தன்னுடைய சகோதரனின் மரணத்தைக் கேட்டு கண்ணீர் வடித்தவாறே "ஜடாயுவைக் கொன்ற ராவணனைப் பழி வாங்க என் உள்ளம் துடிக்கிறது. ஆனால் எனக்கு சிறகுகள் இல்லை. ஒரு காலத்தில், விருத்தாசுரனுடன் போரிடச் சென்ற சமயம், நாங்கள் இருவரும் வானில் மிக உயரத்தில் பறந்து செல்லும் போது, சூரிய வெப்பம் தாங்காமல் ஜடாயு மயக்கமடைந்தான்.
அப்போது, அவனை என் சிறகுகளினால் மூடிக் கொண்டு பறந்த போது, சூரிய வெப்பத்தில் என் சிறகுகள் எரிந்து போயின. நான் விந்தியமலையில் அன்று வந்து விழுந்தவன். இன்றுவரை பறக்க முடியாமல் இங்கேயே தங்கி விட்டேன். அதனால் என்னுடைய சகோதரனைப் பற்றிய தகவல் எனக்குத் தெரியாமல் போயிற்று" என்று அழுதது.
உடனே அங்கதன், "நீ ஜடாயுவின் சகோதரன் ஆனால், உனக்கு ராவணனின் இருப்பிடம் கட்டாயம் தெரிந்திருக்கும். அது இங்கிருந்து எத்தனை தூரம்?" என்று கேட்டான். "மகனே! பகவான் ராமருடைய காரியத்திற்கு என்னால் இனி சரத்தினால் உதவி செய்ய இயலாதபடிக் கிழவனாகிவிட்டேன். அதனால், உனக்கு ஆலோசனை மட்டுமே கூற முடியும்.
ராவணன் இருக்குமிடம் லங்கா! இங்கிருந்து அது இருநூறு யோஜனை தூரத்தில் உள்ளது. லங்காத் தீவிலுள்ள லங்காபுரி நகரத்தை விஸ்வகர்மா உருவாக்கினார். லங்காபுரியில் முழுவதும் தங்கமயமான ஒரு சுவர்ண மாளிகையை உருவாக்கி உள்ளார்.
அந்த லங்காபுரியின் மாளிகை அந்தப்புரத்தில் தான் சீதா தேவி வசிக்கிறாள். நீங்கள் உடனே லங்காபுரிக்குச் சென்றால், அங்கு தேவியைக் காண முடியும்" என்றது சம்பாதி. தேவியை ராவணன் தூக்கிச் செல்வதை ஜடாயுவைத் தவிர வேறு யாராவது பார்த்தார்களா என்று ஜாம்பவான் கேட்க, அதற்கு சம்பாதி, "என்னால் பறக்க முடியாது என்பதால், தினமும் என் மகன் எனக்காக இங்கு ஆகாரம் கொண்டு வருவான்.
ஆனால் ஒரு நாள் அவன் உரிய நேரத்தில் வராமல், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வந்தான். அதுவும் உணவு ஏதுமின்றி வெறுங்கையுடன் வந்தான். அதற்காகக் கோபங்கொண்டு அவனை நான் கடிந்து கொண்டேன். அப்போது, அவன் தாமதமானதன் காரணத்தை விளக்கினான். மகேந்திர மலையில் அவன் எனக்காக உணவு சேகரித்துக் கொண்டிருந்த போது, கறுமையான சரீரம் கொண்ட ஓர் அசுரன் சூரியனைப் போல் ஜோதிமயமாக மின்னிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.
இருவரையும் கொன்று எனக்கு உணவாகக் கொண்டு வர நினைத்து, என் மகன் வழியை மறைத்து நின்ற போது அவன் மிகவும் பணிவுடன் வழி விடும்படிக் கேட்டானாம். என் மகனும் மௌனமாக வழிவிட, அவன் சென்று விட்டான். சிறிது நேரத்தில் அங்கிருந்த முனிவர்கள் சிலர் என் மகனைப் பார்த்து, "நீ இன்று உயிர் பிழைத்தது அதிசயம்! நீ வழி மறைத்தது யாரைத் தெரியுமா?
சாட்சாத் ராவணன்! அவன் அபகரித்துச் சென்றது ராமருடைய மனைவி சீதா!" என்றனர். ராவணனின் பெயரைக் கேட்ட அதிர்ச்சியில் என் மகன் கல்லாய் சமைந்து போக, என்னைப் பற்றியே மறந்து விட்டான்" என்றது. பிறகு சம்பாதி தனது சகோதரனுடைய அந்திமக் கிரியைகளைக் செய்து முடித்தது. அதன்பின் சம்பாதி மீண்டும் தன்னைப் பற்றி வரலாற்றைத் தொடர்ந்தது. "சூரிய வெப்பத்தினால் என் சிறகுகள் எரிந்து போக, நான் இங்கே விழுந்து கிடந்தேன்.
பல நாள்கள் சுய நினைவின்றி கிடந்தேன். பிறகு ஒரு நாள் சுய நினைவு பெற்றபின் நானிருப்பது விந்திய மலை என்று தெரிந்து கொண்டேன். நான் மயக்கமாகக் கிடந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் நிஷாகர மகரிஷியின் ஆசிரமம் இருந்தது. எனக்கும், என் சகோதரனுக்கும் அவரை முன்னமே தெரியும். மெதுவாகத் தத்தித்தத்திச் சென்று அவருடைய ஆசிரமத்தை அடைந்தேன்.
நீராடி விட்டு வந்த மகரிஷி என்னைப் பார்த்து என் மீது அனுதாபம் கொண்டார். சிறகுகளை இழந்த நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பினேன். என்னைத் தேற்றியவாறே மகரிஷி, "சம்பாதி! கவலைப்படாதே! நீ உன் சிறகுகளைத் திரும்பப் பெறுவாய். எதிர்காலத்தில் தசரதச் சக்கரவர்த்திக்கு இராமன் என்றொரு புதல்வன் பிறப்பான். அவன் தந்தையின் கட்டளைப்படி மகுடத்தைத் துறந்து மனைவியுடன் வனவாசம் செய்வான். அந்த சமயம் இராவணன் அவனுடைய தேவியைக் கவர்ந்து செல்வான்.
தேவியைத் தேடி ஒரு வானரக் கூட்டம் இங்கே வரும். அவர்களிடம் நீ சீதா தேவியின் இருப்பிடத்தைப் பற்றிக் கூறுவாய். அந்தப் புண்ணியச் செயலின் விளைவாக நீ சிறகுகளைத் திரும்பப் பெறுவாய். ஆனால் அது நடக்கப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்று கூறியருளினார்.
நானும் எட்டாயிரம் ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். கடைசியில் ராம காரியத்தில் நானும் பங்கேற்கும் காலம் இன்றுதான் வந்தது. தேவியை மீட்கும் புனிதப்பணியில் என் சகோதரன் தன் உயிரையே தியாகம் செய்தான். ஆனால் என் மகனோ ஒன்றுமே செய்யவில்லை. தேவியின் இருப்பிடத்தைக் கூறும் பாக்கியமாவது எனக்குக் கிடைத்ததே என்று மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் செல்லும் காரியத்தில் உங்களுக்குக் கட்டாயம் வெற்றி கிட்டும்" என்றது. அவ்வாறு சம்பாதி கூறிக் கொண்டு இருக்கும் போதே, அதனுடைய சிறகுகள் முளைக்கத் தொடங்கின. உடனே அது மகிழ்ச்சியுடன், "ஆகா! மகரிஷி கூறியது பலிக்கிறது. என் சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன. அவர் இன்னொன்றும் கூறினார். நான் தரும் தகவல் மூலம் சீதா தேவியை நீங்கள் கண்டு பிடிப்பீர்கள் என்றும், ராவணன் வதம் செய்யப்படுவான் என்றும் கூறினார்" என்றது.
சம்பாதியிடம் விடை பெற்றுக் கொண்ட வானரங்கள் தென்திசை நோக்கிப் புறப்பட்டன. சீதா தேவியின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டதால், அவை மனச் சோர்வு அகன்று மிகுந்த உற்சாகத்துடன் தென்பட்டன. பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் அவை இந்து மகா சமுத்திரத்தை அடைந்தன.
ஆனால் பிரம்மாண்டமான அலைகளுடன் சீறிய சமுத்திரத்தைக் கண்டதும், அவற்றின் உற்சாகம் வடிந்து போனது. அப்போது மற்ற வானரங்களை நோக்கி அங்கதன், "இந்த சமுத்திரத்தில் நம்மால் பயணம் செய்ய முடியாது. இங்கிருந்து ஒரே தாவாகத் தாவி லங்காபுரியை அடைவது என்பது கனவிலும் நடக்காது. ஏனெனில் நூறு யோஜனை தூரம் தாண்டுவது இயலாத ஒன்று. ஆனால் தேவியின் இருப்பிடம் தெரிந்தபின் அவளைப் பார்க்காமல் கிஷ்கிந்தை திரும்பினால் நமக்கு சாவு நிச்சயம்.
அதனால் எப்படியாவது முயற்சி செய்து லங்காபுரியை அடைய வேண்டும். உங்களில் யார் யார் எத்தனை தூரம் தாண்டுவீர்கள்?" என்று கேட்டான். தன்னால் பத்து யோஜனை தாண்ட முடியும் என்று கஜன் கூற, ககட்சன் இருபது யோசனை தாண்டுவேன் என்றான். சரபன் தன்னால் நாற்பது யோசனை முடியும் என்றான். கந்தபாதன், கைந்தன், துவிதி போன்ற வானரங்கள் முறையே தங்களால் ஐம்பது, அறுபது, எழுபது யோசனை தூரம் தாவ முடியும் என்றன. கடைசியாக சுசேஷணன் எண்பது யோசனை தாண்டுவேன் என்றான்.
அப்போது ஜாம்பவான், "நான் வாலிபனாக இருந்த போது நூறு யோஜனை தூரத்தை எளிதாகத் தாண்டி வந்தேன். ஆனால் இப்போது எனக்கு வயதாகிவிட்டதால், தொண்ணூறு யோஜனை தூரம் தாவ முடியும்!" என்றார்.
உடனே அங்கதன், "என்னால் நூறு யோஜனை தூரம் தாவ முடியும். ஆனால் திரும்பி வர சக்தியிருக்காது" என்றான். அதற்கு ஜாம்பவான், "அங்கதா! எங்களில் ஒருவனைத் தான் நீ லங்காபுரிக்கு அனுப்ப வேண்டும். இளவரசனான நீ செல்வது உசிதமல்ல!" என்றார். "நான் செல்வது உசிதமல்ல என்கிறீர்! அப்படியானால் என்னதான் செய்வது? பேசாமல் அனைவரும் சமுத்திரத்தில் விழுந்து உயிரை விட்டு விடலாம்" என்றான் அங்கதன்.
"அடடா! நாம் ஏன் இதைப்பற்றி வீணாக நமக்குள் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்? இந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கவல்ல ஆற்றல் படைத்த ஆள் மௌனமாக உட்கார்ந்திருக்கிறாரே!" என்று சொல்லிக் கொண்டே ஜாம்பவான் ஹனுமார் பக்கம் கையைக் காட்டினார்.
பிறகு ஹனுமாரின் அருகே சென்ற ஜாம்பவான், "இங்கே நாங்கள் எல்லாரும் எப்படி லங்காபுரிக்குச் செல்வது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். நீ பாட்டுக்கு தனியாக ஒன்றுமே தெரியாதவன் போல் உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம்? இந்தக் காரியம் உன்னால்தான் முடியும்! குழந்தையாயிருக்கையில் சூரியனைப் பந்து என்று எண்ணிக் கொண்டு அதைப் பிடிக்கப் பறந்து சென்றவனல்லவா நீ! அத்தகைய உன்னால் லங்காபுரியை அடைய முடியாதெனில் வேறு யாரால் முடியும்? எழுந்து வா! ஒரே தாவாகத் தாவி லங்காபுரிக்குச் செல்" என்றார்.
அவ்வாறு ஜாம்பவான் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கையில், ஹனுமாரின் சரீரம் மிகவும் பெரிதாகத் தொடங்கியது. அதைக் கண்டு வானரங்கள் மிகவும் எக்காளமிட்டன. அவற்றின் கூக்குரல் கேட்டு மேலும் ஹனுமாரின் சரீரம் வளர்ந்து பெரிதாகியது. சிறிது நேரத்திலேயே, மிகப் பெரிய உருவைப் பெற்ற ஹனுமார் உணர்ச்சி வசப்பட்டு, "ஆம்! என்னால் இந்த சமுத்திரத்தைத் தாண்ட முடியும்.
சூரியனுடன் காலையில் கிழக்கு திசையிலிருந்து கிளம்பி, மாலையில் மேற்கு திசையை அடையக் கூடிய வல்லமை பெற்றவன் நான்! நான் கட்டாயம் சீதா தேவியை சந்தித்து, அவருக்கு ஆறுதலும், தைரியமும் கூறித் திரும்பி வருவேன். இராமபிரானுக்கு நற்செய்தியைக் கொண்டு செல்வேன்!" என்று கூறிக் கொண்டே மகேந்திர மலையின் உச்சிக்குச் சென்றார். அங்கிருந்து, ‘ஹே ராம்!' என்று ராமரை நினைத்துக் கொண்டே, அவர் தாவிக் குதிக்க, அவர் தாவிய வேகத்தில் மகேந்திர மலையே குலுங்கியது. -
(கிஷ்கிந்தா காண்டம் முற்றியது)
No comments:
Post a Comment