Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, 3 February 2014

அயோத்தியா காண்டம் - 8

பரதனைப் படகில் ஏற்றிச் செல்ல குகன் நினைத்த போதிலும் அவனுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகம் அடியோடு போய் விடவில்லை. எனவே அவன் "ஐயா, இவ்வளவு பெரிய சேனையோடு நீங்கள் வந்திருப்பதைப் பார்த்தால் நீங்கள் யார்மீதோ போர் தொடுக்க உத்தேசம் கொண்டுஇருப்பதாகத் தெரிகிறது. ஒரு வேளை இராமரைத் தாக்கத்தான் போகிறீர்களோ?" என்று கேட்டான்.
 
அதற்கு பரதன் "என்ன அபசாரம்! இராமருக்கு துரோகம் நினைப்பதா? என் நடத்தைதான் உமக்கு இந்த சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டதோ? இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். இராமர் எனக்கு என் தந்தைக்குச் சமம். இப்போது நான் செல்வது அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கே" என்றான்.
 
அதுகேட்டு குகன் "ஆகா, நீர் தாம் எவ்வளவு உயரிய பண்பாட்டைக் கொண்டவர்? உமது திருவடிகளில் வீழ்ந்து தலை வணங்குகிறேன்" எனக் கூறி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான்.
 
அப்போது நன்கு இருட்டி விட்டது. பரதனும் சத்துருக்கனனும் படுத்தவாறே குகனிடம் இராமரைப் பற்றிய விவரங்களை விசாரிக்கலாயினர். அப்போது குகனும் "இராமரையும் சீதையையும் கண்களை இமைகள் காத்து வருவதுபோல் இலட்சுமணன் காத்து வருகிறான். இரவு வேளைகளில் அவர்கள் தூங்கும்போது தான் விழித்திருந்து காவல் புரிகிறான். அவன் மனம் படும் பாட்டைச் சொல்லவே முடியாது.

பதிநான்கு வருட காலத்தைக் கழித்து அயோத்திக்குச் செல்ல முடியுமாவென அவன் மனத்தில் ஐயம் கூட ஏற்பட்டு விட்டது" என்றான்.
 
பரதன் அதைக் கேட்டு மனம் பதைத்துப் போனான். தன்னால் எவ்வளவுபேர் துயரத்திற்கு ஆளாகி உள்ளார்களென்பதை நினைக்க அவன் நெஞ்சே வெடித்துப் போய்விடும் போலிருந்தது. அதே சமயம் அங்கு கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவரும் வந்து சேர்ந்தனர்.
 
குகன் அவர்களுக்கும் இராமரைப் பற்றி விவரமாகக் கூறினான். சீதையும் இராமரும் மரத்தடியே படுத்து உறங்கிய இடத்தையும் காட்டினான். அரண்மனையிலே அரச போகத்தில் இருந்த அரசகுமாரன் அந்த இடத்தில் புல்லைப் படுக்கையாக விரித்துப் படுக்க வேண்டி வந்ததேயென பரதன் நினைத்து நினைத்து கண்ணீர் உகுக்கலானான்.
 
மறுநாள் காலையில் குகன் பரதனிடம் "நேற்று இரவு ஒருவிதக் குறையுமில்லாது சுகமாகக் கழிந்ததா?" எனக் கேட்க பரதனும் "குறை ஒன்றுமில்லை. எங்களை எதிர் கரையில் எவ்வளவு சீக்கிரம் கொண்டு போய்விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுங்கள்" என்றான்.
 
உடனே குகன் தன் படகுகளை எல்லாம் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். படகுகள் வரவே அதில் யாவரும் ஏறிக் கொண்டனர். சேனைகள், உணவுப் பொருள்கள் மற்றும் பல சாமான்களையெல்லாம் படகுகளில் ஏற்றப்பட்டன. பரதன், சத்துருக்கனன், வசிஷ்டிர், கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் ஒரு படகில் வரிசையாகச் செல்லலாயின.
 
யானைகள் நதியில் இறங்கி நீந்தின. சில வீரர்களும் நீந்தியே சென்றனர். வேறு சிலர் மரக் கட்டைகளைப் பற்றிக் கொண்டு செல்லலாயினர். மறுகரையை யாவரும் அடைந்தனர். அப்போது பரதன் வசிஷ்டரோடு கலந்து ஆலோசித்து பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை தரிசிப்பது என்று தீர்மானித்துக் கொண்டான்.

தனது சேனையோடு அந்த ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். ஆசிரமத்திற்குச் சற்று தூரத்திலேயே அவன் தனது சேனையை நிறுத்திவிட்டு தான் அணிந்திருந்த பட்டாடைகளைக் களைந்து சாதாரண உடைகளை அணிந்து கொண்டான். வில்லம்புகளைத் தனியே வைத்து வசிஷ்டர், மந்தோரிமார் ஆகியோரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். ஆசிரம வாசலில் மற்றவர்கள் நிற்க பரதனும் வசிஷ்டரும் உள்ளே சென்றனர்.
 
பரதனை பரத்வாஜருக்கு வசிஷ்டர் அறிமுகப் படுத்தினார். அவரும் ஷேமசாமாசாரங்களை விசாரித்துவிட்டு "பரதா, நீ நாட்டையாளாமல் ஏன் இங்கே வந்தாய்?" என்று கேட்டார். அவருக்கும் குகனுக்கு ஏற்பட்ட சந்தேகமே தோன்றியது.
 
எல்லாருக்கும் ஒரேவித சந்தேகம் ஏற்படுவது கண்டு பரதனின் மனம் புண்ணாகியது. குகனிடம் கூறியது போலவே அவன் பரத்வாஜரிடமும் தன் எண்ணத்தைக் கூறினான். அதுகேட்டு அவரும் மகிழ்ந்துபோய் "இராமர், சீதை, இலட்சுமணன் ஆகிய மூவரும் இப்போது சித்திரகூட மலைப் பகுதியில் இருக்கிறார்கள். இன்று நீ இங்கே இரு. நாளை அங்கு செல்லலாம்" என்றார். பரதனும் அதற்கு இணங்கினான்.
 
அப்போது பரத்வாஜர் "உன் சேனை முழுவதும் என் விருந்தினரே. அதனை ஏன் தொலைவில் நிறுத்தி விட்டாய்? யாவரையும் இங்கு இழைத்து வா" என்றார். அதற்கு பரதனும் "மகாத்மா, ஆசிரமப் பகுதியில் சேனை புகக்கூடாதென்பதற்காகவே அவர்களை அங்கு நிறுத்தி வைத்தேன். தாங்கள் இப்போது அவர்களை அழைத்து இருப்பதால் இங்கு வந்து தங்கச் சொல்கிறேன்" என்றான்.
 
பரத்வாஜர் யாவருக்கும் அரியவிருந்தொன்றை நடத்தினார். விசுவகர்மா அனைவரும் தங்க வசதியான இல்லங்களை நொடிப் பொழுதில் அமைத்துக் கொடுத்தான். நதிதேவதைகள், எட்டு திசைப் பாலகர்கள் வந்து அவர்களை உபசரித்தனர். கந்தர்வர்கள் கானம் புரிய தேவதைகள் நடனமாடினர். பரதனுக்குத் தனியாக இடம் இருந்தது.

அதில் சிம்மாசனமும் போடப்பட்டு தர்பார் நடத்த ஒரு மண்டபமும் கட்டப்பட்டிருந்தது. பரதன் எல்லாரையும் ஆசனங்களில் அமர்த்தித் தானும் அவர்களோடு அமர்ந்து கொண்டான். அவன் சிம்மாசனத்தின் மீது அமரவில்லை. அவனை எவ்வித நாட்டியமும் இசையும் மனத்தைச் சஞ்சலப் படுத்தவில்லை.
 
தேவகன்னிகைகள், நாரதர் தும்புரு போன்றவர்களெல்லாம் பரதனையும் அவனது ஆட்களையும் களிப்பிக்க வந்தனர். வீரர்களுக்கு விருந்தும் உயர்தர மதுவும் கிடைத்தது. அவர்களுக்கு சொர்க்கபோகமே கிட்டியது.
 
 அவர்களில் பலர் ஆடினர், பாடினர், ஆனந்தக் கூத்தாடினர். உண்ண வகைவகையான உணவு பொருள்கள் குடிக்க உயரிய மது, மனத்தைக் களிப்பிக்க இன்னிசையும் நடனமும் இருக்க யார்தான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருக்க மாட்டார்கள்? இப்படியாக அன்றைய இரவுப் பொழுது கழிந்தது.
 
மறுநாள் காலையில் பரதன் எழுந்து பரத்வாஜரை தரிசித்தான். அவரது அரிய உபசரணைக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். பின்னர் அவரிடம் சித்திர கூடபர்வதத்திற்குச் செல்லும் வழியையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். பரத்வாஜரும் அங்கு செல்லும் வழியைக் கூறினார்.

கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவரும் பரத்வாஜரை வணங்க பரதனும் அவர்கள் தனது தாய்மார்களெனக் கூறினான். கைகேயியைப் பற்றிக் கூறும் போது சற்றுக் கடுமையான வார்த்தைகளையே உபயோகித்தான். பரத்வாஜரோ "இராமர் வனவாசம் செய்யப் போனதற்கு கைகேயியைக் குறை கூறாதே. அதனால் பெருத்த நன்மையே ஏற்படப் போகிறது" என்றார்.
 
பரதன் முனிவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு தனது படையோடு சித்திரகூட மலையை நோக்கிப் புறப்பட்டான். சித்திரகூட மலைச்சாரலை அடைந்ததும் இராம இலட்சுமணர்கள் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கத் தன் வீரர்களை பரதன் அனுப்பி வைத்தான்.
 
சில வீரர்கள் சுற்றிப் பார்த்து ஓரிடத்தில் புகை வருவதைக் கண்டனர். அங்கு யாராவது இருக்கக் கூடுமென்றும் அவர்களை விசாரித்து இராமர் வசிக்குமிடத்தை அறியலாமென பரதன் நினைத்தான். எனவே அவனது வீரர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சுமந்திரரையும் வசிஷ்டரையும் அழைத்துக் கொண்டு அந்த திசையை நோக்கிச் சென்றான்.
 
இராமர் சித்திரகூடப் பகுதிக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. அவர் சீதையுடனும் அந்த அழகிய மலைப் பகுதியைக் காணக் கிளம்பினார். அப்பகுதியிலுள்ள மரங்கள், அழகிய பறவைகள், மிருகங்கள், பலவகையான காட்சிகள் மனத்தைக் கவரும் வகையில் இருந்தன. அவற்றையெல்லாம் கண்டு இராமர் சீதையிடம் "நீயும் இலட்சுமணனும் இங்கு இருக்க, இத்தகைய காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டே வாழ்நாள் முழுவதையும் கழித்து விடலாம்" என்றார்.
 
அவர்களிருவரும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர். இருவரும் பேசிக்கொண்டே காட்டில் கிடைத்தவற்றைப் புசிக்கலாயினர். அப்போது காட்டில் பிளிறிட்டு ஓடும் யானைகளை இராமர் கண்டார். அவை பரதனின் சேனையைக் கண்டு மிரண்டு ஓடின.

அது கண்டு இராமர் "இலட்சுமணா, காட்டு மிருகங்களெல்லாம் மிரண்டு ஓடுவதைப் பார்த்தாயா? யாராவது அரசன் இக்காட்டில் வேட்டையாட வந்திருக்க வேண்டுமென்றே நான் நினைக்கிறேன்" என்றார்.
 
இலட்சுமணனும் ஒரு உயரமான மரத்தின்மீது ஏறிப் பார்த்தான். அப்போது வடதிசையில் ஒரு பெரிய சேனை இருப்பதை அவன் கண்டான். அவன் இராமரிடம் "ஏதோ ஒரு பெரிய சேனை நாமிருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சீதையை குகைக்குள் அனுப்பி விடுங்கள். நெருப்பை அணைத்து விட்டு வில்லம்புகளை எடுத்துத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்" என்றான்.
 
அப்போது இராமர் "அது யாருடைய சேனையென்று தெரிகிறதா?" எனக் கேட்க இலட்சுமணனும் தேர்களில் கட்டப்பட்டுள்ள கொடிகளைக் கூர்ந்து கவனித்தான். உடனே "அண்ணா, நாடு கிடைத்தது போதாதென நினைத்து பரதன் நம்மை ஒழித்து விட வந்து கொண்டிருக்கிறான். அவனை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்?" என்றான்.
 
அதற்கு இராமர் "இலட்சுமணா, நீ ஆத்திரப்படாதே. பரதன் நம்மை அழிக்க வருவதாக ஏன் நினைக்கிறாய்? அவன் நம்மைக் காணவே வருகிறான். நீ வீணாக அவன்மீது சந்தேகம் கொண்டிருக்கிறாய். நீ பரதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவன் தன் மாமன் வீட்டிலிருந்து வந்து யாவற்றையும் தெரிந்து கொண்டு நம்மைக் காண வருகிறான். உனக்கு நாடாள ஆசை இருக்குமானால் சொல். இப்போதே பரதனிடமிருந்து நாட்டை வாங்கிக் கொடுக்கிறேன். அவன் நான் சொல்வதை ஒரு நாளும் தட்டமாட்டான்" என்றான்.
 
அது கேட்டு இலட்சுமணன் வெட்கப்பட்டுத் தலைகுனிந்து கொண்டான். பின்னர் "ஒருவேளை நம் தந்தையார் நம்மைக் காணவருகிறாரோ என்னமோ" எனவும் கூறினான். அப்போது இராமர் இலட்சுமணனை மரத்தினின்றும் இறங்கி வரும்படிக் கூற அவனும் இராமரிடம் வந்து சேர்ந்தான்.                                                            

(தொடரும்)

No comments:

Post a Comment