்து தன் துணியின் ஒரு துண்டில் தனது நகைகளைக் கட்டி அவர்களிடையே விழுமாறு விட்டு எறிந்தாள். அதை இராவணன் கவனிக்கவில்லை. ஆனால் அந்த நானரங்கன் மட்டும் சீதையையும் அவளது செய்கையையும் கவனித்தன.
இராவணன் கடலைக் கடந்து இலங்கையை அடைந்தான். இலங்கை அழகிய நகரம். அழகிய பாதைகள் பல கொண்டது. இராவணன் நேராகத் தன் மாளிகைக்குச் சென்றான். உள்ளே நுழைந்ததும் அரக்கிகளைக் கூப்பிட்டு "இவளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
என் அனுமதி இல்லாது இவளை யாருமே பார்க்கவோ, இவளிடம் பேசவோ கூடாது. ஆனால் இவள் எதைக் கேட்டாலும் கொண்டு வந்து கொடுங்கள். இவளது மனத்தைப் புண்படுத்தும் வார்த்தைகளை யாருமே சொல்லக்கூடாது. இதைஎல்லாம் மீறினால் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமென்பதை நான் சொல்லத் தேவை இல்லை" என்றான். அவர்களும் அதற்குக் கீழ்ப்படிந்தனர்.
No comments:
Post a Comment