Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, 3 February 2014

அயோத்தியா காண்டம் - 6

அன்றைய இரவுப் பொழுதை இராமரும் இலட்சுமணரும் சீதையும் பரத்வாஜ முனிவரது ஆசிரமத்திலேயே கழித்தனர். மறுநாள் அம்முனிவர் அவர்களுக்கு சித்திரகூடம் செல்லும் வழியைக் கூறி அவர்களை வழியனுப்பிவிட்டுத் திரும்பினார்.
 
மூவரும் முனிவர் கூறிய வழியிலேயே சென்று யமுனைக் கரையை அடைந்தனர். இலட்சுமணன் மரக்கட்டைகளை எடுத்து வந்து உறுதியாகக் கட்டி அதனை ஒரு படகுபோலச் செய்தான். அதன் பின்னர் இராமரும் இலட்சுமணரும் சீதையும் அதன் மீது அமர்ந்து அந்நதியைக் கடந்து செல்லலாயினர். சீதை கங்கை நதியிடம் வேண்டிக் கொண்டது போலவே யமுனையிடமும் வனவாசம் முடிந்ததும் பூஜை செய்வதாக பிரார்த்தனை செய்து கொண்டாள்.
 
நதியைக் கடந்து கரையில் இறங்கி மூவரும் சித்திரகூடத்தை நோக்கிச் செல்லாயினர். காட்டில் கிடைத்த காய்கனி கிழங்குகளைப் புசித்து விட்டு ஓரிடத்தில் தங்கி அன்றைய இரவுப் பொழுதை கழித்தனர்.
 
மறுநாள் காலை மூவரும் மீண்டும் தமது பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்தினர். கடைசியில் சித்திரகூடபர்வதப் பகுதியையும் அவர்கள் அடைந்து விட்டனர். இராமர் பர்ணசாலையை அமைக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். இலட்சுமணன் மரங்களை வெட்டி அழகியதோர் பர்ணசாலையை அமைத்தான்.

குகனும் சுமந்திரனும் அந்த மூவரையும் வழியனுப்பி விட்டுத் தத்தம் இருப்பிடங்களை நோக்கி சென்றனர். சுமந்திரன் மனத்தில் இராமர் அயோத்திக்குத் திரும்பி வரமாட்டாராவென்ற சபலம் தோன்றியது. அதற்காக தான் ஓட்டி வந்த தேரை வேண்டுமென்றே மெதுவாகச் செலுத்தி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அயோத்திக்கு வந்து சேர்ந்தான்.
 
அவன் நேராக கௌசல்யையின் மாளிகைக்குச் சென்றான். தசரதன் அங்கு கவலையே உருவெடுத்தது போல் ஆசனத்தில் அமர்ந்திருந்தான். சுமந்திரனைக் கண்டதும் அதி ஆவலோடு என்ன சொல்லப் போகிறானோவென்று எதிர்பார்த்தான். சுமந்திரனும் இராமர் கூறியவற்றை எல்லாம் ஒன்று விடாமல் மன்னனிடம் கூறினான். இராமர் வனவாசம் செய்வது முக்காலும் உறுதி என்று அறிந்ததும் தசரதன் மூர்ச்சையாகி விழுந்து விட்டான்.
 
கீழே விழுந்த தசரதனின் மூர்ச்சையை போக்க கௌசல்யை முயன்றாள். அவனும் தன் நினைவை அடைந்து "இராமன் இங்கே வரவேண்டும் அல்லது நான் இராமன் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடந்தால் தான் என் உயிர் உடலில் நிற்கும்" என்றான்.
 
கௌசல்யை தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு தசரதனுக்கும் ஆறுதல் கூறலானாள். ஆனால் தசரதன் கௌசல்யையிடம் "இதைப் பற்றிப் பேசப் பேச எனது துக்கம் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. குறைவதாக இல்லை. எனவே இப்படியே துக்கம் என்னை வாட்டி வதை செய்துவிடும்" என்றான்.
 
இராமர் வனவாசத்திற்காக அயோத்தியை விட்டுப் போய் ஆறு நாள்களாகி விட்டன. ஆறாவது நாளிரவு தசரதன் மனத்தில் இனி தனக்கு மரணம் வெகு சமீபத்திலேயே இருக்கிறதெனத் தெரிந்து கொண்டு விட்டான். அதுவும் சில நாழிகைகளே என அறிந்ததும் அவன் மனக்கண் முன் பழைய சம்பவம் சித்தரிக்கப் பட்டதுபோலத் தோன்றியது. அப்போது தனக்குக் கிடைத்த சாபத்தைப் பற்றி அவன் கௌசல்யைக்கு விவரமாகக் கூறினான். தசரதன் அப்போது இளமையின் தளதளப்பிலே இருந்தான்.

ஒலியைக் கேட்டே அவ்விதம் ஒலிக்கும் பொருளைத் தன் அம்பினால் அடித்து வீழ்த்தும் திறமை அவனுக்கு இருந்தது. ஒருமுறை அவன் சரயு நதிக்கரையில் வேட்டையாடச் சென்றான். அவன் மறைவான இடத்தில் இருந்து கொண்டு நதியில் இரவு வேளையில் நீர் குடிக்க வரும் மிருகத்தைக் கொல்லலாமெனக் காத்துக் கொண்டிருந்தான்.
 
இருள் அடர்ந்து கிடந்தது. திடீரென நதிக் கரையிலிருந்து ஏதோ ஒரு மிருகம் `களக் களக்' கென்று தண்ணீர் குடிப்பது போன்ற சத்தம் அவன் காதில் விழுந்தது. அது கேட்டு ஏதோ ஒரு காட்டு யானை தான் அப்படித் தண்ணீர் குடிக்கிறதென நினைத்து அம்பை ஒலி வந்த திசையை நோக்கி விட்டான்.
 
அம்பு `விர்'ரெனப் பாய்ந்து சென்றது. மறுவினாடியே "ஐயோ ஒரு பாவமுமறியாத தவம் செய்யும் என்னை அம்பால் யார் இப்படி அடித்தது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? ஆகா! இதனால் இப்போது என் உயிர் போவது மாத்திரமல்ல. இன்னும் இரண்டு உயிர்களும் தவித்துத் தத்ததளித்து பிராணனை விடப் போகின்றனவே. என் தாய் தந்தையரை இனி யார் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்? அவர்களோ வயதானவர்கள். கண் பார்வையற்றவர்கள்" என்று உரக்கக் கத்திய குரல் தசரதனின் காதில் விழுந்தது. தசரதன் உடனே ஓடினான். அப்போதுதான் அவனுக்குத் தான் செய்த தவறு தெரிந்தது. அவன் அடித்து வீழ்த்தியது யானையல்ல. ஒரு முனிவரின் புதல்வன். அவனது உடலில் அம்பு தைத்திருந்தது. அவன் தண்ணீரை முகந்து கொண்டிருந்த பாத்திரம் அருகிலேயே விழுந்து கிடந்தது. அனது உடலோ துடிதுடித்துக் கொண்டிருந்தது.
 
தசரதனைக் கண்டதும் அந்த முனிவரின் புதல்வன் "இந்த மாதிரி ஏன் என்னைக் கொல்லத் துணிந்தாய்? இந்த நிலையில் நான் இருப்பதாக நீயே சற்று தூரத்திலிருக்கும் என் தாய் தந்தையரிடம் போய்க் கூறு. அப்படி செய்யாவிட்டால் என்ன நடந்ததென அவர்களுக்குத் தெரியாமல் போகும். தாகத்தால் தவித்துத் துடித்து உயிர் துறப்பார்கள். அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லவே நான் வந்தேன்.

ஆனால் என்னை நீ உன் அம்பினால் அடித்து வீழ்த்தி விட்டாய். என்னால் இந்த அவஸ்தையை சகிக்க முடியவில்லை. முதலில் என் உடலில் இருந்து இந்த அம்பை எடு" என்று கதறினான். தசரதன் தான் என்ன செய்வான்? அம்பை எடுத்தாலோ அந்த சிறுவனின் உயிர் உடனே போய் விடும். அம்பை எடுக்கா விட்டாலோ துடிதுடித்து அவன் சிறிது நேரத்தில் இறக்கத் தான் வேண்டும். எனவே அம்பை எடுத்து விடுவதே மேலென நினைத்து அவனது உடலிலிருந்து அம்பை எடுத்து விட்டான். மறு நிமிடமே அந்த முனிவரின் புதல்வன் இறந்து வீழ்ந்தான்.
 
தசரதன் அங்கு கிடந்த பாத்திரத்தில் நீரை நிரப்பி எடுத்துக் கொண்டு அச்சிறுவனின் தாய் தந்தையரைத் தேடிச் செல்லலானான். சற்று தூரத்தில் அவ்வயோதிக தம்பதி அமர்ந்திருப்பதைக் கண்டான்.
 
காலடி சத்தம் கேட்டதுமே அவர்கள் "வந்து விட்டாயா? தண்ணீர் கொண்டுவரப் போன உனக்கு ஏன் இவ்வளவு நேரம்? என்றனர். அப்போது தசரதன் "நான் உங்களது புதல்வனல்ல. தசரதன் என்னும் க்ஷத்திரிய குமாரன்" எனக் கூறி அறியாமற் தான் செய்த செயலை சொன்னான்.
 
அதைக் கேட்ட அவ்விருவரும் அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தசரதனின் உதவியோடு அவர்கள் தம் புதல்வன் இறந்து கிடக்கும் இடத்தை அடைந்தனர். அவர்கள் அந்த உடலைத் தொட்டு கேவிக்கேவி அழுதனர்.

அப்போது அந்த முனிவர் "எங்களுக்கு இருந்த இந்த ஒரு மகனையும் நீ கொன்று விட்டாய். இந்த புத்திரசோகம் எங்களை வாட்டி வதைத்து விட்டது. எனவே நீயும் புத்திரசோகத்தினாலேயே மரணமடைவாய்" எனச் சபித்து விட்டார்.
 
அதன் பின்னர் தம் புத்திரனின் பூத உடலை எரித்து அக்கிழ தம்பதி அந்தத் தீக்குள் குதித்துத் தம் உயிரையும் விட்டு விட்டனர்.
 
தசரதன் இந்த சம்பவத்தை கௌசல்யைக்குக் கூறினான். சிறிது சிறிதாக அவனது மெய், வாய், கண், மூக்கு, செவி முதலியன செயலற்றுப் போயின. இராமனை நினைத்தவாறே தசரதன் உயிரை விட்டு விட்டான்.
 
மறுநாள் காலையில் அந்தப்புரத்து பெண்களெல்லாம் தசரதனின் மரணச்செய்தி கேட்டு ஓலமிடலாயினர். தசரதனின் மரணம் மக்களிடையே நொடியில் பரவி விட்டது.
 
வசிஷ்டர் உடனே வந்து சேர்ந்தார். தசரதனுக்கு ஈமச்சடங்குகளை செய்ய அவனது புதல்வர்களில் ஒருவன் கூட இல்லை. இராமரும் இலட்சுமணனும் கானகமேகி விட்டனர். பரதனும் சத்துருக்னனுமோ தமது தாய்மாமனது வீட்டில் இருந்தனர். எனவே தசரதனின் உடலை விசேஷ முறையில் தயாரிக்கப்பட்ட தைலத்தில் போட்டு வைத்து இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
 
வசிஷ்டர் உடனே சில தூதர்களை அழைத்து "நீங்கள் உடனே பரதனை இங்கு அவசரமான வேலை இருக்கிறதெனக்கூறி அழைத்து வாருங்கள்.

இராமன் காட்டிற்குப் போனதுபற்றியோ, தசரதன் இறந்தது குறித்தோ ஒரு வார்த்தைக் கூடச் சொல்ல வேண்டாம்" என்று கூறி கேகய நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
 
அவர்களும் மிகவும் வேகமாகச் செல்லும் குதிரைகளின் மீதமர்ந்து கேகய நாட்டை அடைந்தனர். வசிஷ்டர் அனுப்பிய பொருள்களை கேகய மன்னனிடம் காணிக்கையாகச் சமர்ப்பித்து விட்டு வசிஷ்டர் கூறிய செய்தியைத் தெரிவித்தனர்.
 
பரதன் உடனேயே எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு அயோத்தியில் இருந்து வந்த தூதர்களுடன் கிளம்பினான். பரதனும் சத்துருக்னனும் ஒரு தேரில் அமர்ந்து கொண்டு வேகமாக எல்லாருக்கும் முன்னதாகச் சென்றனர். அவர்கள் அயோத்திக்கு வந்து சேர ஏழு நாள்களாயின.
 
கேகய நாட்டிலிருக்கும்போது தூதர்கள் வந்த நாளன்றே பரதனுக்குப் பல கெட்ட கனவுகள் தோன்றின. அது முதல் அவனது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருந்தது. அவன் அயோத்தி நகரில் நுழைந்தபோது அதன் நிலையைக் கண்டு திடுக்கிட்டன. எங்கும் ஒரே மயான அமைதி நிறைந்திருந்தது. மக்கள் முகத்தில் ஈயாடவில்லை. எல்லாரும் விரக்தியடைந்தவர்கள் போலவும் நகரமே பாழடைந்தது போலவும் அவனுக்குத் தென்பட்டது. பரதன் நேராகத் தன் தந்தையின் மாளிகைக்குச் சென்றான். அங்கு அவரில்லாது போகவே தன் தாயின் மாளிகைக்குச் சென்றான். பரதனைக் கண்டதும் கைகேயி "ஆகா வந்து விட்டாயா? நீ சௌக்கியமாகவே வந்தாயா? உன் மாமா, தாத்தா முதலியவர்கள் நலமா?" என்று பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
 
பரதன் அவற்றிற்கெல்லாம் பதில்அளித்தவாறே "அம்மா, என் தந்தையார் எங்கே? கௌசல்யை அன்னையின் மாளிகையில் இருக்கிறாரா?" எனக் கேட்டான். அப்போது அவள் "அவர் அமரத்வம் எய்து விட்டார்" எனக் கூறினாள் அதுகேட்டு பரதன் இடிந்து போய்விட்டான்.                        

(தொடரும்)

No comments:

Post a Comment