இராவணன் கூட்டிய தர்பாரில் பேசியவர்களெல்லாம் “இப்போதே போய் அந்த இராமனை ஒழிக்கலாம்” என கர்ஜித்தது கண்டு விபீஷணன் அவர்களையெல்லாம் சற்று அமைதியோடு இருக்கச் சொல்லிவிட்டு தன் அபிப்பிராயத்தைக் கூறலானான்.
“சாமம், தானம், பேதம் என்ற மூன்று வழிகளும் பயனற்றுப் போனாலே தண்டம் என்பதைக் கையாள வேண்டுமெனப் பெரியோர்கள் கூறியுள்ளனர். அதுவும் தர்மம், நேர்மை முதலியன இருந்தாலே தண்டம் எனப்படும் சக்தி பயனுள்ளதாக இருக்கும்.
“இராமரும் பலம் பொருந்தியவர். அவரது தூதராக வந்த அனுமார் துணிவுடன் கடலைக் கடந்து வந்து இங்குள்ள பலசாலிகளைத் திணற வைத்துப் போனார். அறம் அவர் பக்கமாக இருப்பதை நன்கு கவனியுங்கள். அவரை அற்பமாக மதிக்கவேண்டாம். அவர் தாமாக நம் அரக்கர் குலத்தை அழிக்க முற் பட்டாரா? கரன் முதலியோர் அவரை முதலில் தாக்கினர். அவர் தற்காப்பாக எதிர்த்து அவர்களைக் கொன்றார். சீதையை அபகரித்து வந்தது சரியல்ல. அதனால் நமக்கு தீமையே ஏற்படும்.பேசாமல் இராமரிடம் அவளைத் திருப்பிக் கொடுத்துவிடுவதே நம் குலத்திற்கும் இலங்கைக்கும் எவ்விதத்திலும் நல்லது.” விபீஷணன் இம்மாதிரி கூறி முடிக்கவும் இராவணன் மிகவும் கோபத்துடன் அன்றைய சபையைக் கலைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் தன் மாளிகைக்குச் சென்றான்.
விபீஷணன் மறுநாள் காலை முதல் வேலையாக இராவணனின் மாளிகைக்குச் சென்றான். அப்போது அங்கு யாரும் இராவணனோடு இருக்கவில்லை.
விபீஷணன் அதுவே தக்க தருணமென தன் அண்ணனிடம் “சீதையை நீ அபகரித்து வந்தது முதல் பல கெட்ட சகுனங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது ஒவ்வொருவனுக்கும் தெரியும். அப்படி இருந்தும் உன் மந்திரிகள் உன்னிடம் அதுபற்றிக் கூறவே இல்லை. எனவே நான் உன்னிடம் கூறி நேர்வழியில் செல்லுமாறு எச்சரிக்கிறேன்” என்றார்.
இராவணனோ மிகவும் கோபம் கொண்டு “இந்த உலகில் எனக்கு நிகர் யாருமே இல்லை. அந்த இராமனுக்கு சீதை வேண்டுமானால் என்னோடு போர் புரிந்துவென்றே மீட்டுச் செல்ல வேண்டும். என்னை எதிர்ப்பது என்பது நடக்காது” எனக் கூறி விபீஷணனை அனுப்பி விட்டான்.
இராவணன் போருக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தன் மந்திரிகளோடு கலந்து ஆலோசிக்க சபாபவனத்திற்கு ரதமேறிச் சென்றான். அரக்கர் பிரமுகர்கள் பலரையும் உடனே சபைக்கு அழைத்து வரும்படியும் ஆட்களை அனுப்பினான்.
விபீஷணன், சுகன், பிரகஸ்தன் முதலானோருக்குத் தனித்தனி ஆசனங்கள் கொடுத்துவிட்டு இராவணன் அவர்களை நோக்கி “இனி நாம் இலங்கையை சர்வ ஜாக்கிரதையுடன் பாதுகாக்க வேண்டும். உங்கள் உதவி இதுவரை எனக்குக் கிட்டி வந்துள்ளது. இனியும் தொடர்ந்து உங்கள் உதவி கிடைத்து வருமென்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. உங்கள் பலத்தால் என்றும் நமக்கு வெற்றியே கிடைத்தது. இனியும் அப்படியே கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
“நம் முன் எதிர் நோக்கியுள்ள பிரச்னை குறித்து உங்கள் அனைவருக்கும் கூறுகிறேன்.
கும்பகர்ணனது தூக்க காலம் கூட முடிந்துவிட்டது. அவனும் இங்கே இருக்கிறான். விஷயம் இதுதான். ஜனக மன்னனின் புதல்வியும் இராமனின் மனைவியுமான சீதையை நான் தண்டகாரண்யப் பகுதியிலிருந்து அபகரித்துக்கொண்டு வந்து விட்டேன். அவளை நான் மிகவும் நயமாக வேண்டியும் என்னை ஏற்க மறுக்கிறாள். அவளைப் போன்ற அழகி மூவுலகிலும் இல்லை. அவளை நான் என் மனைவியாக்கிக் கொள்ளாவிட்டால் என் உயிர் இராது. அவள் தன்னை இராமன் வந்து மீட்டுச் செல்வானென்ற நம்பிக்கையோடு இந்த ஒரு வருட காலம் கெடு வைத்துப் பார்த்தாள். நானும் அதற்கு இசைந்தேன்.
“இராமன் தன் படையோடு கடலைத் தாண்டி இலங்கையை எப்படி அடைய முடியும்? ஒரு வேளை அவன் வந்தால் என்ன செய்வது என்பது பற்றியே நாம் இப்போது யோசிக்க வேண்டும். அனுமான் கடலைக் கடந்து இலங்கை யை ஒரு கலக்கு கலக்கிவிட்டுச் சென்றுவிட்டான். எனவே இனி நாம் எச்சரிக்கையுடன் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீதையை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. எனவே இராமனைக் கொல்லும் வழிதான் எஞ்சியுள்ளது” என்றான்.
அது கேட்டு கும்பகர்ணன் “நீங்கள் சீதையைக் கவர்ந்து வருமுன் எங்களைக் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் முன்பின் சற்றும் யோசியாது அவசரப்பட்டு சீதையைக் கவர்ந்து வந்து விட்டீர்கள். இதுவரை இராமன் படை எடுத்து வராதது நம் அதிருஷ்டமே. சரி. இனி கவலைப் பட வேண்டாம். உமது எதிரிகளை எதிர்த்துப் போராட நான் இருக்கிறேன்” என்றான்.
கும்பகர்ணன் கூறியது இராவணனுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதை கவனித்த மகாபார்சுவன் என்ற அரக்கன் “ஒரு செயலில் இறங்கி விட்டால் அதை செய்து முடிக்காதவன் முட்டாளாவான். இராவணன் இந்த உலகிற்கே அதிபதி. யார் என்ன செய்யமுடியும்? சீதையை அபகரித்துக் கொண்டு வந்தாகி விட்டது. இனி அவள் விருப்பத்திற்கு இசைந்தால் சரி. இல்லாவிட்டால் நீங்கள் அவளை பலவந்தமாகவாவாது அடையவே வேண்டும். இதற்காக என்ன ஆனாலும் சரி. கவலைப்பட வேண்டாம். கும்பகர்ணன், இந்திரஜித்தன் முதலானோர் இருக்க தேவேந்திரனே வந்து உங்களை எதிர்த்தாலும் அவர்கள் தோல்வி அடைய வேண்டியதே” என்றான்.
அப்போது இராவணன் “பேஷ். ஆனால், எனக்கு ஒரு சாபம் உள்ளது. எனக்கு ஒருமுறை பிரம்மதேவனின் இல்லத்திற்குப் போகும்போது ஒரு பெண்ணை அவளது விருப்பத்திற்கு மாறாக பலாத்காரம் செய்தேன். அதனால் பிரம்மா “இனிமேல் நீ எந்தப் பெண்ணையாவது அவள் இணங்காமல் வன் செயல் புரிந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்” எனச் சாபமிட்டுவிட்டார். அதனால்தான் நான் சீதையைத் தொடக்கூட முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால், என் கோபம் பொல்லாதது. என் சக்தியை அந்த இராமன் அறிந்தானில்லை. அவனுக்குத் தான் கேடு காலம் கிட்டி விட்டது என்பேன்” என்றான்.
அது கேட்டு விபீஷணன் “இதெல்லாம் அழிவுகாலத்தின் அறிகுறி. சீதையைக் கொண்டு வந்தது ஒரு விஷப்பாம்பை எடுத்து வந்தது போலாகும். இராமனின் பக்கம் நீதியுள்ளது. எனவே அது வெல்லும். அந்த வெற்றியை இராவணனோ, இந்திரஜித்தனோ அல்லது கும்ப கர்ணனோ யாருமே தடை செய்ய முடியாது. சீதையை இராமரிடம் ஒப்படைப்பதேமேல்” என்றான்.
அப்போது இந்திரஜித்தன் “இதென்ன பேச்சு? நாம் என்ன தொடை நடுங்கிகளா? இராமனையும், இலட்சுமணனையும் கொல்ல ஓர் அரக்கன் போதுமே. என் பலம் யாவரும் அறிந்ததே. தேவேந்திர னையே வென்ற எனக்கு இந்த அற்ப மானிடர்கள் எந்த மூலைக்கு?” என்றான்.
விபீஷணனோ, “தம்பீ. நீ சின்னப் பயல். அனுபவமில்லாதவன். ஏதோ உளறுகிறாய். இதனால் உன் தந்தைக்கே நீ குழிபறிக்கிறாய். குழந்தைகளை எல்லாம் இங்கு பேச விடுவதே தப்பு” என்றான். அவன் கூறியதைக் கேட்டு இராவணன் “எப்போதும் உறவினனும் பாம்பும் ஒன்றே. நீ எதிரியின் கட்சியில் சேர்ந்து கொண்டு எங்களை அழிக்கபார்க்கிறாய். என் தம்பி என்ற காரணத்தினால் உன்னை விட்டு வைக்கிறேன். நீ இக் குலத்திற்கே கோடாரிக் காம்பு” என்றான்.
அது கேட்டு விபீஷணன் நான்கு அரக்கர்களுடன் ஆகாயத்தில் கிளம்பி “நான் என்னவோ உன் நன்மைக்காகக் கூறினேன். நீ என்னையே விரோதியாக பாவித்து விட்டாய். உன்னைச் சூழ்ந்துள்ளவர்கள் உன்னைப் புகழ்கிறார்கள். நீ அந்தப் புகழ் மாலையில் மெய் மறந்து கிடக்கிறாய். நான் கூறும் உண்மை உனக்கு வேம்பாகக் கசக்கிறது. இந்த இலங்கையும் நீயும் அழிவதை நான் காண விரும்பவில்லை. இங்கிருந்து நீங்கள் அனைவரும் எப்படியோ சௌக்கியமாக இருங்கள், நான் இங்கிருந்து போகிறேன்” எனக் கூறிச் சென்றான்.
விபீஷணன் இராமரும் இலட்சுமணரும் வானரப்படையோடு வந்து தங்கி இருக்கும் இடத்தை நோக்கி ஆகாய வழியே சென்றான். நான்கு அரக்கர்களோடு ஆயுதங்களுடன் ஆகாயமார்க்கமாக வரும் அவனைப் பார்த்த சுக்கிரீவன் “இவர்கள் நம்மைக் கொல்ல வருகிறார்கள் போலிருக்கிறதே” என்றான். உடனே வானரர்கள் அவர்களை எதிர்க்கத் தயாராக நின்றனர்.
அந்த சமயத்தில் விபீஷணன் ஆகாயத்தில் இருந்தபடியே “நான் துஷ்டனான இராவணனின் தம்பி விபீஷணன். சீதையை அவன் சிறைப்படுத்தி வைத்திருக்க நான் அவளை இராமரிடம் ஒப்படைக்கும் படி கூறினேன். ஆனால், என் புத்திமதியை அவன் ஏற்கவில்லை. என்னையே நச்சுப்பாம்பு எனக் கூறி கடுஞ்சொற்களால் வாட்டிவிட்டான். நான் இப்போது இராமரிடம் சரண்புக வந்திருக்கிறேன் இதை நீங்கள் அவரிடம் சென்று தெரிவியுங்கள்” என்றான்.
இதைக் கேட்டதும் சுக்கிரீவன் இலட்சுமணனோடு இராமர் இருக்கும் இடத்தை அடைந்து “இராவணனின் தம்பி விபீஷணன் என்பவன் நான்கு அரக்கர்களோடு உங்களிடம் சரண்புக வந்திருப்பதாகக் கூறுகிறான். நாம் சற்று எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். இந்த அரக்கர்கள் எப்படி வேண்டும் ஆனாலும் உருவெடுத்து ஏமாற்ற வல்லவர்கள். இவர்கள் இராவணனின் ஒற்றர்களாக இருக்கலாம். நம்மை எப்படியோ நம்ப வைத்து நம் இரகசியங்களைத் தெரிந்து கொள்ளவே இவர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். இராவணனோடு உடன் பிறந்தவனை நாம் நம்புவதா? இவர்களை இப்போதே பிடித்துக் கொன்று விட வேண்டும்” எனக் கூறினார்கள்.
அதையெல்லாம் கேட்ட இராமர் அனுமார் ஜாம்பவான் போன்ற மற்ற வானரர்களைப் பார்த்து “சுக்கிரீவன் சொன்னதையெல்லாம் கேட்டீர்கள்அல்லவா? இப்போது நீங்கள் உங்களுடைய அபிப்பிராயங்களைக் கூறுங்கள்”’ என்றார்.
அங்கதனோ விபீஷணன் எப்படிப்பட்டவனெனத் தெரிந்துக் கொண்டே அவன் கூறுவதை நம்ப முற்பட வேண்டுமெனக் கூறினான். சரபன் என்பவன் “விபீஷணன் மிகவும் புத்திசாலியான ஒற்றன் என்பதில் சிறிதும் ஐயமில்லை” என்றான். அதை தொடர்ந்து ஜாம்பவான் “விபீஷணன் இங்கு இப்போது வருவதே சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறது” என்றான்.
அனைவர் கூறிய கருத்தை மறுத்தபடி அனுமார், “விபீஷணனைப் பரீட்சிப்பது எப்படி? மேலும் இவ்வளவு அருகேயுள்ள படைக்கு ஒற்றனை அனுப்ப மாட்டார்கள். விபீஷணன் இங்கு வர வேறு காரணமே இருக்க வேண்டும். விபீஷணன் இராவணனது கெட்ட செயலை அறிவான். வாலியை இராமர் கொன்று சுக்கிரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்ததையும் அறிவான். அது போலத் தனக்கும் இலங்கை கிடைக்கலாம் என நினைத்தே அவன் இங்கே வந்திருக்க வேண்டும் அவனை நான் ஒற்றனாகக் கருதவில்லை. நாடு தனக்கு வேண்டும் என்ற ஆசையால் அவன் நம்மிடம் சரண் புக வந்திருக்கிறான். எனவே அவனைக் கண்டு பேசிப் பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன். மற்றவை உங்கள் இஷ்டம்” எனக் கூறினார்.
No comments:
Post a Comment