Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, 3 February 2014

யுத்த காண்டம் - 5

இராவணனை முற்றுகையிட்ட வானரப் படைகள்



இராவணன் அசோகவனத்தை அடைந்தபோது, சீதை இராமரை நினைத்தவாறே தலை குனிந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவளைச் சுற்றிலும் அரக்கிகள் இருந்தனர். இராவணன் சீதையிடம் “நீ இராமனைப்பற்றி பெருமையாக எண்ணிக் கொண்டிருந்தாயே. இதோ பார். அவனது தலையை என் சேனாதிபதிகளில் ஒருவனான பிரகஸ்தன் வெட்டிக் கொண்டு வந்துவிட்டான். பெருத்த வானர சேனையோடு ஆர்ப்பாட்டத்தோடு வந்த இராமனின் கதியைப் பார்த்தாயா? இப்போதாவது என் சக்தியைத் தெரிந்து கொள். இனிமேல் அந்த இராமனைப் பற்றி எண்ணுவதில் பயனில்லை. இனி நீ என்னை மணந்து கொள்ள வேண்டியதுதான்” எனக் கூறி சிரித்தான்.

மறுவினாடியே ஒரு அரக்கியிடம், “நீ போய் வித்யுத்ஜிவனிடம் இராமனின் தலையை இங்கே எடுத்துவரச் சொல்” என்றான். சற்று நேரத்திற்கெல்லாம் இராவணனின் முன் அவன் ஒரு துண்டிக்கப்பட்ட தலையையும், வில்லையும், சில அம்புகளையும் வைத்து விட்டுப் போனான். அந்தத் தலை இராமருடையதுபோல இருந்தது. சீதை அதைக் கண்டு இராமர் இறந்துவிட்டாரென எண்ணிக் கண்ணீர் வடிக்கலானாள். அவள் தன்னையே நொந்துகொண்டாள். கதறி அழுதாள். தன் தலையும் இராமரது தலையைப் போலத் துண்டித்துவிடும்படி இராவணனிடம் அவள் கெஞ்சிக் கேட்கலானாள்.

இதே சமயம் ஓர் ஆள் அங்கு வந்து பிரகஸ்தன் முதலியவர்கள் தர்பாரில் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறவே, உடனே இராவணன் அந்த இடத்தை விட்டுச் சென்றான். அவன் சென்றதுமே அங்கிருந்த தலையும், வில்லும் அம்புகளும் மாயமாய் மறைந்தன.

அப்போது விபீஷணனின் மனைவியான சரமா சீதையருகே வந்து “இராமர் இலங்கையில் தென் கரையில் இறங்கிவிட்டார். இந்த விஷயம் கேட்டு இராவணன் மந்திரிகளோடு இப்போது ஆலோசனை செய்து கொண்டு இருக்கிறான் . இங்கே நீங்கள் பார்த்தது உங்கள் கணவர் இராமரின் தலையல்ல. இது இராவணனது மாய வேலையாகும். அவன் போனதுமே எல்லாம் மறைந்து விட்டது பார்த்தீர்களா? இவனது இந்த மாயாஜாலத்தை நம்ப வேண்டாம்” என்றாள்.

இராவணனும் தன் படைத்தலைவர்களிடம், “வீரர்களை எல்லாம் ஒன்று திரட்டுங்கள்” என்றான். வீரர்களும் தெருக்களில் ஆரவாரம் செய்தவாறே சென்றனர். அதை சரமா சீதைக்குக் காட்டி “இனிமேல்தான் இராவணன் இராமரோடு போர் புரியப் போகிறான்” எனக் கூறினாள். அப்போதுதான் சீதை இராவணன் தன்னை ஏமாற்ற முயன்றானென நம்பினாள்.

அப்போது சரமா “நான் இப்போதே போய் இராமரைப் பார்த்து நீங்கள் நலமாக இருப்பதாகக் கூறி வருகிறேன். இந்த இராவணனுக்கு அவனது தாயும் அவித்தன் என்ற முதிய மந்திரியும் எவ்வளவோ புத்திமதி கூறினர்.

ஆனால், இராவணனோ தான் உயிரோடு உள்ளவரை உன்னை இராமரிடம் விடமுடியாது எனப் பிடிவாதம் பிடிக்கிறான். இது அவனுக்கு அழிவையே தேடிக் கொடுக்கப் போகிறது” என்றாள். இதே சமயம் வானர வீரர்களின் கூச்சலும், சத்தமும் காதைத் துளைத்தன. அதைக் கேட்டே அரக்கர்கள் நடுநடுங்கலாயினர். இராவணனின் தர்பாரிலுள்ளோரும் அதைக் கேட்டு பீதியுற்றனர்.

அப்போது இராவணன் “வானர சேனை நம் இலங்கைக் கரையில் இறங்கிவிட்டது. இதைக் கண்டு பலர் பயப்படுவதையும் நான் காண்கிறேன். ஏன் இப்படி அநாவசியமாக பீதி அடைய வேண்டும்?” என்றான்.

அப்போது இராவணனின் தாயாருக்கு நெருங்கிய உறவினனான மால்யவந்தன் என்பவன் “அரசே, நம்மை விட பலம் குறைவானவன் உடன் போர் புரிவதும், நம்மைவிட பலம் பொருந்தியவனுடன் சமாதானமாகப் போவதுமே ராஜநீதி ஆகும். நம் பக்கம் அநீதி உள்ளது. நாம் வலிமை குறைந்தவர்கள். எனவே, இராமரோடு சமாதானம் பேசி போரைத் தவிர்ப்பதே நல்லது. சீதையை இராமரிடம் ஒப்படைத்துவிட்டால் ஒரு தொல்லையும் இல்லை. வானரங்களோ, கரடிகளோ, மனிதர்களோ நம் அரக்கர்களை அழிக்க மாட்டார்கள். நாமும் நலமாக இருப்போம்” என்றான்.

அது கேட்டு இராவணன் “நானா வலிமையற்றவன்? என் அரக்கர் படைக்கு முன் இந்தக் குரங்குப் படை நிற்க முடியுமா? கடலைக் கடந்து வந்துவிட்டது ஒரு பெரிய காரியமா? இராமனுக்கு பயந்து நான் சீதையைக் கொண்டுபோய் ஒப்படைக்க மாட்டேன். பலமிருந்தால் இராமன் என்னைக் கொல்லட்டும். சீதையை மீட்கட்டும்” என்றான். இதைக்கேட்டு மால்யவந்தன் மௌனமாக இருந்தான். இராவணன் இலங்கையைப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்யலானான்.

தெற்கு வாசலில் மகோதரனையும், மகாபார்சுவனையும் காவலுக்கு நியமித்தான். மேற்கு வாசலுக்கு இந்திரஜித்தையும், வடக்கு வாசலுக்கு சுகனையும், சாரணனையும், கிழக்கு வாசலுக்கு பிரகஸ்தனையும் காவல் புரிய ஏற்பாடு செய்தான். விரூபாட்சன் என்பவன் நகரினுள் காவல் புரியலானான்.

இலங்கை நகரப் பாதுகாப்பைப் பற்றிய விவரங்களை விபீஷணனோடு வந்த அரக்கர்கள் நால்வரும் பறவை உருவில் போய்க் கண்டு வந்து விபீஷணனிடம் கூறினர். விபீஷணனும் இந்த விவரங்களை எல்லாம் இராமரிடம் கூறினான். இராமரும் இலங்கைக்குள் எப்படி நுழைவதெனத் திட்டமிட சுக்கிரீவன், அனுமார், ஜாம்பவந்தன், அங்கதன் முதலியவர்களோடு கலந்து ஆலோசிக்கலானார்.

-தொடரும்

No comments:

Post a Comment