தண்டகாரண்யம் என்பது மிகவும் பயங்கரமான காடாகும். இராமர் இலட்சுமணனுடனும் சீதையுடனும் இப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். காட்டின் ஆரம்பப் பகுதியில் ரிஷி, முனிவர்களது ஆசிரமங்கள் இருந்தன.
அங்குள்ள ரிஷி, முனிவர்களும் இராமனையும் சீதாபிராட்டியையும் இலட்சுமணனையும் பரிவோடு வரவேற்றார்கள். அவர்கள் "இராமா, நீ காட்டில் இருந்தாலும், நாட்டில் இருந்தாலும் எங்களை ஆளும் அரசனேயாவாய். அரசன் மக்களைத் துன்புறுத்துவோருக்குத் தக்க தண்டனையையே அளிப்பான். எனவே நீதான் எங்களை அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டும்" எனக் கூறினர். மூவரும் அன்றைய இரவுப் பகுதியை அந்தப் பகுதியில் கழித்துவிட்டு மறுநாள் காலை அங்கிருந்து காட்டிற்குள் சென்றனர். அடர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் சூரிய வெளிச்சத்தைத் தரையின் மீது விழாதபடி தடுத்து நின்றன. இருள் அடர்ந்த அப்பகுதியில் பயங்கரமான மிருகங்கள் திரிந்து கொண்டிருந்தன.
இப்படிப்பட்ட பயங்கரமான பகுதியில் செல்லும்போது அவர்களின் வழியை மறித்துக் கொண்டு ஒரு ராட்சசன் வந்து நின்றான். மிகவும் உயரமானவன். அகண்ட பெரிய வாய்கால் போன்ற வயிறு. பார்த்தாலே பயந்து நடுங்கும் தோற்றம். கையிலே நீண்ட ஈட்டியை ஏந்தியபடி மிகவும் பயங்கரமாக காட்சியளித்தான். அந்த ராட்சசன் சடாரெனப் பாய்ந்து சீதையை அலாக்காக தூக்கிக் கொண்டான்.
அதன்பிறகு இராம இலட்சுமணர்களைப் பார்த்து, "உங்களது ஆயுள் இன்றோடு முடிந்து விட்டது. இங்கு ஏன் வந்தீர்கள்? யார் நீங்கள்? பார்த்தால் முனிவர்களைப் போல் இருக்கிறீர்கள். உங்களுக்கு எதற்கு இந்த அழகிய பெண்? நான் இவளை விவாகம் செய்து கொள்கிறேன். உங்களை அப்படியே ஒடித்து விழுங்கிவிடப் போகிறேன்" என்றான்.
அதைக் கேட்டதும் இலட்சுமணனுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. உடனே ஒரு அம்பைத் தன் வில்லில் ஏற்றி "அடே அற்பப் பயலே, யார் நீ? உன்னை ஒரே அடியில் எமலோகத்திற்கு அனுப்புகிறேன் பார்" என்றான்.
அதற்கு அந்த இராட்சசன் பலமாக ஒரு பேய்ச் சிரிப்பு சிரித்து விட்டு "ஆகா! என்னையா கொல்லப் போகிறாய்? நான் யார் தெரியுமா? என் பெயர் விராதன். நான் பிரமனை நோக்கித் தவம் புரிந்து எந்த விதமான ஆயுதத்தாலும் இறவா வரம் பெற்றிருக்கிறேன். எனவே நீங்கள் இருவரும் மூச்சு பேச்சில்லாமல் இந்தப் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் இந்த இடத்தை விட்டு ஓடிப்போய் விடுங்கள்" என்றான்.
அதைக் கேட்ட இராமரின் கண்கள் சிவந்தன. அவர் "அடே பிறரது மனைவியை அபகரிக்கவா பார்க்கிறாய்? உனக்கு அழிவுகாலம் வந்து விட்டது" எனக் கூறிக் கொண்டே கூர்மையான அம்புகளை அந்த அரக்கனின் மீது விடுத்தார்.
அந்த அரக்கனோ ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்து உடலை ஒரு உலுக்கு உலுக்கினான். அவனது உடலில் தைத்த அம்புகளெல்லாம் பழங்கள் உதிர்வதுபோல உதிர்ந்து கீழே விழுந்தன. அவன் தனது ஈட்டியை உயர்த்திக் கொண்டு இராம இலட்சுமணர்களின் மீது பாய்ந்தான். இராமர் தனது ஒரு அம்பினால் அந்த ஈட்டியைத் துண்டு துண்டுகளாக்கினார்.
அது கண்டு விராதன் அவர்களைத் தன் கைகளால் இறுகப் பிடிக்க முயன்றான். ஆனால் இராமரும் இலட்சுமணனும் வாட்களால் அவனது உடலில் பல இடங்களில் காயப்படுத்தினர். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை.
அந்த அரக்கனோ இருவரையும் தனது இரு தோள்களின்மீது ஏற்றிக் கொண்டு அங்கிருந்து நடந்து செல்லலானான். அவனது பிடியில் அகப்பட்டுக் கொண்ட சீதையோ "ஐயோ, ஒரு அரக்கன் எங்களைப் பிடித்துக் கொண்டு போகிறானே. எங்களைக் காப்பாற்றுங்கள்" எனக் கதறினாள். பின்னர் இராட்சசனிடம் அவள் "எங்களை விட்டுவிடு" எனக் கெஞ்சி கதறலானாள்.
அதேசமயம் இராமரும் இலட்சுமணனும் தம் கத்திகளால் சடாரென அந்த இராட்சசனின் இரு புஜங்களையும் வெட்டினார்கள். அப்போது அவன் நிலை குலைந்து கீழே வீழ்ந்தான். உடனே இராமரும் இலட்சுமணனும் இதுதான் நல்ல தருணம் என்று அவனைத் தமது முஷ்டிகளாலும் கால்களாலும் நன்கு குத்தி உதைத்தனர். அவர்கள் குத்திய குத்துக்களால் அவனது உடலின் எலும்புகள் ஒடிந்து நோறுங்கிப் பொடியாகி விட்டன.
இராமர் தனது கால்களால் அவனது மென்னியை நன்கு மிதித்தவாறே இலட்சுமணனிடம் "தம்பி, இவனை இப்படியே ஒரு குழிதோண்டிப் புதைத்து விடலாம்" என்றார். இலட்சுமணனும் ஒரு குழியைத் தோண்டவே இராமரும் இலட்சுமணனும் அவனை அதற்குள் உருட்டினார்கள்.
அந்த அரக்கனோ மரண அலறல் அலறினான். இராமரும் இலட்சுமணனும் பெரிய பெரிய கற்களை உருட்டித்தள்ளி அக்குழியை மூடி மண்ணையும் போட்டனர்.
அதன் பின்னர் சீதையை அழைத்துக் கொண்டு அவர் "நாம் இம்மாதிரி வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டவர்கள்அல்ல. எனவே வேகமாக நடந்து சரபங்க முனிவரது ஆசிரமத்தை அடையலாம்" என்றார்.
மற்றவர்களும் அப்படியே செய்வதாகக் கூறி வேகமாக நடந்து செல்லலாயினர். அவர்கள் அந்த முனிவரது ஆசிரமத்தை அணுகியபோது ஒரு அதிசயக் காட்சியைக் கண்டனர்.
அங்கு அந்தரத்தில் ஒரு தேர் இருந்தது. அது ஒளிவிட்டு மின்னிக் கொண்டிருந்தது. அதில் திடகாத்திரமான குதிரைகள் கட்டப் பட்டிருந்தன. அதில் சூரியனைப் போன்ற ஒரு மகா புருஷன் ஆடை ஆபரணங்களைத் தரித்து அமர்ந்து இருந்தான்.
அவன் மெதுவாக அதிலிருந்து இறங்கி நடந்து சென்றான். அவனோடு அவனைப் போன்ற இன்னும் பலர் வந்திருந்தனர். இராமரும் இலட்சுமணனும் அக்காட்சியைக் கண்டனர். அப்போது இராமர், "தம்பி, வந்திருப்பது இந்திரன் போலிருக்கிறது. நீயும் சீதையும் இங்கேயே இருங்கள். நான் சென்று பார்த்து வருகிறேன்" எனக் கூறி அந்த ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்.
அங்கு வந்தது தேவேந்திரனே! அவன் சரபங்க முனிவரை பிரம்மலோகத்திற்கு அழைத்துப் போகவே தன் தேரைக் கொண்டு வந்திருந்தான். அவன் அந்த மாமுனிவரிடம் "இப்போது இராமர் இங்கு வந்து கொண்டிருக்கிறார். அவரால் ஒரு மகத்தான வேலை நடந்தேற வேண்டியிருக்கிறது. அது முடியும் வரை அவரது கண்ணில் நான் படக்கூடாது" எனக் கூறி அம்முனிவரிடம் விடை பெற்றுக் கொண்டு தன் தேரில் ஏறிக் கொண்டு சென்று விட்டான்.
இதைக் கண்டு இராமர் திரும்பி வந்து சீதையையும் இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு அவர் அந்த ஆசிரமத்திற்குள் சென்றார். அப்போது அம்முனிவர் தீக்குளிப்பிற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். அவரருகே சென்று பணிவோடு இராமர் வணங்கி இந்திரன் வந்தது பற்றிக் கேட்கவே அவரும் "தேவேந்திரன் என்னை பிரம்மலோகத்திற்கு அழைத்துச் செல்லவே வந்தான்.
ஆனால் நீ என்னைக் காண வந்து கொண்டிருந்ததால் அவனை அனுப்பிவிட்டு உனக்காக எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எனது தவச் சக்தியால் அடைந்த பிரம்மலோகத்தையும் மோட்சலோகத்தையும் உனக்கு அளிக்கிறேன்" என்றார்.
அப்போது இராமர் "முனிசிரேஷ்டரே, நான் செய்யும் நல்வினைகளால் அவற்றை நான் அடைய முயல்கிறேன். தற்போது இந்த ஆரண்யத்தில் நாங்கள் வசிக்கத் தக்க இடம் எது என்பதைச் சொல்ல வேண்டும்" எனக் கேட்டார்.
அதற்கு சரபங்க முனிவரும் "இந்த ஆற்றைக் கடந்து சென்றால் நீ சுதீட்சண முனிவரது ஆசிரமத்தை அடைவாய். அவர் நீ வசிக்கத்தக்க இடத்தைக் கூறுவார். இப்போது நான் இந்த பூத உடலை விடுத்துச் செல்கிறேன். அதையும் பார்த்து விட்டுப் போ" எனக் கூறி நேருப்பினுள் பிரவேசித்தார். அவரது பூத உடல் எரிந்து சாம்பலாகியது.
ஆனால் அவர் ஒரு வாலிபனின் அழகிய தோற்றத்தோடு உயரக் கிளம்பச் சென்று கொண்டிருந்தார். அதனை சீதையும் இலட்சுமணனும் இராமரும் ஆச்சரியத்தோடு பார்த்து நின்றனர். அந்த அரிய காட்சியைக் காணவே அங்கு பல முனிவர்கள் கூடி இருந்தனர்.
அவர்கள் இராமரிடம் "பம்பா நதிக் கரையிலும், சித்திரக்கூடத்திலும், மந்தாகினி கரையிலும் இராட்சசர்கள் திரிந்து ரிஷிமுனிவர்களைத் துன்புறுத்தி வருகிறார்கள். அந்த அரக்கர்களையெல்லாம் கொன்று முனிவர்களைக் காக்கவேண்டியது உன் கடமை" என வேண்டிக் கொண்டனர்.
அப்போது இராமர் "நான் நாட்டைவிட்டுக் காட்டிற்கு வந்த போது என் தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நினைத்து வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் மற்றொரு வேலை எனக்காகக் காத்து இருப்பதைக் காண்கிறேன். எனது கடமையை நான் உணர்ந்து கொண்டேன். நான் அவசியம் அரக்கர்களை அடக்கி முனிவர்களின் தவத்திற்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்கிறேன்" என்றார். பின்னர் இராமர் சுதீட்சணரின் ஆசிரமத்திற்குச் சென்றார். அவரோடு வைகானசர் முதலானோர் பின் சென்றனர்.
அவர்கள் பல ஆறுகளைக் கடந்து ஒரு மலையருகேயுள்ள காட்டுப் பகுதியை அடைந்தனர். அங்குதான் சுதீட்சணரின் ஆசிரம் இருந்தது.
இராமர் அவர்முன் சென்று வணங்கி தான் இன்னானெனக் கூறவே அவரும் "இராமா, நீ சித்திரக்கூடம் வந்து சேர்ந்தது முதல் உன்னைப் பற்றிய தகவலை அறிந்து கொண்டு இருக்கிறேன். நான் செய்த தவம் முழுவதையும் உனக்கே அளிக்கிறேன். நீயும் சீதையும் இலட்சுமணனும் எல்லா லோகங்களிலும் சுகத்தை அனுபவியுங்கள்'‘ என்றார்.
அப்போது இராமர் "ஐயனே நான் எனது நல்வினைகளால் இந்த லோகங்களை அடைய முயல்கிறேன். இந்தக் காட்டில் நாங்கள் வசிக்கத்தக்க இடத்தை நீங்கள் தான் கூற வேண்டும். ரிஷிமுனிவர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களை நான் ஒழிக்க விரும்புகிறேன்" என்றார்.
அதுகேட்டு அவர் "நீ ஏன் அரக்கர்களைக் கொல்ல வேண்டும்? அவர்கள் உன்னைத் துன்புறுத்தினார்களா? இல்லையே. மேலும் ஆயுதங்களை நீ வைத்துக் கொண்டு இருந்தாலே அவற்றை உபயோகிக்க உன் கைகள் துடிதுடிக்கும். ஒரு முனிவர் கடுந்தவம் செய்கையில் இந்திரன் அவரது தவத்தைக் கலைக்க முயன்றான்.
அவன் முதலில் ஒரு வீரனின் உருவில் வந்து அவரிடம் ஒரு கத்தியைக் கொடுத்து அதை பத்திரமாக வைத்திருந்து தான் கேட்கும்போது கொடுக்கும்படி வேண்டிச் சென்றான். அவர் அக்கத்தியால் முதலில் பழங்களை நறுக்கினார். பின்னர் சிறிது சிறிதாக ஜீவ ஜந்துக்களைக் கொல்லலானார். இதனால் அவரது தவசக்திபோய் நரகலோகத்தை அடைந்தார். எனவே ஆயுதங்கள் நம்மிடம் இருக்கவே கூடாது" என்றார்.
அப்போது இராமர் "முனிவர்கள் என்னிடம் கேட்டதன் பேரில் அரக்கர்களை அடக்கி அவர்கள் தடையின்றி தவம்புரிய வசதிசெய்து கொடுப்பதாக நான் வாக்களித்து விட்டேன். ஆகையால் நான் அதன்படி நடந்தே ஆக வேண்டும். எனவே அதை நான் காத்தேயாக வேண்டும்" என்றார். (தொடரும்)
No comments:
Post a Comment