மயக்கமடைந்து வீழ்ந்த தாரைக்கு இராமர் மயக்கம் தெளிவித்தார். கண் விழித்த தாரை அவரை நோக்கி, "ராமா! எந்த அம்பினால் என் கணவரின் உயிரைக் குடித்தாயோ, அதே அம்பினால் என் உயிரையும் போக்கிவிடு! சீதையைப் பிரிந்து நீங்கள் துடிப்பது போல், வாலியும் என்னைப் பிரிந்து துடிப்பார். ஆகவே, அவர் இப்போது இருக்குமிடத்திற்கே என்னையும் அனுப்பிவிடு!" என்று கூறிக் கொண்டே கதறினாள்.
அழுது புலம்பிய தாரையை இராமர் சமாதானப் படுத்தினார். பிறகு, வீழ்ந்துகிடந்த வாலியின் உடலை கிஷ்கிந்தைக்கு எடுத்துச் செல்ல ஒரு பல்லக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல்லக்கில் வாலியின் உடலை ஏற்றியபிறகு, பல வானரங்கள் பல்லக்கைச் சுமந்து கொண்டு கிஷ்கிந்தை சென்றன. அங்கு நகரத்தினூடே பாய்ந்த நதிக்கரையிலுள்ள மயானத்தில் அங்கதன் தன் தந்தையின் உடலுக்கு தீ மூட்டினான்.
தகனக்கிரியை முடிந்தபிறகு அனுமார் பணிவுடன் இராமரை அணுகி, "தங்களுடைய உதவியினால் சுக்ரீவன் பெரிய ராஜ்யத்தைப் பெற்று விட்டார். தயவு செய்து நீங்களே கிஷ்கிந்தைக்கு வந்து அவருடைய பட்டாபிஷேகத்தை நடத்தி வைக்க வேண்டும்" என்றார். அதற்கு இராமர், "என் தந்தையின் கட்டளைப்படி, நான் பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் புரியவேண்டும். ஆகவே, நீங்களே சுக்ரீவனுடைய பட்டாபிஷேகத்தை நடத்தி வையுங்கள்.
அத்துடன், வாலியின் மகனான அங்கதனுக்கும் யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வையுங்கள்!" என்றார். தொடர்ந்து, "சுக்ரீவனை இலங்கைப் போருக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யச்சொல்! மழைக்காலம் முடிந்தவுடன், நாம் இலங்கைக்குச் சென்று, ராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்போம்!" என்றார். சுக்ரீவனிடமும் அவ்வாறே கூறி அவர்களை அனுப்பி வைத்தப் பிறகு, இராமரும், இலட்சுமணனும் ரிஸ்யமுகப் பர்வதத்தில் இருந்த ஒரு குகையில் தங்கினார்.
சுக்வன், அங்கதன், அனுமார் ஆகியோர் பின்னர் கிஷ்கிந்தை திரும்பினார். அங்கு சுக்ரீவனுடைய பட்டாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அதன் பிறகு அதே முகூர்த்ததில் அங்கதனுக்கும் யுவராஜ பட்டாபிஷேகம் நடைபெற்றது. பிறகு சுக்ரீவன், அங்கதன் ஆகியோர் மற்ற வானரங்கள் புடைசூழ மீண்டும் ரிஸ்யமுகப் பர்வதம் வந்து, அங்கு தங்கியிருந்த இராம, இலட்சுமணரின் பாதங்களில் வீழ்ந்து ஆசிபெற்றனர். தான் இராமருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறிவிட்டு, கிஷ்கிந்தை திரும்பினர்.
மழைக்காலம் தொடங்கியது. இராமரும், இலட்சுமணரும் தங்கிஇருந்த குகை மிக விசாலமாக இருந்ததால், அவர்களுக்கு சிரமம் உண்டாகவில்லை. தவிர, அவர்கள் தங்கிஇருந்த குகை கிஷ்கிந்தைக்கு மிக அருகிலேயே இருந்ததால், அங்கு வானரங்கள் நிகழ்த்திய கூத்தும், கும்மாளமும், பாட்டும், செவிகளில் விழுந்தன. ஆனால், அவற்றைஎல்லாம் ரசிக்கும் மன நிலையில் இராமர் இல்லை. மழைக்காலம் எப்போது முடியும், எப்போது இலங்கைக்குச் சென்று சீதையைக் காண்போம் என்று இராமர் துடித்துக் கொண்டிருந்தார்.
ஒருவழியாக மழைக்காலமும் முடிந்தது. ஆனால் சுக்ரீவன் இராமருக்குக் கொடுத்த வாக்குறுதியை அறவே மறந்து விட்டான். தன் மனைவி ரூபாவுடன் எப்போதும் மது அருந்தி கேளிக்கைகளில் ஈடுபட்டவாறு இருந்தான். சுக்வனின் போக்கைக் கண்டு கவலையுற்ற அனுமார் ஒருநாள் அவனை அணுகி, ‘வானர ராஜாவே! நீங்கள் நடந்து கொள்வது சரியில்லை.
உங்களுக்கு இந்த ராஜபோகம் கிடைக்கக் காரணமாகஇருந்த இராமரையும், அவருக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியையும் மறந்து விட்டீர்கள். மழைக்காலம் முடிந்துவிட்டது. ஆனால் இலங்கை மீது போர் தொடுப்பதற்கான ஏற்பாடுகள் எதையும் தாங்கள் இதுவரை செய்யவில்லை. நீங்கள் துரிதமாகச் செயற்பட்டால்தான் நன்றாக இருக்கும். இராமரை காக்கவைப்பது சரியல்ல!" என்று அறிவுரை பகன்றார்.
அப்போதுதான் சுக்ரீவனுக்குத் தன் தவறு புலப்பட்டது. உடனே, நீலனை அழைத்து, ராஜ்யமெங்கும் பரவியிருந்த வானர சேனையைத் தயார்படுத்த உத்தரவிட்டான். பிறகு அனுபவசாலியான ஜாம்பவானை அழைத்து போரைப்பற்றி ஆலோசனை செய்யத் தொடங்கினான். நளனை இலங்கைக்குச் செல்லத் திட்டம் தீட்ட உத்தரவிட்டான். கிஷ்கிந்தை முழுவதும் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.
அதற்குள், குகையில் நான்கு மாதகாலமாகக் காத்திருந்த இராமர் பொறுமையிழந்தார். மழைக்காலம் முடிந்தும் சுக்ரீவன் தங்களை அணுகாதது குறித்து கோபம் ஏற்பட்டது. இலட்சுமணனை அழைத்த இராமர், "தம்பி! மழைக்காலமும் முடிந்து விட்டது.
ஆனால் இந்த சுக்வன் போருக்கான ஏற்பாடு எதுவும் செய்திருப்பதாகத் தோன்றவில்லை. நீ உடனே சென்று அவனிடம் போரைப்பற்றி ஞாபகப்படுத்து! நம்மிடம் வேண்டிய உதவியைப் பெற்றுக் கொண்டு இப்போது நம்மையே அலட்சியம் செய்கிறானா?" என்று கோபத்துடன் சொற்களை இராமர் அள்ளி வீசினார்.
சாந்த சொரூபியான இராமரே கோபமடைந்த போது, இலட்சுமணனைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கோபத்தில் கொதித்த இலட்சுமணன், "உங்களால்தான் அவனுக்கு ராஜ்யம் கிடைத்தது என்பதையே மறந்து விட்டான் அந்த நன்றி கெட்ட சுக்ரீவன்! வாலி அபகரித்துச் சென்ற அவனுடைய மனைவி மீண்டும் அவனுக்குக் கிடைத்ததே தங்களால்தான்! ஆனால் மனைவியைப் பிரிந்து வாடும் தங்களை மறந்துவிட்டு, தன் மனைவியுடன் கூட உல்லாசமாகப் பொழுதுபோக்கும் அந்த கேடு கெட்டவனை கொன்றுவிட்டு மறுவேலை பார்க்கிறேன்.
ஒரே அம்பினால் அவன் தலையைத் துண்டிக்கிறேன். அவன் உதவி நமக்குத் தேவையில்லை!" என்று சீறிவிழ, இராமர் அவனை சமாதானப் படுத்த அரும்பாடு பட்டார். "கோபப்படாதே தம்பி! நண்பனைக் கொல்ல நினைப்பது பாவம்! ஏதோ அசட்டுத்தனத்தால் தன் வாக்குறுதியை சற்றே மறந்து விட்டான். அதனால் உன் கோபத்தை அவனிடம் காட்டாமல், அவன் வாக்குறுதியை மட்டும் அவனுக்கு ஞாபகப்படுத்து! அது போதும்!" என்றார் இராமர்.
உடனே இலட்சுமணன் தன் வில், அம்புகளுடன் கிஷ்கிந்தையை நோக்கிப் புறப்பட்டான். இராமர் அவனை சமாதானப்படுத்தியும், அவன் மனம் எரிமலையாகக் குமுறியது. சுக்ரீவனை ஒரு கை பார்த்து விடுவது என்ற உத்தேசத்துடன் கோபமே உருவாகப் புயல்போல் சென்றான். கோபாவேசமாக வரும் இலட்சுமணனைக் கண்ட வானரங்கள் பயந்து வழி விட்டன.
அதற்குள் மிகுந்த கோபத்துடன் வரும் இலட்சுமணனைக் கண்டு, அனுமார் சமயோசிதமாக ஒரு காரியம் செய்தார். முதன் முதலில் இலட்சுமணன் கண்களில் சுக்ரீவன் தென்பட்டால் ஆபத்து என்று கருதி, அங்கதனை வரவேற்க அனுப்பினார். சமீபத்தில் தன் தந்தையை இழந்துஇருந்த அங்கதனைக் கண்டதும், இலட்சுமணனின் மனம் சற்று இளகியது. "அங்கதா! உன் சிற்றப்பனிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்!" என்று தன் கோபத்தை அடக்கிக் கொண்டு கூறினான்.
குடிபோதையில் இருந்த சுக்வனின் செவிகளில் இலட்சுமணன் வருகிறான் என்ற செய்தி கேட்டதும், உடனே பயத்தினால் போதை தெளிந்து விட்டது. ஆயினும், இலட்சுமணனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாமல் அனுமாரின் ஆலோசனைப்படி தாரையை அனுப்பினான். விதவைக் கோலத்தில் தாரையைக் கண்டதும், இலட்சுமணனின் கோபம் தணிந்தது. அந்தப்புரத்தில் மயங்கிக் கிடந்த சுக்வன் அனுமாரை சந்தித்து, "இலட்சுமணன் வில் அம்புகளுடன் வருவதாகக் கேள்விப்பட்டேன். நான் அவன் கண்ணில் படாதது நல்லதாகப் போயிற்று.
எனக்கு ஒன்றும் இலட்சுமணனிடம் பயம் இல்லை. ஆனாலும், நம் நண்பர்களுடன் மோதுவது நன்றாக இருக்காது. தாரையுடன் சற்று நேரம் பேசினால், இலட்சுமணன் கோபம் குறைந்துவிடும். உன்னுடைய யோசனை மிகச் சரியான ஒன்று. ஏதோ சில நாள்கள் உல்லாசமாக இருந்தது தவறாகப் போயிற்று. இனி, போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்!" என்று கூறிக் கொண்டே சென்றான்.
அனுமார் சுக்ரீவனை நோக்கி, "நீங்கள் பயப்பட வேண்டாம்! உங்கள் பேரில் இராமருக்கும், இலட்சுமணருக்கும் சிறிது கோபம் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், உங்களைத் தாக்குமளவிற்கு நிலைமை மோசமாகவில்லை. அப்படியே இலட்சுமணர் உங்களிடம் கோபமாகப் பேசினால், நீங்கள் அதைப் பொருட்படுத்தக் கூடாது. ஏனெனில் தவறு உங்களுடையதே! அவர்களிடம் இருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு, பிரதியுபகாரம் செய்ய வேண்டிய நேரத்தில் உல்லாசமாகப் பொழுதை வீணாக்கியது உங்கள் தவறு! போனது போகட்டும்! இனியாவது எச்சரிக்கையாக இருங்கள்!" என்றார்.
அதற்குள் இலட்சுமணன் முன் நின்று வரவேற்ற தாரை, "இளையவரே! தாங்கள் மிகவும் கோபமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நாங்கள் ஏதாவது தவறு செய்து இருந்தால் அதை தயவு செய்து மன்னித்து விடுங்கள். உங்களுக்காக எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம். சற்றே அமருங்கள்!" என்று கூறினாள்.
அவளை நிமிர்ந்துப் பார்க்கக் கூசிய இலட்சுமணன், "தேவி! உங்கள் மீது எனக்குக் கோபமில்லை. சுக்ரீவன் மீதுதான் கோபமாக இருக்கிறேன். கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்க விடலாமா? அவனைக் கூப்பிடுங்கள்! அவனுடன் தான் பேச வேண்டும்!" என்றான்.
"உங்களுக்காகத்தான் அவர் மும்முரமாக வேலையில் ஆழ்ந்துஉள்ளார். இந்த நான்கு மாதங்களாகத் தீவிரமாகப் போருக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். இதோ, இந்த வினாடிகூட இலங்கைப் போருக்கான திட்டங்களைத்தான் அவர் தனது சேனாதிபதிகளிடம் விவாதித்துக் கொண்டிருக்கிறார். அப்படியெல்லாம் கொடுத்த வாக்கை அவரால் மறந்துவிட முடியுமா? அல்லது அவர் மறந்தால், நான்தான் மறக்கவிடுவேனே!" என்று தாரை சாமர்த்தியமாகப் பேசினாள்.
அப்படியும் இலட்சுமணன் சுக்ரீவனை சந்தித்துப் பேசவேண்டும் என்ற பிடிவாதம் பிடித்ததால், தாரை அவனை அந்தப்புரம் அழைத்துச் சென்றாள். அங்கு ஓர் ஆசனத்தில் அமர்ந்து விழித்துக் கொண்டிருந்த சுக்வனைக் கண்டதும், அதுவரை அடங்கியிருந்த இலட்சுமணனின் கோபம் மீண்டும் தலைக்கேறியது.
"ஏதோ யுத்த ஏற்பாடுகளில் தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்! அதற்கு அந்தப்புரம்தானா கிடைத்தது? உன்னால் முடியாதுஎன்றால் ஏன் வீணாக எங்களுக்கு வாக்களித்தாய்? எங்களுடன் நட்புஉரிமை பாராட்டிவிட்டு, எங்களிடம் வேண்டிய உதவியைப் பெற்றுக் கொண்டு, உடனே நன்றி மறக்க வெட்கமாயில்லையா? நண்பர்களுக்கே இவ்வாறு நம்பிக்கை துரோகம் புரியலாமா? உன்னுடைய மெத்தனமான செய்கையைப் பொறுக்க மாட்டேன். வாலி சென்ற இடத்திற்கு உன்னையும் இதோ அனுப்புகிறேன்!" என்று இலட்சுமணன் கோபத்துடன் அம்பை உருவினான்.
No comments:
Post a Comment