அந்தக் காக்கை இந்திரனுடைய பிள்ளை! மிக சக்தி வாய்ந்தவன்! அப்படியிருந்தும் தன்னால் பிரம்மாஸ்திரத்தைத் தாக்குப் பிடிக்க முடியாது என்று பயந்து ஓடினான். அவன் ஓடுமிடமெல்லாம் அஸ்திரம் அவனைத் துரத்தியது. இந்திரனும், மற்ற எந்த தேவர்களும், ஒருவராலும் அவனைக் காப்பாற்ற இயலவில்லை. கடைசியில் அவர் இராமரிடம் மன்னிப்புக் கேட்க, அவரும் மன்னித்து விட்டார். ஆனால் ஒருமுறை ஏவிவிட்டால், பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெற இயலாது. அதனால் பிரம்மாஸ்திரம் அவன் இடது கண்ணில் பாய்ந்துக் குத்தியது. அவனும் ஒரு கண் பார்வையை இழந்தான்.
மேற்கூறிய நிகழ்ச்சியைக் கூறிய சீதா, "இத்தனைப் பராக்கிரம் வாய்ந்த புருஷன் எனக்கிருந்தும், என்னை இராவணன் அபகரித்தானெனில் அது நான் செய்த பாவம்தான்!" என்று விம்மினாள். அனுமார் சீதைக்கு சமாதானம் கூறிவிட்டு, பிறகு திரும்பிப் போய் இராமரிடம் என்ன சொல்வது என்று கேட்க, "எந்நேரமும் அவர் நினைவாகவே இருக்கிறேன் என்று சொல்" என்று கூறிய சீதை, பிறகு தன் சூடாமணி மோதிரத்தை எடுத்து அதை அனுமாரிடம் கொடுத்து, "அவர் அணிவித்த மோதிரம் இது! இதை அவரிடம் காட்டு!" என்றாள்.
பிறகு சீதையிடம் இராமர் விரைவிலேயே வானரப்படையுடன் வந்து இராவணனைக் கொன்று தேவியை விரைவிலேயே விடுதலை செய்வார் என்று மீண்டும் தையம் அளித்துவிட்டு விடைப்பெற்றார்.
உடனே இராமரிடம் திரும்பிச் செல்வதற்கு முன், தான் இலங்கை வந்ததன் அடையாளமாக ஏதாவது செய்துவிட்டு, இராவணனுக்கு வானரங்களின் பலத்தை உணர்த்தவேண்டும் என்று அனுமாருக்குத் தோன்றியதால், சீதை தங்கியிருந்த அசோகவனத்தை அழிக்க முற்பட்டார். தன் உருவத்தை மிகப் பெரிதாக்கிக் கொண்டு, அசோகவனத்திலிருந்த மரங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கியெறியத் தொடங்கினார். அனுமார் செய்த அமர்க்களத்தைக் கண்டு பயந்துபோன ராட்சஸப் பெண்கள் சீதையைக் சூழ்ந்துகொண்டு, "மானிடப்பெண்னே! அந்த வானரம் யார்? உன்னோடு அது பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். நீ என்ன பேசினாய்?" என்று பல கேள்விகள் கேட்டனர்.
"அது யாரென்று எனக்கு தெரியாது. என்னுடன் பேசியது உண்மைதான்! ஆனால் என்ன பேசிற்று என்று புரியவில்லை. ஒருவேளை உங்களைப்போல் ஒரு அரக்கன் வானர உருவத்தில் வந்திருக்கலாம்" என்றாள் சீதை. சீதை சொன்னதை அவர்கள் நம்பவில்லை. அந்த அரக்கிகள் இராவணனிடம் ஓடிச் சென்றனர்.
"பிரபு! பயங்கரமான வானரம் ஒன்று நமது அசோகவனத்தில் புகுந்து அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. அது சீதையிடம் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்தோம். சீதையிடம் அதைப் பற்றிக் கேட்டால் தனக்குத் தெரியாது என்று சொல்கிறாள். நீங்கள் உடனே நம் ஆட்களை அனுப்பி வானரத்தைப் பிடியுங்கள்" என்று பரபரப்புடன் கூறினர்.
அதைக்கேட்ட இராவணன் கோபமுற்று, உடனே எண்பதாயிரம் ராட்சஸர்களை அனுப்பி அனுமாரை உயிரோடு பிடித்து வரச் சொன்னான். உடனே, ராட்சஸப்பட்டாளம் அசோகவனத்திற்குச் சென்று அனுமாரை சூழ்ந்து கொண்டது. அவர்களைக் கண்ட அனுமார் தன் வாலை ஓங்கித் தரையில் அடித்துவிட்டு, உரத்த குரலில், "ராம, இலட்சுமணர்கள் வாழ்க! நான் இராமருடைய தாசன்! என் பெயர் அனுமார்! என் எஜமானருக்காக உயிரையும் கொடுப்பேன்.
உங்களையெல்லாம் கொன்று குவித்து, உங்கள் மன்னனான இராவணனை வீழ்த்தி, இந்த இலங்கையை சர்வ நாசம் செய்துவிட்டு எங்கள் தேவியை மீட்டுச் செல்லப் போகிறோம்" என்று கர்ஜித்தார். மகாமேருவைப் போல் உயர்ந்து நின்று தங்களை நோக்கி சிம்மக் குரலில் சவால்விட்ட அனுமாரைக் கண்டதும் அவர்களுக்கு பயம் ஏற்பட்டது. ஆயினும் இராவணனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை அனுமார் மீது வீசிக் காயப்படுத்த முயல, அவர் ஒரு பெரிய தூணை பெயர்த்தெடுத்து ராட்சஸர்களிடையே புகுந்து சூறாவளி வேகத்தில் தாக்கினார்.
தங்களால் அனுமாரைத் தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட சில ராட்சஸர்கள் ஓடிச்சென்று, பெரும்பாலான ராட்சஸர்கள் அனுமாரால் கொல்லப்பட்டதைச் சொன்னதும் கோபமுற்ற இராவணன், அஜயன் மற்றும் ஜம்புமாலியை அனுப்பினான். அஜயன் ஒரு பெரிய ராட்சஸப் படையுடன் அங்கு வந்து அனுமாரைப் பிடிக்க முயல, அவர் வசந்த மண்டபத்திலிருந்த மற்றொரு தூணை எடுத்து தாக்க, நூற்றுக்கணக்கான இராட்சஸர்கள் மடிந்தனர்.
பிறகு அவர் கம்பீரமான குரலில், "அட ராட்சஸப் பதர்களா! என் ஒருவனையே உங்களால் சமாளிக்க முடியவில்லையே! என்னைப்போல் ஆயிரக்கணக்கான வானரங்கள் உங்கள் நாட்டை விரைவிலேயே முற்றுகையிட வருகின்றன. அவற்றுக்கு முன்னால் உங்களால் என்ன செய்ய முடியும்? இராமரிடம் பகைமை பாராட்டும் உங்கள் அறிவீனத்தை என்னவென்று சொல்வது?" என்று கர்ஜித்தார்.
அப்போது சிவப்பு மலர்கள் அணிந்த கழுதைகள் பூட்டிய இரதத்தில் இராவணனால் அனுப்பப்பட்ட ஜம்புமாலி அங்கு வந்தான். அம்பு எய்வதில் வல்லவனான ஜம்புமாலி, முதலில் சரசரவென அம்புகளை அனுமார் மீது எய்தான்.
உடனே அனுமார் பெரிய மரங்களைப் பிடுங்கி அவன் மீது வீச, அவற்றை ஜம்புமாலி தன் அம்புகளால் தடுத்தான். பிறகு அனுமார் இரும்புத்தூணைப் பிடுங்கி, அவனை மூர்க்கமாகத் தாக்கிக் கொன்றார்.
ஜம்புமாலியும் கொல்லப்பட்டது இராவணனுக்கு வியப்பையளித்தது. சகல அஸ்திரப் பிரயோகங்களிலும் தேர்ந்த தன் மந்தி குமாரர்களை அனுப்பி அனுமாரை சிறைப்பிடிக்கக் கூறினான். அவர்கள் தங்கள் படைகளைக் கூட்டிக் கொண்டு அனுமாரைப் பிடிக்க வந்தனர். இம்முறை வானில் அங்குமிங்கும் பறந்து வந்த அனுமார், மந்தி குமாரர்களையும் அவர்களுடைய படை வீரர்களையும் கைகளினால் அடித்தும், கால்களினால் உதைத்துமே கொன்று தீர்த்தார்.
அனுமான் வலிமையைப் பற்றிக் கேட்டதும், இராவணனுக்கு சற்று பயம் ஏற்பட்டது. ஆனால் தன் பயத்தினை வெளிக்காட்ட விரும்பாத இராவணன் மற்ற வலிமைமிக்க ராட்சஸர்களான விரூபாட்சன், காபாட்சன், தர்தரன், புகஸன், மாசகர்ணன் ஆகிய உபதளபதிகளை அனுப்பினான். அவர்கள் செல்லுமுன், "நீங்கள் வானரம் தானே என்று அலாட்சியமாக இருந்துவிடாதீர்கள். பலசாலிகளான வாலி, சுக்ரீவன், நீலன் ஆகிய வானரங்களை இதற்கு முன் நான் பார்த்திருக்கிறேன். இந்த வானரம் அவர்களை விட பலசாலி என்று தோன்றுகிறது. இது வானரம்தானா என்ற சந்தேகம் கூடத் தோன்றுகிறது. வானர உருவத்தில் உள்ள பூதமாகக் கூட இருக்கலாம். இந்த வானரத்தைப் பிடித்தேயாக வேண்டும். மிகவும் பலசாலியாகத் தோன்றும் இதை சாமர்த்தியமாகப் பிடியுங்கள்" என்று அறிவுரை கூறியனுப்பினான்.
உடனே அந்த ஐந்து ராட்சஸர்களும் அசோகவனத்திற்கு வந்து அனுமாரை அணுகினர். அனுமாரை நாற்திசையிலும் சூழ்ந்து கொண்ட பிறகு அவர்கள் அவர்மீது அம்புகள் எய்யத் தொடங்கினர். துர்தரன் அனுமார் தலையில் ஐந்து அம்புகளை செலுத்தினார். உடனே தன் உடலை மிகப் பெரிதாக்கிக் கொண்ட அனுமார், வானத்தில் எம்பி நேராக துர்தரன் தலை மீது குதித்தார்.
அதில் துர்தரன் உயிர் நீத்தான். உடனே விரூபாட்சன் கோபத்தோடு அனுமார் மீது பாய்ந்து அவரைத் தன் கதையால் தாக்கினான். அனுமார் ஒரு மரத்தைப் பிடுங்கி ஒரேயடியில் அவனைத் தீர்த்துக் கட்டினார்.
பிறகு மற்றவரையும் அனுமான் மரத்தினால் தாக்க, பதிலுக்கு அவர்கள் தங்கள் வாட்களை உருவி ஏக காலத்தில் அனுமரைத்தாக்க, அந்த கடுமையான தாக்குதலில் அனுமாருக்கு காயங்கள் உண்டாயின. அவர்கள் மற்றவர்களை விட வலிமை வாய்ந்தவர்கள் என்றும், சாதாரண மரங்களினால் அடித்து அவர்களை நசுக்க முடியாது என்றும் உணர்ந்த அனுமார், அந்த வனத்தின் மூலையில் இருந்த ஒரு குன்றை அடியோடு பெயர்த்து எடுத்து அவர்கள் மீது வீச, அவர்கள் மொத்தமாக இறந்தனர். அதன்பிறகு இராவணனால் அனுப்பப்பட்ட பிரதான், பாஸ்கரன் என்ற ராட்சஸர்கள் அனுமார் மீதுபாய, அவர்களையும் மலையால் தாக்கினார்.
இவ்வாறு இராவணன் அனுப்பிவைத்த வலிமை வாய்ந்த உபதளபதிகளை அனுமார் இருந்த இடம் தெயாமல் அழித்து விட்டார். விஷயம் அறிந்த இராவணனுக்குத் திகைப்பிலிருந்து மீளவே சற்று நேரம் பிடித்தது. ஒரு வானரத்திற்காகத் தன் மிகச்சிறந்த தளபதிகளை அனுப்பலாமா, வேண்டாமா என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.
இராவணனின் பார்வை தன் மகன் அட்சன் மீது சென்றது. தன் தந்தை வாயைத் திறந்து தனக்குக் கட்டளையிடுமுன் அட்சன் எழுந்து நின்றான். தங்கத்தினாலான தன் வில்லை எடுத்துக் கொண்டவன், தன்னுடைய தங்க ரதத்தை வரவழைத்தான். அந்த ரதத்தில் போருக்கு வேண்டிய எல்லா ஆயுதங்களும் வைக்கப்பட்டிருந்தன. அட்சனுடன் ஒரு பெரிய படை அனுமாரைப் பிடிக்க சென்றது.
ஆனால் அனுமாரைப் பார்த்தவுடனேயே, அவர் பெரிய பராக்கிரமசாலி என்பதை அவன் புரிந்து கொண்டான். இருப்பினும் அட்சன் அவரோடு முழுமூச்சுடன் கடுமையாகப் போட்டான். இதுவரை தன்னோடு மோதிய அரக்கர்களிலேயே அட்சன் அதிபராக்கிரமசாலியாகத் திகழ்ந்ததைக் கண்ட அனுமார் அவனை மனத்திற்குள் மெச்சினார். அவன் தன்னை நோக்கிச் செலுத்திய பாணங்களிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்ட அதேசயம், இவனைப் போன்ற நல்ல வீரனைக் கொல்ல மனமில்லால் தவித்தார். ஆனால் இவனைக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று அவனோடு உக்கிரமாகப் போரிடத் தயாரானார்.
அட்சன் தன் ரதத்துடன் ஆகாயத்தில் பறந்து கொண்டே, அங்கிருந்தே அம்புகளை அனுமார் மீது பொழிந்தான். உடனே அனுமார் அந்தக் குதிரைகளை கைகளினாலேயேப் பற்றி கீழேயிழுத்துத் கொல்ல, அட்சனின் ரதம் தரையில் விழுந்தது. அடுத்ததாக அனுமார் அவனுடைய ரதத்தைத் தன் கைகளினால் உடைத்தார். உடனே, அட்சன் தன் ரதத்தை விட்டுவிட்டு ஆயுதங்களுடன் வானில் பறந்தான். அனுமார் எம்பிக் குதித்து வானில் பறந்த அவனுடைய கால்களைப் பிடித்துக் கொண்டு கீழேயிழுத்தார். அட்சன் தரையில் விழுந்தான். அவனைத் தூக்கிய அனுமார் அவனை தட்டாமாலை சுற்றித் தரையில் அடிக்க, அட்சன் இறந்தான்.
No comments:
Post a Comment