சுமந்திரன் தேரை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். அயோத்தி மாநகரின் வீதிகளில் மக்கள் கூட்டம் இரு புறங்களிலும் இருந்தது. சிலர் தேரை அணுகினர். சிலர் அதோடு கூடவே நடந்து வந்து கொண்டிருந்தனர். வேறு சிலர் தேரின் முன்பாக நின்று கொண்டு தேரை நிறுத்தி இராமர், லட்சுமணன், சீதை ஆகியோரை தரிசித்தனர். இவ்வாறு மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதே சமயம் திடீரென தசரதர் தன்னிருப்பிடத்திலிருந்து எழுந்து "என் கண்மணி இராமனை இப்போதே நான் பார்க்க வேண்டும்" என்று எழுந்து வந்தான். அவனோடு மற்ற இராணிமார்களும் வந்தனர். "சுமந்திரா, தேரை நிறுத்து" என பலமாகக் கத்திக் கொண்டே ஓடி வந்த தசரதன் கால் இடறி கீழே விழுந்து விட்டான்.
தேரிலிருந்த இராமர் திரும்பிப் பார்த்தார். தவக்கோலத்திலிருக்கும் அவரது திருவுருவம் யாவரது உள்ளத்திலும் பக்தியையே மூட்டியது. அவரிடம் ஒருவித வணக்கத்திற்குரிய எண்ணத்தையே தோற்றுவித்தது. இது காறும் அரசகுமாரன் என்று அழைத்து வந்தோரெல்லாம் அவரைக் கண்டதுமே பக்தியுடன் வணங்கலாயினர்.
உடனே இராமர் சுமந்திரனிடம் "தந்தையாரின் மனத்தை மேலும் நான் வருந்த விடக் கூடாது. என்னைப் பார்க்கப் பார்க்க அவருடைய துக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகும். தேரை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள்" எனக் கூறினார்.
கீழே விழுந்த தசரதனை அவனைச் சுற்றிலும் நின்ற மந்திரிகள் தேற்றினர். தசரதனோ அங்கு நின்றவாறே கண்பார்வையினின்று மறையும் அந்த தேரைப் பார்த்தவாறே இருந்தான்.
இராமன் காட்டிற்குக் கிளம்பி விட்டானென்றதுமே அரண்மனை அந்தப்புரத்தில் ஒரே அழுகைக் குரலே கேட்கலாயிற்று. அது மாத்திரமல்ல. அயோத்தி மாநகரே பாழடைந்து போனது போலக் காட்சியளித்தது. மக்கள் தத்தம் வேலைகளில் ஈடுபடவில்லை.
தரசரதனை கௌசல்யையும் கைகேயியுமாக இருபுறங்களிலும் பிடித்துக் கொள்ள முற்பட்டனர். அப்போது அவன் கைகேயியைப் பார்த்து "தயவு செய்து நீ என்னை உன் கையால்கூடத் தொடாதே! இனி உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு வேண்டும்? இனி உன்னை நான் நினைக்கவேமாட்டேன்" எனக் கூறினான். பின்னர் தானே எழுந்து கௌசல்யையின் இருப்பிடத்திற்குச் சென்றான்.
அன்றிரவு முழுவதும் தசரதனும் கௌசல்யையும் இராமரைப் பற்றி நினைத்து நினைத்துக் கண்ணீர் வடிக்கலாயினர். சுமித்திரை அவர்களருகே இருந்து அவர்களைத் தேற்றி வரலானாள்.
சுமந்திரன் ஓட்டிச் சென்ற தேர் சூரியன் மேலைவாயிலை அடையும் வேளையில் தமசா நதிக் கரையை அடைந்தது. தேரின் பின்னாலேயே அயோத்தி மக்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர். அவர்களெல்லாரும் இராமர் காட்டிற்குச் செல்லக்கூடாதெனக் கூறலாயினர். இராமர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் அவற்றையெல்லாம் சிறிதும் ஏற்கவே இல்லை.
சுமந்திரன் தேரினின்று குதிரைகளை அவிழ்த்து நதியில் குளிப்பாட்டினான். பின்னர் அவைகளை மேயவிட்டுப் பின்னர் ஓரிடத்தில் கட்டினான். இலட்சுமணனும் சுமந்திரனுமாகச் சேர்ந்து இலைகளைக் கொண்டு சீதைக்கும் இராமருக்கும் படுக்கை தயார் செய்தனர். அவர்கள் அதில் படுத்துஉறங்கினர். ஆனால் சுமந்திரனும் இலட்சுமணனும் பேசிக்கொண்டே இரவுப் பொழுதைப் போக்கினர்.
இராமரைப் பின் தொடர்ந்து வந்த மக்களும் தமசா நதிக்கரையிலேயே படுத்துக் கொண்டனர். அவர்கள் யாவரும் நன்கு உறங்கிக் கொண்டுஇருந்தனர். பொழுது புலர்வதற்குச் சற்று முன்னரே இராமர் எழுந்தார். இலட்சுமணனிடம் "இவர்கள் விழித்தெழுமுன் நான் இங்கிருந்து செல்ல வேண்டும். சுமந்திரரே, உடனே புறப்படும்" என்றார். சுமந்திரனும் அவ்விதமே செய்த பின்னர் இராமர் இலட்சுமணனுடனும் சீதையுடனும் தேரில் ஏறிக் கொண்டார். தேர் வடதிசையை நோக்கிச் சென்று விட்டது.
சூரியோதயம் ஆனபிறகுதான் தமசா நதிக்கரையில் படுத்திருந்த அயோத்தி நகர மக்கள் விழித்தெழுந்தனர். ஆனால் தேரைக் காணாது அவர்கள் திகைத்தனர். தேர் எப்படிப் போயிருக்குமெனப் பார்த்தனர். ஒன்றுமே சரியாகத் தெரியாததால் யாவரும் அயோத்திக்குத் திரும்பினர்.
சூரியோதய வேளைக்கு சுமந்திரன் ஓட்டிச் சென்ற தேர் வெகு தூரம் சென்று விட்டது. அது தென் கோசல நாட்டைக் கடந்து கங்கை நதிக்கரையை வந்தடைந்தது. சுமந்திரன் தன் தேரை சிருங்கபேரிபுரமென்னும் இடத்தில் ஒரு பெரிய மரத்தடியே கொண்டுபோய் நிறுத்தினான். குதிரைகளை அவிழ்த்து அவற்றை இளைப்பாறச் செய்தான்.
அங்கு குகனென்னும் படகுக்காரர்களின் தலைவன் இருந்தான். அவன் இராமர் அங்கு வந்துஇருக்கிறாரென்பதை எப்படியோ தெரிந்து கொண்டுவிட்டான். உடனே தன் மந்திரிமார்களுடனும் மற்றுமுள்ள பெரியோர்களுடனும் இராமர் இருக்கும் இடத்தை அடைந்தான். குகன் இராமரின் நண்பன். எனவே இராமர் எழுந்து சென்று அவனை மிகவும் அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார்.
குகனும் "ஐயா, உங்களுக்கு இதுதான் இனி அயோத்தி. உங்களை விருந்தினராக ஏற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததே நான் செய்த பாக்கியம்" என்றான். பின்னர் அவன் அவர்களுக்கு உயரிய உணவு வகைகளைத் தயார் செய்யும்படிக் கட்டளைஇட்டான்.
அன்றைய இரவுப் பொழுதையும் இராமர் தன் தம்பியுடனும் மனைவியுடனும் அம்மரத்தடியிலேயே கழித்தார். இலட்சுமணன் அவர்களைத் தூங்கும் படிச் சொல்லி அவர்களுக்குக் காவலாக இருக்கலானான்.
அப்போது குகன் "இலட்சுமணா, நீரும் தூங்கலாமே, நான் விழித்துக் காவல் காக்கிறேன்" என்றான். ஆனால் இலட்சுமணனோ அவ்விதம் செய்யாது குகனோடு பேசியவாறே இரவுப் பொழுதைக் கழிக்கலானான். குகன் இலட்சுமணனின் வாயிலாக அயோத்தியில் நடந்ததெல்லாம் தெரிந்து கொண்டான்.
விடியும் சமயம், இராமர் கண் விழித்துக் கொண்டு இலட்சுமணனிடம் "தம்பி, நாம் கங்கையைக் கடந்து இப்போதே செல்ல வேண்டும்" எனவே அவனும் குகனிடமும், சுமந்திரனிடமும் இராமரின் விருப்பத்தைத் தெரிவித்தான். உடனே குகனும் தன் ஆட்களை அனுப்பி நல்ல படகாக ஒன்றைக் கொண்டுவரும்படிக் கட்டளைஇட்டான்.
சுமந்திரனும் குகனும் இராமர் முன் சென்றனர். அப்போது இராமர் "சுமந்திரரே, இனி தேரை ஓட்டிக் கொண்டு நீர் அயோத்திக்குச் செல்லலாம். என் தந்தையாரிடமும் தாய்மார்களிடமும் பணிவான வணக்கத்தைக் கூறி நாங்கள் மிகவும் நலமாக இருப்பதாகத் தெரிவியும். பதிநான்கு ஆண்டுகள் கழிந்ததும் நாங்கள் சுகமாக திரும்பி வருகிறோம். பரதனின் பட்டாபிஷேகத்தை உடனே நடத்த ஏற்பாடுகளை நீரும் முன் நின்று செய்யவும்" என்றார்.
இராமரின் வேண்டுகோளின் படி குகன் ஆலமரத்துப் பாலைக் கொண்டு வந்தான்.
இராமரும் இலட்சுமணரும் தம் முடிகளில் தடவி சடைகளாக்கிக் கொண்டனர். சீதையை படகிலேற்றிவிட்டு இலட்சுமணனும் ஏறிக் கொண்டான். இராமரும் குகனிடமும் விடைபெற்றுக் கொண்டு படகில் ஏறிக் கொண்டார். படகு மெதுவாக ஆற்றில் செல்லலாயிற்று.
அப்போது சீதை கங்கா தேவியை நமஸ்கரித்து "கங்கா தேவியே, பதிநான்கு ஆண்டுகள் முடிவடைந்து திரும்பி வந்ததும் உனது கரைகளிலுள்ள எல்லாக் கோயில்களிலும் பூஜை செய்து வைக்கிறேன். நாங்கள் நலமாகத் திரும்பிவர அருள் புரிவாயாக" என்று வேண்டினாள்.
படகு ஆடி அசைந்தவாறே கங்கை நதியின் தென் கரையை அடைந்ததும் மூவரும் கரையில் இறங்கினர். அது வத்ச நாடாகும் அங்கிருந்து அவர்கள் நடந்தே செல்லலாயினர். முன்னே இலட்சுமணன் வழி காட்ட அவனுக்கு பின் சீதையும் இருவருக்கும் பின் இராமருமாக நடந்து செல்லலாயினர்.
கங்கையின் எதிர் கரையிலேயே கற்சிலை போல நின்று சுமந்திரன் பார்த்துக் கொண்டே இருந்தான். அவர்களது உருவங்கள் சிறிது சிறிதாகிக் கொண்டே போய் முடிவில் ஒரு புள்ளியாகி அதுவும் மறைந்து விட்டது. அதுவரை கரையில் நின்று கொண்டுஇருந்த சுமந்திரன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்ததும் மிகவும் துக்கத்துடன் கண்ணீர் வடிக்கலானான்.
இராமரும் இலட்சுமணரும் கானகத்தில் கிடைத்தவற்றை புசித்துவிட்டு அன்றிரவுப் பொழுதை ஒரு மரத்தடியே கழித்தார். இதுதான் அவர்களது வனவாசத்தில் முதல் இரவாகும். இராமரது மனத்தில் எண்ண அலைகள் எழுந்தன. இனி தூங்காது கண் விழித்து சீதையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் தந்தையாரின் நிலை என்னவோ? கைகேயி... பரதனுக்கு சிம்மாசனம் வாங்கிக் கொடுத்து விட்டதாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருப்பாள்.
ஆனால் உண்மையில் அவள் தசரதனின் ஆவியை சிறிது சிறிதாகப் போகச் செய்து கொண்டல்லவா இருக்கிறாள்! ஆனால் தந்தைக்குத்தான் எவ்வளவு துயரம்? எந்தத் தந்தையாவது மகிழ்ச்சியாகத் தன் மகனைக் காட்டிற்கு அனுப்பி வைப்பாரா? அவரது குற்றமா இது?
இல்லை... கைகேயி...ஆம்...
இந்த எண்ணங்கள் எழவே இராமருக்குத் தூக்கமே வரவில்லை. அண்ணனின் நிலையை இலட்சுமணன் அறிந்து கொண்டு விட்டான். அதனால் அவரது மனத்தை அவன் இதமான வார்த்தைகளால் தேற்றலானான். இராமர் உடனே தன் சஞ்சலப் பட்ட மனத்தைக் கடிந்து கொண்டார். வனவாசம் மேற்கொள்ள வேண்டியது என்ற எண்ணம் தீவிரமாகியது. அப்போது இலட்சுமணன் அருகேஇருந்த ஆலமரத்தடியே இலைகளைப் பரப்பி படுக்கை போலச் செய்தான். சீதையும் ராமரும் அங்கேயே படுத்துறங்கினர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. மூவரும் கங்கையும் யமுனையும் ஒன்று சேருமிடமாகிய பிரயாகை நோக்கிப் புறப்பட்டனர். அங்குதான் பரத்வாஜ் முனிவரின் ஆசிரமம் இருந்தது. இவர்கள் ஆசிரமத்தை அடைந்தபோது மாலைப் பொழுதாகிவிட்டது. இராமரும் பரத்வாஜரிடம் நடந்ததையெல்லாம் சுருக்கமாகக் கூறினார். பரத்வாஜரும் "ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். உன் தந்தை செய்தது சரியல்ல. சரி நீயும் இங்கு வந்தாகி விட்டது. இதே பகுதியில் ஒரு பர்ண சாலையை அமைத்துக் கொண்டு பதிநான்கு வருடங்களையும் கழித்து விடு" என்றார்.
அதற்கு இராமர் "முனி சிரேஷ்டரே, நாங்கள் இங்கேயே அருகாமையில் இருப்பதாக அயோத்திவாசிகள் தெரிந்து கொண்டால் எல்லாரும் இங்கேயே வந்து விடுவார்கள். எனவே வெகு தொலைவில் நாங்கள் வசிக்கத்தக்க இடமாகக் கூறுங்கள். அங்கு நாங்கள் பர்ண சாலையை கட்டிக் கொள்கிறோம்" என்றார்.
பரத்வாஜரும் "அப்படியானால் இங்கிருந்து பத்து கோசதூரத்தில் சித்திரகூடமென்னும் மலைப் பகுதி உள்ளது. அங்கு பல முனிவர்களும் தவம் செய்கிறார்கள். நீங்கள் அங்கு சென்றால் மிகவும் ஏதுவாக இருக்கும். ஆகையால் அங்கு சென்று ஆசிரமத்தைக் கட்டிக் கொள்" என்றார்.
No comments:
Post a Comment