பசியினாலும், தாகத்தினாலும் களைத்துப் போன வானரங்கள் மயன் நிர்மாணித்திருந்த விருட்சவில்லம் எனும் அழகிய வசந்த மாளிகையை அடைந்தனர். அதற்குள் எப்படி நுழைவது என்றே தெரியவில்லை. எங்கும் நுழைவாயில் காணப்படவில்லை. சுற்றி வந்து தேடிப் பார்த்ததில், ஓரிடத்தில் சுவரில் ஒரு பெரிய துவாரம் தென்பட்டது. மாளிகையின் துவாரத்தை பல பசுமையான கொடிகள் மறைந்து இருந்ததால் உள்ளே நுழைவதே கடினமாக இருந்தது.
"இத்தனை பசுமையான செடி கொடிகள் படர்ந்திருப்பதைப் பார்த்தால் உள்ளே ஏதோ குளம் இருக்கிறது என்று தோன்றுகிறது. உள்ளே சென்று தண்ணீர் குடித்து தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம்" என்று அனுமார் மற்ற வானரங்களிடம் கூற, அனைவரும் உள்ளே நுழைந்தனர். நுழைந்ததும் ஒரே இருட்டாக இருந்தது. சிறிது தூரம் சென்றபின் ஒரு அழகான பிரதேசம் காணப்பட்டது. அங்கு வீடுகள் வெள்ளித் தகடுகளால் வேயப்பட்டு, இரத்தினங்கள் பதிக்கப்பட்டு ஒளி வீசின. நடுநாயகமாக அமைந்திருந்த ஒரு வீட்டினுள் மரவுரி தரித்த ஒரு பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள்.
அவளை அணுகிய அனுமார் அவளை வணங்கியபின், "அம்மணி! நாங்கள் வெகு தொலைவிலிருந்து வந்துள்ளோம். பசியாலும், தாகத்தினாலும் வாடுகிறோம். இங்கு அருந்த தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளே வந்து விட்டோம்.
இந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது? இது தேவலோகமா? தபஸ்வினியான நீங்கள் யார்?" என்று கேட்டார். அனுமாரை நோக்கி முறுவலித்த அந்த சந்நியாசினி, "இந்தப் பிரதேசம் தேவலோக சிற்பியான மயன் உருவாக்கியது. பிரம்மாவை நோக்கித் தவம் செய்து பல வரங்களைப் பெற்ற மயன், தனது வரங்களின் மகிமையினால் இந்த அற்புதமான பிரதேசத்தை உருவாக்கினான்.
ஹேமா என்ற மிக அழகிய அப்சரஸ் அவனுடைய மனைவி! அவளுடன் இங்கு உல்லாசமாக வாழ்ந்து வந்த மயன் மீது இந்திரன் பொறாமை கொண்டான். வஜ்ராயுதத்தை மயன் மீது பிரயோகித்து அவனை வீழ்த்தி விட்டான். இப்போது ஹேமா இங்கு தனியாக வாழ்கிறாள். நான் அவளுடைய தோழி. என் பெயர் ஸ்வயம்பிரபா! இப்போது நான்தான் இந்தப் பிரதேசத்தை ஆண்டு வருகிறேன். முதலில் நீங்கள் பசியார உண்ணுங்கள். பிறகு உங்களைப் பற்றி விவரமாகக் கூறுங்கள்" என்றான்.
அவள் தந்த பழங்களை உண்டு, தண்ணீர் அருந்திப் புத்துணர்ச்சி பெற அனைவரும் ஒய்வு எடுத்துக் கொள்ள, அனுமார் தாங்கள் வந்த காரியத்தைப் பற்றி கூறினார். பிறகு, "மிகவும் பசியோடும், தாகத்தோடும் வந்த எங்களுக்கு விருந்தளித்த உங்களுக்கு மிக்க நன்றி! "எங்களுக்கு மேலும் ஓர் உதவி செய்ய வேண்டும். எப்படியோ உள்ளே நுழைந்து விட்டோம். இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியவில்லை. அதற்கு உங்கள் உதவி தேவை!" என்றார்.
"நீங்கள் அனைவரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள். அடுத்த கணம் என்னுடைய சக்தியினால் உங்களை வெளியே கொண்டு சென்று விட்டு விடுகிறேன்" என்று ஸ்வயம்பிரபா சொல்ல, அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர். அடுத்த கணமே அனைவரும் மயன் மாளிகைக்கு வெளியே வந்து விட்டனர்.
பிறகு, வானரங்கள் மேற்குக் கடற்கரையை அணுகின. அடுத்து என்ன செய்வது என அனைவரும் யோசிக்கையில் அங்கதன் மட்டும் உற்சாகமிழந்து காணப்பட்டான். "நண்பர்களே!" என்ற அங்கதன் சுக்ரீவன் சீதா தேவியைக் கண்டு பிடிப்பதற்கு நமக்கு அளித்த காலக்கெடு முடியப் போகிறது. நம்மால் தேவியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
சுக்ரீவனின் கட்டளையை சரிவர நிறைவேற்றாவிட்டால் நமக்கு மரண தண்டனை நிச்சயம். என் சிற்றப்பன் ஈவு இரக்கமற்றவன். எடுத்த காரியத்தில் தோல்வியடைந்து திரும்பிச் சென்று சுக்ரீவன் அளிக்கும் மரண தண்டனையை ஏற்பதைவிட, இங்கேயே நாம் உயிரை விட்டுவிடலாம்" என்றான். "ஏன் வீணாகக் கலவரப்படுகிறாய் அங்கதா? உன் சிற்றப்பன் அத்தனை கொடியவன் அல்ல!" என்று சில வானரங்கள் சமாதானம் கூற, "அவனைப்பற்றி உங்களுக்குத் தெரியாது! பேருக்குத் தான் நான் இளவரசன்!
அதுவும் ராமபிரானின் தயவினால் நான் இளவரசன் ஆனேன். சுக்ரீவனுக்கு என் குடும்பத்தின் மீது ஜென்மப்பகை உண்டு! தோல்வியுடன் திரும்பினால், என்னுடன் சேர்ந்து உங்களையும் கொன்று விடுவான்" என்றான் அங்கதன்.
அதைக் கேட்ட மற்ற வானரங்களுக்கும் திகில் உண்டாகியது. "நீ சொல்வது சரியே! ஒருவேளை சீதா தேவியைக் கண்டு பிடித்திருந்தால், சுக்ரீவன் நம்மை மன்னித்து விடுவான். ஆனால் காலக்கெடுவும் முடிந்து, வந்த காரியமும் முடியவில்லை எனில் நமக்கு மரண தண்டனை நிச்சயம்" என்றன. ஒரு வானரம், "அங்கதன் சொல்வதுதான் சரி! நாம் கிஷ்கிந்தைக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம்.
இங்கேயே இருந்து விடலாம்!" என்று சொல்ல, மற்ற வானரங்கள் ஆமோதித்தன. அவற்றின் உரையாடலைக் கேட்டுக் கொண்டு அது வரை மௌனமாக இருந்த அனுமார் இனியும் பேசாதிருப்பது சரியல்ல என்று நினைத்தார். உடனே அங்கதனை நோக்கி, "அங்கதா? நீ வீணாக கலவரம்அடைந்து மற்றவர்கள் மனத்திலும் பீதியை உண்டாக்குகிறாய். உங்களுடைய பெற்றோர், மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இந்தப் பிரதேசத்திலேயே வசிக்கப் போகிறீர்களா? இது சாத்தியமா? நிதானமாக யோசித்து செயற்படுங்கள்!
நான், ஜாம்பவான், நீலன் ஆகியோர் ஒருபோதும் இங்கே தங்க மாட்டோம். சுக்வனைப் பிரிந்து தனியே இருக்க நினைத்தாலே அது பெருந்தவறு! அப்படியே நீங்கள் கிஷ்கிந்தைக்குத் திரும்பாமல் இங்கேயே தங்கிவிட்டால் மட்டும் சுக்வன் உங்களை சும்மா விட்டு விடுவானா? இல்லை லட்சுமணர்தான் விட்டு வைப்பாரா? அங்கதா! நீ நினைப்பதுபோல் உன் சிற்றப்பன் கொடூரமானவர் அல்ல! அவர் உன்னைப் பாதுகாப்பதாக உன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்துஇருக்கிறார்" என்றார்.
ஆனால் அங்கதன் சமாதானம் அடையவில்லை. "நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என் சிற்றப்பன் ஒரு நயவஞ்சகன். என் தகப்பனாருடன் சேர்ந்து யுத்தம் செய்யச் சென்றவன் என்ன செய்தான் என்று உங்களுக்கே தெரியும். குகையினுள் பகைவனுடன் என் தந்தை சண்டையிட்டுக் கொண்டுஇருக்கும்போது, நயவஞ்சகமாக குகை வாயிலை மூடிவிட்டு, ஊருக்குத் திரும்பி வந்து "அண்ணன் இறந்துவிட்டான்" என்று பொய் சொல்லிவிட்டு தானே ராஜாவானவன்.
அத்தகைய ஆளிடம் நேர்மையையும், இரக்கத்தையும் எதிர்பார்க்க முடியுமா? என்னை ஒழித்துக்கட்ட தகுந்த வாய்ப்பை அவன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். தயவு செய்து என்னை கிஷ்கிந்தைக்கு வரச் சொல்லாதீர்கள். அங்கு சென்றால் சாவு நிச்சயம்! அதனால் நான் இங்கேயே இருக்கப் போகிறேன். என்னை உயிரினும் மேலாக நேசிக்கும் தாயை நினைத்து மட்டுமே வேதனைப்படுகிறேன்.
அனுமாரே! நீங்கள்தான் என் தாயை ஏதாவது சமாதானம் சொல்லித் தேற்ற வேண்டும்!" என்றான். அங்கதனின் பேச்சைக் கேட்ட மற்ற வானரங்கள் உணர்ச்சி வசப்பட்டன. அவை யாவும் அங்கதன் கூறியதையே திரும்பிக் கூறின.
அப்போது அங்கிருந்த உயரமான மலைக் குகையிலிருந்து பயங்கரத் தோற்றங்கொண்ட ஒரு கழுகு வெளிப்பட்டது. அதைப் பார்த்தவுடன் வானரங்கள் பயந்து போய் அலறின. அந்த ராட்சசக் கழுகு வேறு யாருமல்ல, ஜடாயுவின் தம்பி சம்பாதி! ஏராளமான வானரங்களை ஒரு சேரக் கண்ட சம்பாதி. "அடடா! இத்தனை வானரங்களா? நல்ல விருந்துதான் எனக்கு!" என்று கூறி மகிழ்ந்தது.
சம்பாதியைக் கண்ட அங்கதன் முதலில் கலவரப்பட்டாலும், பின்னர் விரக்தியுடன் அனுமாரை நோக்கி, "நான் இங்கேயே உயிரை விட்டு விடலாம் என்று நினைத்தேன்.
அதற்காகவே கடவுள் இந்தக் கழுகை அனுப்பி வைத்துஉள்ளார் போலும்! என்னால் சுக்வனின் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. ராமபிரானுக்கு உதவி செய்யவும் முடியவில்லை. ஜடாயு ராமபிரானுக்கு உதவி செய்ய முயன்று தன் உயிரையே தியாகம் செய்தார்.
நானோ எதற்கும் பயனில்லாமல் இந்தக் கழுகுக்கு இரையாகப் போகிறேன்" என்று அங்கதன் புலம்பினான். ஜடாயுவின் பெயரைக் கேட்டதும் திடுக்கிட்ட சம்பாதி, "என்ன, இது என்ன நான் கேள்விப்படுவது? என் சகோதரன் ஜடாயு உயிர்த்தியாகம் செய்தானா? எப்படி? எப்போது! நண்பனே!
அந்த சம்பவத்தை தயவு செய்து விளக்கமாகக் கூறு! ஐயோ! என்னால் பறக்க முடியவில்லையே! முடிந்தால் பறந்த வந்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருவேன். சூரிய தேவரின் கிரணங்கள் என் சிறகுகளை எரித்து விட்டன. என்னால் பறக்க முடியாது! என்னை நீங்கள் நிற்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!" என்று கெஞ்சியது.
சம்பாதியின் பேச்சை வானரங்கள் நம்பவில்லை. தனக்குப் பறக்க முடியாது என்று சம்பாதி சொல்வது தங்களை ஏமாற்றவோ என்று தோன்றியது. ஆனால் அங்கதன் குன்றின் மீதேறி, குகை வாயிலிலிருந்து சம்பாதியை கைத்தாங்கலாகக் கீழே அழைத்து வந்தான்.
பிறகு அனுமார் நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் சம்பாதிக்கு விளக்கிக் கூறினார். ராமருடைய வனவாசம், சூர்ப்பணகையின் மானபங்கம், ராவணன் சீதையைப் பற்றி அறிந்து கபட சந்நியாசியாக வந்து சீதையைக் கவர்ந்து சென்றது. வழியில் ராவணனைத் தடுத்து நிறுத்தி ஜடாயு அவனுடன் சண்டையிட்டது, அந்த சண்டையில் ஜடாயு உயிர் துறந்தது.
பின்னர் சீதையைத் தேடிஅலைந்த ராமர் சுக்ரீவனை சந்தித்தது, வாலியைக் கொன்று சுக்ரீவனை கிஷ்கிந்தைக்கு ராஜாவாக்கியது, பின்னர் சீதையைத் தேடி வருமாறு சுக்ரீவன் கட்டளையிட்டது, அதன்படி தென்திசை நோக்கி வானரங்களில் ஒரு பகுதி சீதையைத் தேடி வந்தது, ஆகிய நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் விளக்கிக் கூறிய அனுமார் தொடர்ந்து "சீதையை சுக்வன் குறிப்பிட்டக் காலக்கெடுவில் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தோல்வியுடன் திரும்பிச் செல்ல மனமின்றி அங்கதன் கிஷ்கிந்தைக்குத் திரும்பி வர மறுக்கிறான். மற்ற வானரங்களும் அங்கதனைப் போலவே கூறுகின்றன. ஆகையால் நான் அவர்களுக்கு புத்திமதி கூறிக் கொண்டு இருந்தேன். அந்த சமயம் தான் நீங்கள் வெளிப்பட்டீர்கள்" என்றார்.
(தொடரும்)
No comments:
Post a Comment