தாரை இலட்சுமணரிடம் "ஐயனே, சுக்ரீவன் இராமருக்குக் கொடுத்த வாக்கைச் சற்றும் மறக்கவில்லை. எல்லா வானர வீரர்களையும் பதனைந்து நாள்களுக்குள் இங்கு வந்து சேரும்படி சுக்ரீவன் கட்டளை இட்டிருக்கிறார். இன்றுதான் பதினைந்தாவது நாள். வானரப்படை திரண்டதும் அப்பணியை அவசியம் நிறைவேற்றியே தீருவார்.
இவ்வளவு நாள்களாகப் பல துன்பங்களுக்கு உள்ளாகிய காரணத்தால் அவரால் சுகமான வாழ்க்கை வாழ முடியாமல் போயிற்று. ஆகையால் இப்போது சற்று சுகமாகக் காலம் கழிக்க அவர் மனம் எண்ணியது. எனவே தயவு செய்து தாங்கள் இந்த சிறு குறையை பொருட்படுத்தாமல் அவரை மன்னித்து விட வேண்டும்" எனச் சாந்தம் அடையும் வகையில் கூறினாள்.
அது கேட்டு இலட்சுமணனும் ஒருவாறு கோபம் தணிந்தான். அப்போது சற்று துணிவு பெற்றவனாய் சுக்ரீவன் லட்சுமணனிடம் வந்து "உங்கள் தமையனார் செய்த மாபெரும் உதவிக்குமுன் நான் செய்யப் போகிற இந்த மிகச் சிறிய பணி எந்த மூலைக்கு? இந்த காலதாமதம் ஏற்பட்டதற்கு என்னை நீங்கள் மன்னிக்கவும். பொதுவாக தவறுதல் நடப்பது உலகில் இயல்புதானே? ஆகையால் என்னை மன்னித்து விடுங்கள்" எனக் கூறினான்.
அதற்கு இலட்சுமணன் "நீ சொல்வதும் சரிதான். உங்களுடைய உதவி இப்போது எங்களுக்கு தேவர்கள் செய்யும் உதவி போலாகும். கவலையே உருவாக இருக்கும் இராமரை நீ வந்து தேற்று. என்னால் அவரது சோகத்தைப் பார்க்க முடியவில்லை. உன் மீது எனக்கு ஏற்பட்ட என் கோபத்திற்குக் காரணம் அவரது துயரமே" என்றான்.
சுக்ரீவன் அப்போது அனுமாரைப் பார்த்து "வானர வீரர்களையெல்லாம் அழைத்து வரும்படி கட்டளை இட்டு இருந்தேன். அநேகமாக எல்லாரும் வந்துவிட்டார்கள். இதுபோக நம் நாட்டைவிட்டு வெளியே போய் இருக்கும் வீரர்களை எல்லாம் உடனே வரவழைத்துவிடும்" எனக் கட்டளை இட்டான். அதன் படியே வானர வீரர்களை அழைத்துவர அனுமார் பல வீரர்களை அனுப்பினார்.
சுக்ரீவன் மனப்பூர்வமாக சிரத்தையுடன் இராமருக்கு உதவி செய்ய முயன்று வருவது கண்டு இலட்சுமணன் மிகவும் திருப்தி அடைந்து அவனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு இராமர் இருக்குமிடத்திற்குச் சென்றான். வானரங்கள் புடைசூழ சுக்கிரீவன் பிரஸ்ரணமலையை அடைந்து இராமர்முன் போய் பயபக்தியோடு வணங்கி நின்றான்.
பின்னர் அவன் இராமரிடம் "அண்ணலே, நான் பெருத்த வானர சேனையைத் திரட்டி வருகிறேன். எல்லா வீரர்களும் இன்னும் நாலைந்து நாள்களுக்குள் வந்து விடுவார்கள்.
அவர்களைக் கொண்டு இராவணனைக் கொன்று சீதாதேவியை மீட்டுவர முடியும்" என்றான். அப்போது இராமரும் "சுக்ரீவா, உன் போன்ற நண்பனின் உதவி கிடைத்த பின்னர் இராவணனைத் தோற்கடிப்பது வெகு சுலபமே. இனி நாம் அம்முயற்சியில் ஈடுபடுவோம்" என்றார். சுக்ரீவனது வானரசேனை ஆர்ப்பரித்து நின்றது.
கிஷ்கிந்ததையே போர்க்கோலம் பூண்டது. மாபெரும் வானர வீரர்கள் நாலா திக்கிலிருந்தும் வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர். சுக்ரீவனின் மாமன் ஆயிரம் வானர வீரர்களோடு வந்து சேர்ந்தான். அனுமாரின் தந்தை கேசரி இருபத்தோறாயிரம் வானர வீரர்களோடு வந்து சேர்ந்தார். கவாட்சன், தூம்ரன், பவனன், நீலன், கவயன், தரிமுகன், கஜன், ஜாம்பவந்தன், ருமன்யந்தன், கந்தமாதனன் முதலிய மாபெரும் வானர வீரர்கள் தத்தம் படைகளோடு வந்து சேர்ந்தனர்.
எல்லா வானரங்களும் கிஷ்கிந்தாபுரிக்கு அருகேயுள்ள மலைகளில் முகாமிட்டன. அப்போது சுக்ரீவன் அந்த மாபெரும் வானரப் படையை இராமரிடம் ஒப்படைத்து அதை அவர் இஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளும்படிக் கூறினான். அப்போது இராமர் "சுக்ரீவா, நாம் படையெடுக்குமுன் இரண்டு விஷயங்களை அறிந்து கொண்டாக வேண்டும். சீதை உயிரோடு இராவணனிடம் இன்னமும் சிறைப் பட்டிருக்கிறாளா என்பது ஒன்று. மற்றொன்று இராவணனின் இருப்பிடம். இவற்றை அறிந்து கொண்ட பின்னரே நாம் நமது திட்டத்தை வகுக்க முடியும். இந்த வேலையை உன் படை வீரர்கள் செய்தாக வேண்டும்" என்றார்.
உடனே சுக்ரீவன் வினதன் என்னும் வானர வீரனை அழைத்து "நீ கிழக்குத் திசையில் சென்று சீதையைப் பற்றியும் இராவணனது இருப்பிடத்தைப் பற்றியும் தகவல் சேகரிக்க முயற்சி செய்" என்று கூறினான். சுக்ரீவனின் கட்டளைக்கு இணங்கி அவனும் தன் படைகளோடு கிழக்கு நோக்கிச் சென்றான். அவன் ஒரு மாத காலத்திற்குள் திரும்ப வேண்டும் என்றும் சுக்ரீவன் கூறி அனுப்பினான்.
அதன் பின்னர் நீலன், அனுமார், ஜாம்பவான், கவாட்சன், கந்தமாதனன் முதலிய பல வீரர்களைத் தென் திசையாகச் சென்று சீதையைத் தேடிவர அனுப்பினான். சுக்ரீவன் அவர்களிடம் "தென் திசையில் சென்றதும் மாபெரும் கடல் உள்ளது. அதனைக் கடந்து இலங்கையிலும் நீங்கள் போய்த் தேட வேண்டி வரலாம். எனவே இலங்கையிலும் தேடிப் பார்த்துவிட்டு வாருங்கள். யார் சீதையைக் ‘கண்டேன்' என்று என்னிடம் வந்து கூறுகிறானோ அவனுக்கு என் ஐசுவரியத்தில் பாதியை அளிக்கிறேன்" என்றான்.
இதுபோல மேற்குத் திசையில் செல்ல சுசேனன் என்னும் வீரனையும் வடக்கே செல்ல சதவலி என்பவனையும் சுக்கிரீவன் தேர்ந்துஎடுத்தான். அவர்கள் எல்லாரையும் சுக்ரீவன் சமமாகவே கருதினானாயினும் அனுமாரை மட்டும் அப்படி அவனால் நினைக்க முடியவில்லை.
அனுமானால்தான் அந்த வேலையை செய்ய முடியுமென அவனது மனம் கூறியது எனவே அவன் அனுமாரிடம் "அனுமாரே, உம் சக்தி எனக்குத் தெரியும். நீர் நிரிலும் காற்றிலும் செல்லக் கூடிய விசேஷ சக்தி பெற்றவர். உமது தந்தையான வாயுதேவருக்கு உள்ள மகிமை உனக்கும் உண்டு. நான் உம்மைத் தான் நம்பி இருக்கிறேன். நீர் தாம் சீதாதேவியைக் கண்டு பிடித்து வரவேண்டும்" என்றான்.
அப்போது இராமருக்கு சுக்ரீவன் அனுமாரிடம் எவ்வளவு ஆழ்ந்த சிரத்தையும் நம்பிக்கையும் வைத்து இருக்கிறானென்பது தெரிந்தது. இராமருக்கும் அனுமாரால்தான் அந்த வேலை நடக்குமென்று தோன்றியது. எனவே அவர் தம் பெயர் பொறித்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து "சீதையைக் கண்டால் இந்த மோதிரத்தை நீ காண்பி. கண்டிப்பாக இதைக் கண்டதும் அவளுக்கு உன்மீது நம்பிக்கை ஏற்படும். இதனால் அவளுக்கு ஆறுதல் ஏற்படும்" என்றார். அனுமாரும் அந்த மோதிரத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
அப்போது இராமர் "அனுமானே, நான் உன்னை முழுமையாக நம்பி இருக்கிறேன். எனவே உன்னால் எவ்வளவு முயல முடியுமோ அந்தளவிற்கு முயன்று சீதையைத் தேடு. நீதான் எனக்கு நற்செய்தி கொண்டுவரப் போகிறாய் என்று என் மனம் மிகவும் திடமாகக் கூறுகிறது. நானும் அதே நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். அது அழியாதபடி பார்" என்றார்.
அனுமானும் தான் முழு முயற்சி செய்வதாகக் கூறிவிட்டுத் தன் வானர வீரர்களோடு தெற்குத் திசையை நோக்கிக் கிளம்பினான். மற்ற வானரர்களும் மற்ற மூன்று திசைகளிலும் சென்றனர். எல்லாரும் ஒரு மாத காலத்திற்குள் திரும்பி வந்துவிட வேண்டுமென்பது சுக்ரீவனின் கட்டளை. அதனை அவர்கள் நினைவில் கொண்டு சீதாதேவியைத் தேடலாயினர்.
வானரங்கள் கிளம்பிச் சென்றதும் இராமர் பிரஸ்ரண மலையில் அந்த ஒரு மாத காலத்தையும் கழிக்கலானார். எப்போது எந்த நிமிடம் சீதையைக் கண்டதாக வானர வீரர்களிடமிருந்து தகவல் வருமோ என்று இராமர் மிகவும் ஆவலோடு எதிர் பார்க்கலானார்.
நான்கு திசைகளிலும் சென்ற வானரர்கள் சீதையைத் தேடித் திரியலாயினர். பகலெல்லாம் தேடி அலைந்து வழியில் கிடைத்த பழங்களையும் கிழங்குகளையும் உண்டு இரவில் மரங்களிலோ தோப்புகளிலோ தங்கி மீண்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இப்படியாகத் தேடிய வானரங்களில் கிழக்கு, வடக்கு, மேற்கு திசைகளில் சென்ற வானரங்கள் யாதொரு தகவலும் இல்லாமல் குறித்த ஒருமாத காலத்திற்குள் கிஷ்கிந்தைக்கு வந்து விட்டன.
தென் திசையில் சென்ற வானரங்கள் விந்திய பர்வதத்தைக் கடக்க மிகவும் சிரமப்பட்டன. உயர்ந்த சிகரங்களையும், பல நதிகளையும் பயங்கரப் பள்ளத்தாக்குகளையும் கொண்ட அப்பகுதியைக் கடப்பது சிரமமே. அதிலும் சீதையைத் தேடிக் கொண்டே செல்வதென்றால் எவ்வளவு கடினமான காரியம்.
ஓரிடத்தில் அவர்கள் ஒரு பயங்கரமான இராட்சதனைக் கண்டனர். அவன்தான் இராவணனென அங்கதன் நினைத்து ஓங்கி ஒரு அறை அறைந்தான். அந்த அறை விழுந்ததும் அந்த அரக்கன் இரத்தம் இரத்தமாக கக்கினான். அப்பகுதியை வானரர்கள் சல்லித்துப் பார்த்தனர். ஆனால் அந்த இடத்தில் சீதை எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை.
கடைசியில் யாவரும் களைத்துப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்தனர். அப்போது அங்கதன் மற்றவர்களிடம் "நாமும் எவ்வளவோ முயன்று விட்டோம் சீதாதேவியைப் பற்றிய எவ்வித தகவலையும் நம்மால் அறிய முடியவில்லையே. நாள்கள்என்னவோ கழிந்து கொண்டே செல்கின்றன. இப்படி இல்லாமல் இன்னும் தீவிரமாக நாம் தேடிப் பார்ப்போம். இனி இரவு வேளைகளைக் கூடப் பகல் போலக் கருதித் தேடிக் கொண்டே செல்வோம்" என்றான்.
மற்ற வானர வீரர்கள் அப்பகுதியில் சீதையைத் தேடிப் பார்க்கலாயினர். ஒரு சிறு இடம் கூட விட்டுவிடவில்லை. ஆயினும் அவர்களது முயற்சி வெற்றிபெறவில்லை. சீதையை அங்கு காணோம். ஆனால் சுக்ரீவன் கொடுத்த ஒரு மாதகாலத் தவணையும் தீர்ந்து விட்டது.
(தொடரும்)
No comments:
Post a Comment